குஜராத் மாநிலத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி 34 அடி உயரத்துடன் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த ’மனிதநேய விளக்கு’ குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியால் ஏற்றிவைக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’ என்ற விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், அம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் விழாவில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கை அகமதாபாத் நகரில் குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி நேற்றுமாலை ஏற்றிவைத்தார்.
ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகத்தால் செய்யப்பட்ட இந்த விளக்கின் அடிப்பாகம் 15.8 அடி விட்டம் கொண்டதாகும். உலகின் மிகப்பெரிய விளக்கு என்று கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ள இந்த விளக்கு சுமார் ஓராண்டு காலமாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
அகமதாபாத் நகரில் உள்ள ஜி.எம்.டி.சி. திடலில் நேற்றுமாலை நடைபெற்ற நவராத்திரி தொடக்கவிழாவில் குஜராத் மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சுமார் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற கர்பா மற்றும் டான்டியா நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கிய உணவு வகைகளை சுவைப்பதற்கென்று 25 சிறப்பு உணவகங்களும் இங்கு திறக்கப்பட்டுள்ளது.
வரும் 10-ம் தேதிவரை நடைபெறும் நவராத்திரி விழாவில் 3 லட்சம் வெளிநாட்டினர் உள்பட சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரி கணபத் சின்ஹ் வாசவா குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக குஜராத் மாநிலத்தில் வரும் 7 முதல் 22 தேதிவரை உலக கபடிப்போட்டியும் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal