தமிழில் தேசிய கீதம் பாடப்படாதென்பது நாட்டில் இன நல்லிணக்கம், ஐக்கியத்தை ஏற்படுத்த தடைக்கல்லாக அமையும்

தமிழில் தேசிய கீதம் பாடப்­ப­ட­மாட்­டாது என்ற பொது நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரின் அறி­வித்தல் அர­சியல் அரங்கில் பெரும் வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் சர்ச்­சை­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் உரு­வாக்கி உள்­ளது.

 

ஒரு ஜன­நா­யக நாட்டின் தேசிய கீதத்தை, அந்த நாட்டின் குடி­மக்­க­ளா­கிய மற்­றுமோர் இனத்­தவர் தமது மொழியில் பாடக்­கூ­டாது. அவ்­வாறு பாடப்­ப­ட­மாட்­டாது. அதற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்று ஓர் அமைச்சர் அறி­வித்­தி­ருப்­பது ஓர் அர­சியல் கேலிக் கூத்­தா­கவே நோக்­கப்­பட வேண்டும்.
ஏனெனில் தேசிய கீதம் என்­பது பொது­வா­னது. நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யது. அனைத்து மக்­களும் சொந்தம் கொண்­டா­டப்­பட வேண்­டி­யது. உரி­மை­யுடன் அதனை நேசித்து, மரி­யாதை செலுத்திச் செயற்­பட வேண்­டி­யதே தேசிய கீத­மாகும்.

அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள், அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருப்­பதன் கார­ண­மாக தேசிய கீதத்தை ஒரு சாரார் தமது மொழியில் பாடக் கூடாது என்று வரை­ய­றுப்­ப­துவும், அதற்குத் தனித்து உரிமை கொண்­டா­டு­வதும் ஏற்­பு­டை­ய­தல்ல. அது தேசி­ய­மா­காது. தேசிய உணர்­வா­கவும் அதனைக் கருத முடி­யாது. மொத்­தத்தில் புனி­த­மாகப் போற்றிப் பாது­காக்­கப்­பட வேண்­டிய தேசிய கீதத்­துக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற அவ­ம­திப்­பா­கவே அதனைக் கருத வேண்டும்.

தேசியம் என்­பது ஒரு நாட்டை முழு­மைப்­ப­டுத்­து­வது, முழு­மை­யாகப் பிர­தி­நிதித்­துவம் செய்­வது. ஒரு தேசத்தை ஒரு­மித்த அளவில் ஒன்­றித்த நிலையில் வெளிப்­ப­டுத்­து­வதும் தேசி­யமே. தேசியம் இல்­லையேல் ஒரு நாடு முழு­மை­யான நாடாக இருக்க முடி­யாது.

தேசி­யமும் தேசிய கீதமும் மக்­க­ளு­டைய இறை­மை­யின் ­பாற்­பட்­டது. மக்­களின் நேர­டி­யான உரித்­துக்கு உரி­யது என்­ப­துடன் ஒரு நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கு அடித்­த­ள­மா­கவும் அது திகழ்­கின்­றது.

அடா­வ­டித்­தனம் ஜன­நா­ய­க­மா­காது

ஒரு நாட்டைத் தமது தாய் நாடாகக் கொண்­டுள்ள அனைத்து மக்­க­ளுக்கும் உரி­ய­தாக தேசி­யமும், தேசிய கீதமும் அமைய வேண்­டி­யது அவ­சியம். அந்தத் தேசி­யத்­தையும், தேசிய கீதத்­தையும் இன ரீதி­யாக – இனக் குழும ரீதி­யாக அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காகப் பிரித்துப் பார்ப்­ப­வர்கள் தமது தேசத்தை நேசிப்­ப­வர்­க­ளாகக் கரு­தப்­ப­ட­மாட்­டார்கள்.

தமது தாய் ­நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசி­ய­வா­திகள் என்று அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது. சுய­ந­லமும், சுய­நல அர­சி­யலும் நில­வு­கின்ற அதி­காரம் படைத்­த­வர்கள் மத்­தியில் தேசி­யமும், தேசிய கீதமும் அவை அவைக்கு உரிய அங்­கீ­கா­ரத்­தையும் அந்­தஸ்­தையும் பெற்­றி­ருக்­க­மாட்­டாது.
குறிப்­பாக அது ஜன­நா­ய­கத்தின் பண்­பையும் ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளையும் அத்­த­கைய ஒரு நிலைமை கொண்­டி­ருக்க மாட்­டாது. கொண்­டி­ருக்க முடி­யாது. ஒட்டு மொத்த அளவில் அது ஜன­நா­ய­கத்­திற்கு முர­ண­ானது. எதேச்­ச­தி­காரப் போக்­கிற்கு – சர்­வா­தி­கா­ரத்­திற்கு அடித்­தளம் இடு­வ­தா­கவே அமையும்.
வர­லாற்று ரீதி­யாக ஒரு நாட்டில் வாழ்­கின்ற ஒரு சாராரை, அவர்­களின் இனக் குழு­மத்தின் அடிப்­ப­டையில் தேசிய கீதத்தைத் தமது மொழியில் பாட முடி­யாது. அவ்­வாறு பாடக்கூடாது என்று உத்­த­ர­வி­டு­வ­தற்கும் நடை­மு­றையில் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கும் எந்த வகை­யிலும் அதி­காரம் கிடை­யாது.
அத்­த­கைய அதி­கா­ரத்தைத் தாங்­களே கையில் எடுத்துக்கொண்டு மற்­று­மொரு சாரார் அதி­கார வலி­மையைப் பயன்­ப­டுத்தி அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தினால், இயல்­பா­கவே  அங்கு இரு நாடுகள் இருக்­கின்­றன என்றே பொருள்­படும்.

அத்­துடன் அந்த நாட்டில் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­து­கின்ற இனக்­கு­ழு­மத்தைச் சேர்ந்த மக்­க­ளுக்கு மட்­டுமே அந்த நாடு உரித்­தா­னது என்ற கசப்­பான உண்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே அது அமையும். பல்­லின மக்­க­ளையும் பல மதங்­களைச் சேர்ந்த மக்­க­ளையும் கொண்ட ஜன­நா­யகப் பண்­பு­டைய நாடு என்ற வரை­வி­லக்­கணம் அங்கு இயல்­பா­கவே இல்­லா­தொ­ழியும்.
ஜன­நா­யகம் என்ற போர்­வையில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள் தங்­க­ளு­டைய மொழியில் மாத்­தி­ரமே தேசிய கீதம் இசைக்­கப்­பட வேண்டும் என்று அடா­வ­டித்­தனம் புரி­வார்கள் என்றால் அது சர்­வா­தி­கா­ரத்தின் வெளிப்­பா­டாகவே அமையும். ஒரு­போதும் அது ஜன­நா­யகப் பண்பைப் பிர­தி­ப­லிப்­ப­தாக அமை­யாது. ஜன­நா­யகப் பண்பை அது கொண்­டி­ருக்­கவும் முடி­யாது.

அர­சியல் நகை­முரண்

இலங்­கையைப் பொறுத்­த­மட்டில், தேசிய கீதம் என்­பது பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்கள் மட்­டுமே உரிமை கொண்­டாடி வந்­துள்­ளார்கள். இலங்­கையின் தேசிய கீதம் அதன் மூல மொழி­யா­கிய சிங்­கள மொழியில் எந்த அள­வுக்கு அழ­கா­கவும், ஆழ­மான பொருள் பொதிந்­த­தா­கவும் காணப்­ப­டு­கின்­றதோ, அதே அளவில் அழ­கா­கவும் ஆழ­மான பொருள் உடை­ய­தா­கவும் தமி­ழிலும் திகழ்­கின்­றது.
இந்த நாட்டின் தேசி­யத்­தையும் தேசிய கீதத்­தையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு சிங்­கள மக்கள் எந்த அள­வுக்குத் தேசியப் பற்றைக் கொண்­டி­ருக்­கின்­றார்­களோ, அதற்கு சற்றும் சளைக்­காத வகையில் அந்தப் பற்­று­ணர்வை சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ்­பேசும் மக்­களும் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அதில் எந்­த­வி­த­மான சந்­தே­கமும் கிடை­யாது. அந்­நியர் இந்த நாட்டை ஆக்­கி­ர­மித்­தி­ருந்தபோது சுதந்­திர வேட்கை கொண்டு சுதே­சிகள் என்ற அடிப்­ப­டையில் அனைத்து இன மக்­க­ளுமே தமது தேசத்தின் மீதான பற்­று­தலை உளப்­பூ­ரர்வ­மாக உன்­ன­த­மான ஒரு நிலையில் வெளிப்­ப­டுத்தி இருந்­தார்கள்.
ஆனால் அந்­நி­ய­ரிடமிருந்து பெற்ற சுதந்­தி­ரத்தைத் தங்­க­ளுக்கு மட்­டுமே உரித்­தா­னது என்ற உணர்வின் அடிப்­ப­டையில் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்கள் செயற்­பட்டு வரு­வது ஒன்றும் புதிய விட­ய­மல்ல. சுதந்­தி­ரத்தின் மீதான அந்த ஆக்­கி­ர­மிப்பு படிப்­ப­டி­யாக வளர்ச்சிப் போக்கில் அதி­க­ரித்து தேசிய கீதத்தைத் தமிழில் பாட முடி­யாது என்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கின்ற நிலை­மையை வந்­த­டைந்­தி­ருக்­கின்­றது.

இலங்­கையை ஒரு­மித்த ஒரு நாடாக, பிள­வு­ப­டாத ஒரு நாடாகப் பேணிப் பாது­காத்து முன்­னெ­டுத்துச் செல்ல வேண்டும் என்ற பேரின அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும், பேரின மக்­க­ளி­னதும் அர­சியல் நிலைப்­பாட்­டுக்கு தேசிய கீதத்தை மொழி­வா­ரி­யாகப் பிரித்துப் பேதம் காட்­டு­வது முர­ணான ஒரு நிலைப்­பா­டாகும்.
பிள­வு­ப­டாத நாடாக ஒரே நாடாக இலங்கை திகழ வேண்டும் என்று அர­சியல் ரீதி­யான ஆவலைக் கொண்­டுள்­ள­வர்கள் தேசிய கீதத்தை சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மக்கள் தமது தாய்­மொ­ழியில் பாடக்­கூ­டாது. அவ்­வாறு பாட முடி­யாது என்று தடை­வி­திப்­பது ஓர் அர­சியல் நகை­மு­ர­ணே­யன்றி வேறில்லை.
ஆங்­கி­லே­ய­ரிடமிருந்து சுதந்­திரம் பெற்­றதன் பின்னர் 1949ஆம் ஆண்டு சிங்­க­ளத்­திலும் அதே­போன்று தமி­ழிலும் சுதந்­தி­ர­தின கொண்­டாட்­டத்­தின்­போது தேசிய கீதம் பாடப்­பட்­ட­தாக வர­லாற்றுப் பதி­வுகள் கூறு­கின்­றன. அதற்குப் பின்னர் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லேயே சுதந்­திர தினத்­தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­கத்தின் அதி­கார நிலைப்­பாடு என்ன?

இரண்டு தேசிய கட்­சி­களும்  இணைந்து அமைத்த நல்­லாட்­சியின் பின்னர், 2019 இன் ஜனா­தி­பதி தேர்­தலில் இன­வா­தத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி ஆட்­சியைக் கைப்­பற்­றி­யுள்ள ஜனா­தி­பதி கோத்­த­பாய தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பொது­நிர்­வாக அமைச்சர் 2020ஆம் ஆண்டின் சுதந்­திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­ப­ட­மாட்­டாது என்ற அறி­வித்­தலை வெளி­யிட்­டுள்ளார். இது பொது­நிர்­வாக அமைச்சர் என்ற வகையில் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளிப்­ப­டுத்­தப்­பட்ட ஓர் அறி­வித்­த­லாகும்.
இது அமைச்சு மட்­டத்தில் 2020ஆம் ஆண்டின் சுதந்­திர தினக் கொண்­டாட்டம் தொடர்­பி­லான கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்­க­மைய இந்த அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டது என்­பது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­யது. இந்த விடயம் வெறு­மனே ஓர் அர­சியல் ரீதி­யான பிர­சார கருத்­தா­கவோ அல்­லது அர­சியல் ரீதி­யா­ன­தொரு கருத்­தா­கவோ ஏதேனும் உரை­யொன்றில் வெளிப்­பட்­ட­தல்ல. அமைச்சு ரீதி­யான அதி­கா­ர­பூர்­வ­மான அறி­வித்­த­லாகும்.

இது ஓர் அர­சியல் நகை­மு­ர­ணாக ஒரு வகையில் காணப்­ப­டு­கின்ற அதே­வேளை இன­வாத எதேச்­ச­தி­கார ஆட்சிப் போக்கின் மிக மிக ஆபத்­தான நிலை­மையின் ஓர் அறி­கு­றி­யா­கவே இந்த அறி­வித்தல் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த அறி­வித்­தலின் தீவிரத் தன்­மையை, ஓர் அர­சாங்­கத்தின் இன­ரீ­தி­யான ஒரு நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­கின்ற தன்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த போதிலும், அது குறித்த உண்­மை­யான அதி­கா­ர­பூர்வ நிலைப்­பாடு என்ன என்­பதை அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்தி இருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

மாறாக இந்த அறி­வித்தல் காட்­டுத்­தீயைப் போன்று நாட்டில் குறிப்­பாக தேசிய சிறு­பான்மை இன மக்கள் மத்­தியில் பேர­திர்ச்­சி­யையும் அர­சியல் ரீதி­யா­னதோர் அச்ச நிலை­மை­யையும் ஏற்­ப­டுத்தி – அதன் விளை­வாக பல்­வேறு தரப்­பி­னரும் கண்­ட­னங்­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்த பின்பே அத்­த­கைய முடிவு எதுவும் அரச மட்­டத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற அறி­வித்தல் வெளி­யா­கி­யது.
அந்த அறி­வித்­த­லும்­கூட அர­சியல் கருத்­துக்­க­ளா­கவே வெளி­யாகி உள்­ளன. இந்த விட­யத்தில் அர­சாங்­கத்தின் அதி­கா­ர­பூர்வ நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­கின்ற அறி­வித்­த­லாக அல்­லது விளக்க அறி­வித்­த­லாக வெளி­யா­க­வில்லை. இந்த விட­யத்தில் அர­சாங்­கம் மௌனம் சாதித்­தி­ருக்­கின்­றது. பொது நிர்­வாக அமைச்சின் தீர்­மா­னத்தை அர­சாங்கம் அங்­கீ­காரம் அளித்­தி­ருக்­கின்­றதோ, அதுதான் அதன் நிலைப்­பாடோ என்ற ஐயப்­பாட்டை இது ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மறை­முக நிகழ்ச்சி நிரல்

புரா­தன மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்து தமிழ் மக்கள் குறிப்­பாக வடக்­கையும் கிழக்­கையும் அத்­துடன் வேறு பிர­தே­சங்­க­ளையும் தமது தாயகப் பிர­தே­ச­மாகக் கொண்­டி­ருந்த போதிலும், தமிழ் மக்­களை இந்த நாட்டின் பூர்­வீகக் குடி­க­ளாக பேரின அர­சி­யல்­வா­திகள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அந்த வர­லாற்று உண்­மையை அவர்கள் மறைத்து இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கா­கவே பல்­வேறு உத்­தி­க­ளையும் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வந்­துள்­ளார்கள். தமிழ் மக்­களின் தாயகப் பிர­தே­சங்­களைக் கப­ளீ­கரம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன.

தமிழர் தாய­கத்தில் சிங்­க­ளத்­தையும் பௌத்­தத்­தையும் ஊடு­ருவச் செய்து அதனைப் படிப்­ப­டி­யாக அரித்து இல்­லாமல் செய்­வ­தற்­கா­கவே மகா­வலி அபி­வி­ருத்தித் திட்டம், சிங்­களக் குடி­யேற்றத் திட்டம், பௌத்த மதத்தின் புரா­தன சின்­னங்­களைத் தமிழர் பிர­தே­சங்­களில் பேணி பாது­காக்­கின்ற திட்டம், அவற்றைப் புன­ர­மைக்­கின்ற நட­வ­டிக்­கைகள் என்­பன போன்ற பல்­வேறு நட­வ­டிக்­கை­களை பேரின அர­சி­யல்­வா­தி­களும் ஆட்­சி­யா­ளர்­களும் காலத்­துக்குக் காலம் பல்­வேறு வடி­வங்­களில் முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

இது சிங்­கள பௌத்த தேசி­யத்தின் விரி­வாக்கச் செயற்­பா­டாக, அதையொட்­டிய பலம் வாய்ந்த மறை­முக நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இரா­ணு­வத்­தினர் நிலைகொண்­டுள்ள பிர­தே­சங்­களில் புத்தர் சிலை­களை நிறுவி வணங்­கு­வ­தா­கவும், பின்னர் அங்கு பௌத்த துற­வி­களைக் குடி­யே­றச்­செய்து அந்த இடங்­களில் பௌத்த விகா­ரை­களை அமைப்­பதும் இந்த நிகழ்ச்சி நிரலின் ஒழுங்­கி­லேயே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வாறு புத்தர் சிலை­களை நிறு­வு­கின்ற இடங்­க­ளிலும், புதிய பௌத்த விகா­ரை­களை நிர்­ம­ணிக்கும் இடங்­க­ளிலும் அவற்­றுக்­கான பெயர்ப்­ப­ல­கை­களில் அல்­லது படி­கக்­கற்­களில் புரா­தன விகாரை என்று பெய­ரி­டு­வ­தையும் அதி­காரம் வாய்ந்­த­வர்கள் வழக்­க­மாகக் கொண்­டுள்­ளார்கள். அந்த இடங்கள் மிகப் பழை­மை­யா­னவை, புரா­தன காலந்­தொட்டு அவைகள் இருந்து வந்­துள்­ளன என்று வாதி­டு­வ­தற்கு ஏது­வாக இத்­த­கைய பெயர் சூட்டல் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.
மிகவும் பழைமை வாய்ந்த இந்து மத வழி­பாட்டு இடங்­களை ஆக்­கி­ர­மித்து, அவற்றை தொல்­பொருள் திணைக்­க­ளத்­திற்கு உரிய இடங்கள் என பிர­க­ட­னப்­ப­டுத்தி, அந்தத் திணைக்­க­ளத்தின் ஊடாக பௌத்த மதச் சின்­னங்­க­ளையும் வணக்கத் தலங்­க­ளையும் உரு­வாக்­கு­கின்ற நட­வ­டிக்­கை­க­ளையும் அரச தரப்­பினர் பகி­ரங்­க­மாக மேற்­கொண்டு வரு­வது ஆட்­சி­யா­ளர்­களின் இந்தக் கபடத் தன்மையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.

முல்­லைத்­தீவு நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­காரம், திருகோ­ண­மலை கன்­னியா பிள்­ளையார் கோவில் விவ­காரம் என்­பன இதற்­கு­ரிய நிதர்­ச­ன­மான சான்று பகர்­கின்ற சம்­ப­வங்க­ளாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

கறுப்பு தினம்

சிறு­பான்மை தேசிய இன­மா­கிய தமிழ் மக்கள் மீதும் தமிழ் இனத்தின் மீதும் பேரி­ன­வா­திகள் மேற்­கொண்­டுள்ள ஆக்­கி­ர­மிப்பு மற்றும் அடக்­கு­முறை நட­வ­டிக்­கை­களில் ஒரு முக்­கிய அம்­ச­மா­கவே தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடி­யாது என்ற நிலைப்­பாட்டை பேரி­ன­வா­திகள் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

நாடு ஆங்­கி­லே­ய­ரிடமிருந்து சுதந்­திரம் பெற்­றதன் பின்னர் 1949ஆம் ஆண்டின் பின்னர் பல வரு­டங்­க­ளாக சுதந்­திர தினத்­தன்று தமிழில் தேசிய கீதம் பாட அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­பது மிகவும் கசப்­பா­னதோர் உண்­மை­யாகும். இது அப்­பட்­ட­மான இன­ரீ­தி­யான அடக்­கு­மு­றையே அன்றி வெறொன்­று­மில்லை.
சுதே­சி­க­ளான சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் இந்த நாட்டின் பரம்­பரைக் குடிமக்­க­ளாக வாழ்ந்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதை நாட்டை ஆக்­கி­ர­மித்­தி­ருந்த ஆங்­கி­லேயர் வழங்­கிய சுதந்­தி­ரத்தின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அதே­வேளை சுதே­சி­க­ளா­கிய சிங்­க­ள­வர்­களும் தமிழ்­பேசும் மக்­களும் சுதந்­திரம் அடைந்­துள்­ளார்கள் என்ற யதார்த்­தத்தை – நிலைப்­பாட்டைத் தங்­க­ளுக்­கி­டையில் பகிர்ந்து கொள்­வ­தற்குப் பேரி­ன­வா­திகள் அனு­ம­திக்­க­வில்லை.

இந்த சுதந்­திர மறுப்பு நிலைப்­பாடு கார­ண­மா­கவே தமிழ் மக்கள் தமது அர­சியல் உரி­மைக்­கான தமது சாத்­வீகப் போராட்­டத்தின் போது பல வரு­டங்­க­ளாக இலங்­கையின் சுதந்­திர தினத்தைக் கரி­நா­ளாகக் கருதி அன்­றைய தினம் தமது பிர­தே­சங்­களில் கறுப்பு கொடி­களைப் பறக்­க­விட்­டி­ருந்­தார்கள்.
அர­சாங்கம் தனது நிர்­வாகப் பொறி­மு­றை­களின் ஊடாக சுதந்­திர தினத்தைத் தேசிய கொண்­டாட்ட நாளாக அறி­வித்து கொண்­டா­டி­ய­போது தமிழ் மக்கள் அந்த நாளைக் கறுப்பு தின­மாக, துக்க தின­மாக அனுஷ்­டித்து வந்­துள்­ளார்கள். இதனால் சுதந்­திர தினத்­தன்று கறுப்புக் கொடி கட்­டி­ய­வர்­க­ளையும் கறுப்பு கொடிகள் பறக்­க­வி­டப்­பட்ட இடங்­களைச் சூழ்ந்­தி­ருந்த தமிழ் மக்­களும் ஆயு­தப்­ப­டை­க­ளினால் அச்­சு­றுத்­தப்­பட்­டார்கள். பலர் கைது செய்­யப்­பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டார்கள்.

இவ்வாறு கரிய வரலாற்று பின்புலத்தைக் கொண்டுள்ள சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டால் என்ன பாடப்படாவிட்டால் என்ன என்றதோர் அரசியல் ரீதியான விரக்தி நிலைமைக்கும் தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.

தமிழில் அழகாக தேசிய கீதம் வடிவமைக்கப்பட்டு பாடசாலைகளில் முன்னர் பாடப்பட்டிருந்த போதிலும் தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மையானவர்களுக்கு தேசிய கீதம் மனதில் படியவில்லை. மனப்பாடமாகவில்லை.

பொது நிகழ்வுகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது, உளப்பூர்வமாக அதனை ஏற்று உணர்வுடன் அதனை அங்கீகரித்து மரியாதை செலுத்துகின்ற மன உணர்வுகள் அவர்களிடம் காணப்படவில்லை. சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதும், தேசிய கீதத்தை அரசியலாக்கி அதனை ஆக்கிரமிப்பின் ஓர் அடையாளமாகத் தமிழ் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் கையாள்வதுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

இத்தகைய ஒரு நிலையிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வந்த மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் முற்றுப்புள்ளியிட முற்பட்டிருப்பது நிலைமைகளை மேலும் மோசமாக்குவதற்கே வழிவகுக்கும். சுதந்திர தினத்தின் மீதும் தேசிய கீதத்தின் மீதும் தமிழ் மக்கள் மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக அவற்றைப் புறக்கணிப்பதற்கே அது வழிவகுக்கும்.

இது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பல இனங்கள் இணைந்து வாழ்வதற்கும், அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு மிகப் பெரிய தடைக்கல்லாகவே அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
பி.மாணிக்கவாசகம்