திருமலை மாணவர் ஐவர் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 13 படையினரும் குற்றமற்றவர்கள், குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லையென்ற கோதாவில் கடந்த 2019 ஜுலை மாதம் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. திருமலை பிரதான நீதவான் இத்தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு ஜுலையில் வழங்கியிருந்தார்.
பீனல் கோட்டின் 154 மற்றும் 153 ஆம் பிரிவுகளின் கீழ் இவ்வழக்கினை தொடர்ந்து நடத்துவதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குறித்த சந்தேக நபர்களை குற்றமற்றவர்களென நீதவான் விடுதலை செய்துள்ளார். (3.7.2019)
2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகில் வைத்து ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மனோகரன் ரஜிகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோஹிதராஜா ரொஹான், தங்கத்துரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களுமே ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
இறந்தவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த மாணவர்கள். கொலைகள் மலிந்து போன காலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டு சுதந்திரமாக காற்று வாங்கிக் கொண்டிருந்த அப்பாவி மாணவர்கள் ஐவர் அன்று கொல்லப்பட்டார்கள்.
இலங்கையில் கடும் சீற்றத்துடன் பேசப்பட்டு வந்த குற்றவியல் நீதிமுறையின் சகல அநீதிகளும் எதிரானதென விமர்சிக்கப்படுகிறபோதிலும் குறைந்தது இந்த வழக்கிலாவது கொலையாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டார்கள் என்று நம்பப்பட்டபோதும் சகல சந்தேக நபர்களும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லையென்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை உலகப் பழிப்புக்குரியதாக இருக்கிறது என்று நீதித்துறையின்பால் பழிசுமத்தும் அளவுக்கு பேசுபொருளாக்கப்பட்டு விட்டது.
மக்கள் மறந்தும் மறவாததுமாக மங்கிப் போய்விட்ட இப்படுகொலை தொடர்பில் நடந்த சம்பவம் தொடர்பில் இரைமீட்டிப் பார்க்க வேண்டிய பல விடயங்களும் செய்திகளும் உள்ளன. யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தியார் பார்த்துக்கொண்டிருக்கும் சந்தியில் காற்று வாங்கவும் கூடி கதைத்து பொழுது போக்கவும் உரையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்கள். குண்டுகளை வீசி எறிந்தார்கள். பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியிருந்த 5 மாணவர்கள் பதைக்கப் பதைக்கப் பலியெடுக்கப்பட்டார்கள்.
மாவட்டத்தில் பிரபல்யம் பெற்றுவிளங்கும் இந்துக் கல்லூரியில் பயின்று 2005–2006 கல்வியாண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர் களும் அவர்களின் உற்ற நண்பன் ஒருவனுமாக ஐவர் பலி கொள்ளப் பட்டார்கள்.
வன்னியார் வீதியைச் சேர்ந்த தங்கத்துரை சிவானந்தா, புனித மரியாள் வீதி மனோகரன் ரஜீகர், வித்தியாலயம் வீதி சண்முகராஜா கஜேந்திரன், சிவன் வீதி லோஹிதராஜா ரொஹான் மற்றும் போ.ஹேமச்சந்திரன் ஆகிய ஐவருமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.
2006 ஆம் ஆண்டு திருகோணமலையைப் பொறுத்தவரை ஓர் அபத்தம் நிறைந்த ஆண்டாகவே பார்க்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் படுகொலை முயற்சி காரணமாக சம்பூர் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டு சம்பூர் மக்களின் இடம்பெயர்வு ஜுலையில் மாவிலாறு யுத்தம் தொடக்கப்பட்டு போராளிகளுக்கும் படையினருக்கும் கடும்போர் நடைபெற்றமை. 1.8.2006 திருகோணமலை கடற்படைத் தளத்தின் மீது தாக்குதல். 2.8.2006 மூதூர் அண்டிய பகுதிகளில் முஸ்லிம் மக்கள் இடம்பெயர்வு. 23 க்கும் மேற்பட்ட அகதி முகாம்கள் அமைக்கப்பட்டமை. 2006 ஜனவரி 24 ஆம் திகதி சுடர்ஒளி நிருபர் எஸ்.சுகிர்தராஜன் உவர்மலை லோவர் வீதியில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதேயாண்டு 4.8.2006 இல் மூதூரில் வைத்துதொண்டர் நிறுவனமான அக்ஷன் பாம் நிறுவன 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதே வருடம் ஏப்ரல் 23 இல் மூன்று தமிழ் இளைஞர்கள் அதேபோன்று ஆகஸ்ட் 2 இல் மூன்று இளைஞர்கள் செப்டெம்பர் 14 மக்ஹெய்சர் விளையாட்டு அரங்குக்கு அருகில் வைத்து அரச அலுவலர் ஒருவர், அன்புவழிபுரம் படுகொலை, மீனவர் படுகொலை, செல்வநாயகபுரம் படுகொலை (27.10.2006). ஆத்திமோட்டைக்கொலை (7.12.2006) என ஏராளமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்த ஆண்டாக 2006 ஆம் ஆண்டு பதியப்பட்டுள்ளது.
5 மாணவர் படுகொலையானது உள்நாட்டளவிலும் சர்வதேச ரீதியாகவும் மனித உரிமையாளர் மத்தியிலும் அதிக கவனத்துக்குரியதாகவும் கண்டனத்துக்குரியதாகவும் மாறியபோதும் அரசாங்கம் இப்படுகொலை தொடர்பில் எவ்வித கவலைப்பாடு கொண்டதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. கண்டு கொள்ளாமலே காலத்தைக் கடத்தியது என்று பலராலும் குற்றம்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயத்தின் காரணமாக நாட்டை விட்டு ஓட வேண்டிய சூழ்நிலை காணப்பட்டது.
இது பற்றி 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நவநீதம்பிள்ளையவர்கள் தனது அறிக்கையில் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் சம்பந்தமான முக்கியமான ஏனைய பரிந்துரைகள் தொடர்பில் சிறிய முன்னேற்றமே காணப்பட்டிருப்பது மனித உரிமை பேரவையின் முக்கிய கவலையாக இருக்கிறது. உதாரணமாக 9120 ஆம் இலக்க பரிந்துரையானது 2006 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை குறிப்பாக 2006 இல் திருகோணமலையில் இடம்பெற்ற 5 மாணவர் படுகொலை மற்றும் மூதூரில் இடம்பெற்ற பட்டினிக்கு எதிரான நடவடிக்கை என்னும் பிரான்ஸ் தொண்டர் நிறுவனப் பணியாளர் 17 பேரின் படுகொலை சம்பவங்கள் தொடர்பாக 2006 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் (உடலகம ஆணைக்குழு) அறிக்கையின் பரிந்துரை களை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. திருமலை மாணவர் படுகொலை வழக்கு சாட்சிகள் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என நவநீதம்பிள்ளையவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
2006 ஆம் ஆண்டு மாணவர் படுகொலை சம்பவம் இடம்பெற்றபோதும் 2010 ஆம் ஆண்டு வரை இது தொடர்பில் அக்கறை காட்டாத நிலையே காணப்பட்டது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் பிரகடனம் செய்திருந்தாலும் மனித உரிமை மீறல் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச வலைப்பின்னலுக்குள் இலங்கை அரசாங்கம் மாட்டிக்கொண்ட சூழ்நிலையில் தான் 2013 ஆம் ஆண்டு இது பற்றிய விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டதன் பேரில் சந்தேகத்தின் பேரில் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் 13 பேர் என அடையாளம் காணப்பட்டபோதும் ஒருவர் மரணித்த காரணத்தினால் பின்வரும் 12 அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டனர்.
ஏ.சரச்சந்திர பெரேரா, ஜி.ஏ.ரோஹித விஜித்த குமார, ஜி.ஆனந்த, எஸ்.பி.ஜெயலால், ஏ.கமல்பிரதீப், ரவில்குமார ரத்நாயக்க, சமிந்த லோஜித உதய மிகிர பண்டார, கே.எம்.கே.சஞ்சீவ, எம்.ஏ.விமல் பண்டார, ஜெயசேகர திஸநாயக்க, ஜெயந்த திஸநாயக்க, எஸ்.இந்திக்க தூஷார ஆகியோரே அந்த பன்னிருவருமாகும்.
இவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டமைக்கான காரணம் 2013 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இவ்விவகாரம் இடம்பெற்றிருந்தமையினால் கைது செய்யப்பட்டிருந் தார்கள். இதேவேளை 2013 பெப்ரவரியில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் படுகொலை செய்யப்பட்ட ரஜிகரின் தந்தை டாக்டர் மனோகரன் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
“எனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இதற்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டுமாயின் சர்வதேச விசாரணை மேற்கொண்டு நீதி வழங்கப்பட வேண்டும். சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐவரும் மாணவர்கள். அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே திட்டமிடப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் அக்கொடூரமான காட்சியை தான் நேரே கண்டதாகவும் அவர் பேரவையில் தெரிவித்திருந்தார். தந்தைக்கு முன் மகன் சுடுபட்டு மூளை சிதறி படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது நாகரிகம் மிக்க மனித குலத்தில் மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமும் கொடூரமும் நிறைந்த சம்பவமாகும்.
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாகவுள்ள காந்தி சிலைக்கருகில் மாலைபட்ட வேளை 7 மாணவர்கள் ஒன்றுகூடி கதைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பச்சைநிற முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்படி மாணவர்கள் மீது கைக்குண்டுகளை வீசி விட்டு ஓடிவிட்டார்கள். அக்குண்டுகள் தெய்வாதீனமாக தெறித்து அவர்கள் இருந்த இடத்தைவிட்டு விலகிவிட்டது.
இந்த திடீர் தாக்குதல் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவர்கள் செய்வது அறியாது திகைத்துப்போய் நின்ற நிலையில் மறுமுனையிலிருந்து திடீரென ஓடி வந்த ஆயுத தாரிகள் அம்மாணவர்களை சுற்றி வளைத்து வியூகம் இட்டுள்ளனர். ஏழு மாணவர்களையும் ஆயுத தாரிகள் தனித்தனியாக பிரித்தெடுத்து ஒவ்வொருவரையும் நடுரோட்டில் குப்புறப்படுக்க வைத்து சுடுவதற்கு ஆயத்தப்படுத்திய வேளை ரஜிகர் என்ற மாணவன் தனது தந்தையுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு தாம் ஆயுததாரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட அவலத்தை தெரிவித்துள்ளான். அச்செய்தி கேட்டு அருகிலுள்ள வீதியில் குடியிருக்கும் தந்தை சம்பவ இடத்துக்கு ஓடி வந்துள்ளார். ஓடி வந்து பார்த்தபோது தந்தைக்கு முன்னாலேயே மகன் சுடப்பட்டு மூளைசிதறி செத்தான் என வாக்கு மூலம் வழங்கப்பட்டிருந்தது.
7 மாணவர்கள் சம்பவ இடத்தில் கூடியிருந்தபோதும் இரு மாணவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தபோது அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மேற்படி இரு மாணவர்களும் தெய்வாதீனமாக ஓடித்தப்பிவிட்டார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக 2006 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உடலகம விசாரணை ஆணைக் குழுவை நியமித்தார். ஆனால் அவ்விசாரணை பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பாக முடிவடைந்து விட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார்கள். பாதுகாப்பு இல்லையென இருந்த நிலையிலும் அவர்களால் சாட்சியம் அளிக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவினால் 2006–2007 காலப்பகுதியில் விசாரிக்கப்பட்டு வந்தபோதும் அரசாங்கமோ குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவதற்கு ஒருபோதும் தயாராகவிருக்கவில்லை. அதே காலப்பகுதியில் குறித்த படுகொலைச் சம்பவம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினாலும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் உடலகம ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்டவை குறித்து தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமை திகைப்பூட்டும் அச்சம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது என முன்னாள் மனித உரிமையாளர் நவநீதம்பிள்ளையவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நவநீதம்பிள்ளையால் சுட்டிக்காட்டப்பட்ட உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையானது சுமார் 8 வருடங்களுக்குப் பின் காலதாமதமாக 20.10.2015 ஆம் திகதியன்று பாராளுமன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இவ்வறிக்கையில் குறிப்பிட்டவாறு குற்றம் இழைக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லையென்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஏலவே குறிப்பிட்டதுபோல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் அழுத்தம் ஆகியவை காரணமாக 12 விஷேட அதிரடிப்படையினர் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு திருமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 2013 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக 31 சாட்சியாளர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பெரும்பான்மையானோர் பயத்தின் காரணமாக வெளிநாடு சென்று விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே 2013 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் 3 ஆம் திகதி வழங்கப்பட்டு, 12 படையினரும் குற்றமற்றவர்கள் என திருமலை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக அதிரடிப் படையினருக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் மரணமடைந்த ஒரு படை வீரர் உட்பட 13 படை வீரர்களும் சகல குற்றங்களிலுமிருந்தும் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதுபோன்ற தீர்ப்பை குமாரபுரம் படுகொலை வழக்கிலும் நீதிமன்றம் வழங்கியிருந்தமை நீதியின்பால் நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய விடயமாகும்.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி மூதூர் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த குமாரபுரம் என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த 26 அப்பாவி பொதுமக்கள் பதைக்கப்பதைக்க படுகொலை செய்யப்பட்ட 24 ஆவது நினைவேந்தல் நாள் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி இடம்பெற வுள்ளது. 26 அப்பாவிகள் கொடுங்கோலுக்கு இரையாக்கப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்ட 26 பேரில் 13 பேர் பிள்ளைகள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள், அப்பா, பேத்தி, பேரன் என குடும்ப கொடிகளே படுகொலை செய்யப்பட்டார்கள்.
மேற்படி படுகொலை வழக்கு திருகோணமலை நீதிமன்றிலிருந்து அனுராதபுரம் மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சம்பவங்களை நேரில் கண்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், தொடர்புடையவர்கள் என்ற வகையிலும் பொலிஸ் அதிகாரிகள், விஷேட வைத்திய நிபுணர்கள், அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் 108 சாட்சியாளர்கள் விசாரிக்கப்பட்டு 7 பேர் கொண்ட ஜுரி சபை நியமிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஆனி மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 2019 ஜுலை 27 ஆம் திகதிவரை விசாரணைகள் இடம்பெற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட ஆறு படைவீரர்களும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வழங்கிய நீதிபதியவர்கள் வழக்கில் சாட்சியாளர்களால் பிரதிவாதி கூண்டிலிருக்கும் பிரதிவாதிகள் அடையாளம் காணப்படாமையை மட்டும் மையப்படுத்தி அவர்களுக்கு மரண தண்டனை வழங்க யாருக்கும் உரிமையில்லையென ஜுரி சபையினர் ஏகமனதாக தீர்மானித்ததற்கு ஏற்ப பிரதிவாதிகள் நிரபராதிகள் எனக் காணப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்தகையதொரு தீர்ப்பே திருமலை 5 மாணவர்கள் படுகொலையிலும் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதியின்பால் வெறுப்பையே உண்டுபண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தீர்ப்பு தொடர்பில் மீண்டும் மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கையை சட்டமா அதிபர் காரியாலயம் விடுத்திருப் பதாக தெரிவிக்கப்படுகிறது. 5 மாணவர் படுகொலை தொடர்பில் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்பு சபை மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் பயனுடையவையாக இருக்கவேண்டுமானால் நீதியில் சில சீர்திருத்தங்கள் அவசியமென்று கூறியிருக்கிறது.
இக்கொலையுடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களையும் அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக்கூறி திருமலை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்தமையை அடுத்தே இந்த மீள் விசாரணை தீர்மானம் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இக்கொலை தொடர்பான நீதி கிடைப்பதற்கும் முழுமையானதும் கண்டிப்பானதும் பயனுறுதியுடையதுமான விசாரணைகள் அவசியம் என்பதையும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
– திருமலை நவம்