சோமாலியாவின் தலைநகர் மொகாதிஷுவில் 2019 டிசம்பர் 28 இடம்பெற்ற பெரிய ட்ரக் குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 79 பேர் கொல்லப்பட்டதுடன் 149 பேர் காயமடைந்தனர்.
இந்த கொடூரச்சம்பவம் அந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் புத்துயிர்ப்பு பெற்றிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.
2011 ஆம் ஆண்டில் சர்வதேச படைகளினால் மொகாதிஷுவில் இருந்து விரட்டப்பட்ட அல் – ஷாபாப் என்ற அல் – கயெடாவுடன் தொடர்புடைய பயங்கரவாத இயக்கமே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது.
அண்மைய கடந்த காலத்தில் பல தற்கொலைக்குணடுத் தாக்குதல்களை நடத்திய அந்த இயக்கம் சோமாலியாவின் சில பகுதிகளை இன்னமும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
2017 ஆம் ஆண்டில் மொகாதிஷுவில் குறைந்தது 600 பேரைப் பலியெடுத்த ட்ரக் குண்டுத்தாக்குதலே சோமாலியாவில் இடம்பெற்ற மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதலாகும். அதையும் ஷாபாப் இயக்கமே நடத்தியது என்று குற்றஞ்சாட்டப்படுகின்ற போதிலும் அந்த இயக்கம் ஒருபோதுமே உரிமை கோரியதில்லை.
கடந்த வருட ஆரம்பத்தில் கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஹோட்டல் தொகுதியொன்றின் மீது ஷாபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரத்தைய தாக்குதல் மொகாதிஷுவில் ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு இரு வாரங்களில் இடம்பெற்றிருக்கிறது.
அண்மைய வருடங்களில் ஷாபாப்புக்கும் சோமாலியாவில் உள்ள ஏனைய தீவிரவாதிகளுக்கும் எதிராக விமானத்தாக்குதலகளை அமெரிக்கா படிப்படியாக தீவிரப்படுத்திவந்திருக்கின்ற போதிலும், தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய தாக்குதல்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சோமாலிய மத்திய அரசாங்கத்தின் தகுதியின்மையையும் இயலாமையையும் அம்பலப்படுத்தியிருப்பது மாத்திரமல்ல,அந்த நாட்டில் உறுதியான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு முயற்சியும் பயன்தரப்போவதில்லை என்ற செய்தியை அரசாங்கத்தின் பிராந்திய மற்றும் சர்வதேச ஆதரவு நாடுகளுக்கு சொல்வதாகவும் அமைந்திருக்கிறது.
சர்வாதிகாரி முஹம்மத் சையாத் பாரே 1991 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்த பிறகு சோமாலியா உறுதியான நாடாக விளங்கியது அரிது. வேறுபட்ட குலத்தவர்களும் திரட்டல் படைக்குழுக்களும் செல்வாக்கிற்காகவும் அதிகாரத்துக்காகவும் போட்டிபோட்ட நிலையில் நாடு திரும்பத்திரும்ப உள்நாட்டுப்போரில் சிக்கித்தவித்தது.
சர்வதேச மனிதாபிமான மனற்றும் அமைதிகாக்கும் பணிகளின் ஒரு அங்கமாக 1992 ஆம் ஆண்டில் அமெரிக்கா அதன் துருப்புக்களை சோமாலியாவுக்கு அனுப்பியது. ஆனால், 18 அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்றையடுத்து 1994 ஆம் ஆண்டில் அந்த நாட்டில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திருப்பியழைத்துக்கொண்டது.
சோமாலியாவில் நிலவிய அராஜகத்தின் விளைவாகவே ஷாபாப் இயக்கம் வளர்ந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் அது தனது செல்வாக்கை விரைவாக விரிவுபடுத்தியது. அமெரிக்க மற்றும் ஆபிரிக்க ஒன்றிய துருப்புகள் தலையீடு செய்து வெளியேற்றும் வரை மொகாதிஷையும் கூட ஷாபாப் கைப்பற்றி அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அதற்கு பிறகு சர்வதேச ஆதரவுடனான சோமாலிய மத்திய அரசாங்கத்தின் மீதும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மீதும் அந்த இயக்கம் கெரில்லா தாக்குதல்களையும் பயங்கரவாததாக்குதல்களையும் நடத்திவந்திருக்கிறது.
நாட்டை உறுதிப்பாடான நிலைக்கு கொண்டுவந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான போரைப் பொறுப்பேற்கக்கூடிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே அடிப்படையான திட்டமாக இருந்தது. ஆனால், சோமாலிய அரசாங்கம் ஊழல் நிறைந்தது என்றும் தகுதியற்றது என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அது உட்பூசல்களினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குழப்பநிலையையும் சட்டம் ஒழுங்கற்ற நிலையையும் ஷாபாப் தனக்கு அனுகூலமாகப் பயன்படுத்திய அதவேளை, இஸ்லாமிய அரசின் ஒரு பிரிவு உட்பட மற்றைய தீவிரவாதக்குழுக்கள் வளர்ச்சிகண்டுவந்தன.
சோமாலியாவின் பாதுகாப்பை பெரும்பாலும் ஆபிரிக்க ஒன்றியமே கவனிக்கிறது. நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பை சோமாலிய அரசாங்கத்திடம் கையளிக்கத் தயாராயிருப்பதாக ஒன்றியம் கூறுகிறது.
சர்வதேச துருப்புக்கள் வெளியேறினால், சோமாலிய அரசாங்கம் உறுதியானதாக இருக்கமுடியுமா என்பது சந்தேகம் என்கிற அளவுக்கு பாதுகாப்பு நிலைவரம் சஞ்சலமானதாக இருக்கிறது.பாகாப்பு சரிவை நோக்கிச்செல்வதை தடுத்துநிறுத்தவேண்டுமானால், முதலில் அரசாங்கம் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது.
ஷாபாப் இயக்கம் சோமாலிய அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல, ஆபிரிக்க பிராந்தியம் முழுவதற்குமே அச்சுறுத்தலை தோற்றுவித்திருக்கும் நிலையில் அரசாங்கத்தை ஆபிரிக்க ஒன்றியம் தொடர்ந்து ஆதரிக்கவேண்டும்.
( த இந்து )
Eelamurasu Australia Online News Portal