ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சத்தை மாத வீட்டு வாடகைக்கு செலவு செய்த இந்திய பெண் தூதரை மத்திய அரசு திரும்ப அழைத்தது.
ஆஸ்திரியா நாட்டுக்கான இந்திய தூதராக ரேணு பால் பணியாற்றி வந்தார்.1988-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான இவரது பணிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் ரேணுபால் மீது அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியது, நிதி முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் விசாரணை நடத்தியது.
இதில் ரேணுபால் ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சத்தை மாத வீட்டு வாடகைக்கு செலவு செய்துள்ளார்.
வாட் ரீபண்டுகளை மோசடியாக பெற்று இருப்பதும், அரசு வழங்கிய பல்வேறு அனுமதிகளில் உண்மைகளை மறைத்து தவறாக பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் வெளியுறவு விவகார அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் அரசு இல்லத்தில் கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் விசாரணை நடத்திய அமைச்சகத்தின் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரி தனது அறிக்கையை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் கொடுத்தார்.
இதனால் கடந்த 9-ந்தேதி ரேணுபால் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ரேணுபாலை இந்தியா திரும்பும் படி அமைச்சகம் உத்தரவிட்டது. அவர் ஒரு தூதரின் எந்த நிர்வாகம் அல்லது நிதி அதிகாரங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரேணுபால் ஆஸ்திரியாவில் இருந்து நேற்று மாலை நாடு திரும்பினார்.