ராஜகிரிய பகுதியில் 2016ஆம் ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய விபத்து ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சில நாட்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் கைது செய்யப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதற்குத் தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, நீதிமன்ற பிடியாணையும் இருக்கவில்லை. கைதுக்காக முன்வைக்கப்பட்ட காரணமும் மிகவும் பலவீனமானது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்து அது. அந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவுமில்லை. சம்பிக்க ரணவக்கவின் வாகனம், நேரடியாக மோதவும் இல்லை.
ஏற்கனவே நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தப்பட்டு முடிக்கப்பட்ட வழக்கு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாகவே, கிண்டியெடுக்கப்பட்டது. சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னரே தெரிவித்திருந்தால் தலைமறைவாகியிருப்பார் என்று அவரது முன்னாள் சகா உதய கம்மன்பில கூறியிருந்தார். அவ்வாறு ஓடி ஒளிவதற்கு அவர் ஒன்றும் கொலைக் குற்றவாளியல்ல.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் புதிய அரசாங்கத்துக்கு கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. முன்னைய ஆட்சியாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசாங்கத்தில் உள்ளவர்களோ இதனை அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும், பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பன சுதந்திரமாகவே செயற்படுகின்றன என்றும் கூறுகின்றனர்.
அரசியல் பழிவாங்கல் நோக்குடன் செயற்படும் அரசாங்கம், அதனை ஒப்புக்கொள்ளும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது தான்.
சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன போன்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்ற அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் கோத்தாபய ராஜபக் ஷவைத் தோற்கடிக்க முயன்றமை மட்டும் தான் காரணம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த பகை அல்லது பழியுணர்வு அதற்கும் அப்பாற்பட்டதாகவே தெரிகிறது.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட சம்பிக்க ரணவக்க, செய்தியாளர்களிடம் பேசிய போது, 2004ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமிக்கவும், 2005இல் ஜனாதிபதி வேட்பாளராக அவரை நிறுத்தவும் காரணமாக இருந்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்திருக்கிறார்.
இதன் போது அவர் வெளியிட்ட தகவல்கள் முக்கியமானவை.
2004ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவிக்கு லக் ஷ்மன் கதிர்காமரை நியமிக்கத் திட்டமிட்டிருந்தார் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
அதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு வெளியிட்டது. ஜாதிக ஹெல உறுமய தனித்துப் போட்டியிட்டு, 9 பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஹெல உறுமயவின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது என்ற நிலை இருந்தது.
அதனை வைத்து, பௌத்தர் அல்லாத கதிர்காமரை பிரதமராக நியமிக்கக் கூடாது என்றும், மஹிந்த ராஜபக் ஷவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவும் மகாசங்கமும், ஜனாதிபதி சந்திரிகாவிடம் வலியுறுத்தின.
அப்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிட்ட ஜே.வி.பி 22 ஆசனங்களுடன் பலமான நிலையில் இருந்தது. அதன் ஆதரவும் மஹிந்தவுக்கு இருந்தது. அதன் மூலம் தான் மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி, 2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக நிறுத்த சந்திரிகா விரும்பவில்லை. ஜாதிக ஹெல உறுமயவும், ஜே.வி.பியும் அழுத்தங்களைக் கொடுத்ததால் தான், மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி வேட்பாளரானார்.
அப்போது மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்த யாருமே இப்போது அவருடன் இல்லை, அவருடன் இப்போது இருப்பவர்கள் எல்லாம் பின்னர் வந்து ஒட்டிக் கொண்டவர்கள் தான்.
மஹிந்த ராஜபக் ஷவை பதவியில் அமர்த்துவதற்காக 2004 இலும், 2005இலும், போராடியதற்காக நாட்டு மக்களிடம், மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறியிருக்கிறார் சம்பிக்க ரணவக்க.
சிங்கள பெளத்தர் அல்லாதவர் என்பதற்காக லக் ஷ்மன் கதிர்காமரை பிரதமராக நியமிக்கக்கூடாது என்று கூறியதற்காக சம்பிக்க ரணவக்க வருந்த வில்லை.
மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கியதற்காக, ஜனாதிபதியாக்கியதற்காகவே, அவர் வருந்துகிறார். ஏனென்றால் அதன் விளைவை அவர் இப்போது அனுபவித்திருக்கிறார்.
2004இல் மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகவோ, 2005இல் அவர் ஜனாதிபதியாகவோ தெரிவு செய்யப்படாமல் இருந்திருந்தால், இலங்கையின் அரசியல் சரித்திரம் வேறு மாதிரியானதாக இருந்திருக்கும். ராஜபக் ஷவினர் அரசியலில் கோலோச்சும் நிலை வந்திருக்காது.
ராஜபக் ஷவினரை அரசியலின் உச்சத்துக்கு கொண்டு செல்வதற்குக் காரணமாக இருந்தவர் என்ற போதும், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அரசியல் ரீதியாக வேட்டையாடப்படும் நிலையே காணப்படுகிறது.
மஹிந்த ராஜபக் ஷவை உயரத்துக்கு கொண்டு செல்வதில் மாத்திரமன்றி அவரை கீழே வீழ்த்துவதற்கும் முக்கிய பங்கு வகித்தவர் சம்பிக்க ரணவக்க.
2014இல் ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கு மஹிந்த ராஜபக் ஷ தயாராகிக் கொண்டிருந்த போது, தேர்தல் அறிவிப்பு வெளியாக மூன்று நாட்களுக்கு முன்னதாக மஹிந்த அரசாங்கத்தில் இருந்து விலகினார் சம்பிக்க ரணவக்க.
அதுபோல, மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் ராஜித சேனாரத்ன. மைத்திரிபால சிறிசேனவுடன், மஹிந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறிய முதல் நபர் அவர் தான். அவரும், மறைந்த அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தனவும் தான், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக எதிரணிக்கு சென்றனர்.
சம்பிக்க ரணவக்க பிரிந்து சென்றது, பௌத்த சிங்கள வாக்குகளை மஹிந்த ராஜபக் ஷவிடமிருந்து பிரித்தது. அது மஹிந்தவின் தோல்விக்கு முதல் காரணியாக அமைந்தது என்பதை மறக்க முடியாது.
2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்ட சம்பிக்க ரணவக்கவும், ராஜித சேனாரத்னவும் தான் இப்போது சட்டத்தின் கரங்களால் நசுக்கப்படுகிறார்கள்.
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ, “அரசாங்கத்தை விட்டு விலகிச் சென்றவர்களுக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன். அவர்களைப் பற்றிய ஆவணக் கோப்புகள் என்னிடம் உள்ளன. ஆனாலும் அவற்றை நான் பயன்படுத்தமாட்டேன். நான் அத்தகைய மனிதர் அல்ல ” என்று மறைமுகமாக எச்சரித்திருந்தார்.
பதிலுக்கு சம்பிக்க ரணவக்கவும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பலமுறை எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியிருக்கும் என மிரட்டியிருந்தார்.
“2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன், செய்து கொண்ட சில இணக்கப்பாடுகள் எதிர்காலத்தில் தோண்டியெடுக்கப்பட வேண்டும்.
2006 ஆம் ஆண்டு மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் மூடிய போது, அதற்கெதிராக ஜாதிக ஹெல உறுமய பிக்குகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது ஜாதிக ஹெல உறுமயவின் போராட்டத்தை நிறுத்த மஹிந்த ராஜபக் ஷ அழுத்தம் கொடுத்தார். நாட்டை தான் மட்டும் பாதுகாத்ததாக அவர் உரிமை கோர முடியாது ” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூட, அவர் மஹிந்த ராஜ பக் ஷ 5 ஆயிரம் மில்லியன் ரூபாவை மோசடி செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக, குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மஹிந்த ராஜபக் ஷவினால் மறுக்க முடியுமா என்றும் சவால் விடுத்திருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிக்க காரணமாக இருந்ததற்காகவும் தான் சம்பிக்க ரணவக்க இப்போது பழிவாங்கப்படுகிறார். இது அவர் செய்த செயல்களின் விளைவு தான். அதனை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்க, ஜனாதிபதியாக்க முன்னின்று செயற்பட்டதற்காக அவர் மன்னிப்பு கோருகின்ற நிலை இப்போது உருவாகியிருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ மீது கொண்ட நம்பிக்கையினால் மாத்திரம், சம்பிக்க ரணவக்க போன்றவர்கள், அவரை அப்போது ஆதரித்திருக்கவில்லை.
லக் ஷ்மன் கதிர்காமர் என்ற தமிழர் அல்லது பௌத்தர் அல்லாத ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து விடக்கூடாது அதனைத் தடுத்து விட வேண்டும் என்பதற்காகவே அவரை ஆதரித்தார்கள்.
அதன் விளைவாகத் தான் அவர், சிறைக் கதவுகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்க வேண்டியிருந்தது.
2014இல், மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்துவதற்கு சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள். அதனால் தான் மஹிந்த ராஜபக் ஷவினால் இப்போது ஜனாதிபதியாக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ராஜபக் ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தாங்கள் வீழ்த்தப்பட்டதற்குக் காரணமானவர்களை அவர்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதை, சம்பிக்க, – ராஜிதவைத் துரத்துவதில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
– கார்வண்ணன்