இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் ஜகார்த்தாவில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் நிலையில் இன்று 9 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகமெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தோனேசியாவில் மட்டும் சோகமான புத்தாண்டாகத் தொடங்கியுள்ளது.
ஜகார்த்தா நீரில் வீடுகளும், கார்களும் மூழ்கின. மக்கள் சிறிய ரப்பர் லைஃப் படகுகள் அல்லது டயரின் உள் குழாய்களில் துடுப்பு செலுத்திச் செல்வதை தொலைக்காட்சிகளில் காண முடிகிறது.
வணிக மற்றும் ராணுவ விமானங்களைக் கையாளும் ஹலிம் பெர்தானகுசுமா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பல விமானங்கள் ஜகார்த்தாவின் பிரதான சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டன.
மழை வெள்ளப் பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஜகாத்ர்தா பேரிடர் மேலாண்மை முகமைத் தலைவர் சுபேஜோ கூறியதாவது:
”கீழே இருந்த மின்சார கம்பியைக் கடந்து 16 வயதுச் சிறுவன் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் தாழ் வெப்பநிலை காரணமாக உயிரிழந்தனர்.
அங்கு ஒரு நதி அதன் கரைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து செல்வதால் மழை வெள்ளம் நான்கு மீட்டர் (13 அடி) உயரத்தை எட்டியது. இதனால் ஒரு மாவட்டத்தில் ஒரு வயதான தம்பதியினர் தங்கள் வீட்டிற்குள் சிக்கிக்கொண்டனர். செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழையால் நகரின் புறநகரில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு பேர் பலியாகினர்.
வெள்ள நீர் குறைந்து விடும் என்றுதான் நம்பினோம். ஆனால், கனமழை தொடர்ந்து கொண்டேயிருப்பதால் ஜகார்த்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
சுமார் 30 மில்லியன் மக்கள் வசிக்கும் பெரிய ஜகார்த்தா நகரம் முழுவதும் நீரில் மூழ்கிய நூற்றுக்கணக்கான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில ரயில் பாதைகள் மற்றும் நகரத்தின் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன”.
இவ்வாறு சுபேஜா தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு பணிகள் குறித்து பி.எல்.என் என்ற அரசு நிறுவன அதிகாரி இக்சன் ஆசாத் ஏ.எஃப்.பி.யிடம் கூறுகையில், ”அதிக மின் அதிர்ச்சிகளைத் தவிர்ப்பதற்காக நாங்கள் (பல பகுதிகளில்) மின்சக்தியை மூடிவிட்டோம். மின்சாரம் நிறுத்தப்படுவதால் எத்தனை குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இப்போது மதிப்பிட முடியாது. நாங்கள் தற்போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.
ஜகார்த்தா கவர்னர் அனீஸ் பஸ்வேடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நாங்கள் தொடர்ந்து மக்களை வெளியேற்றி வருகிறோம். மழை வெள்ளப் பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 13,000 பேர் வெளியேற்றப்பட்டனர். மக்களை வெளியேற்றும் பணி இன்னும் தொடர்கிறது. ஜகார்த்தாவின் செயற்கைக்கோள் நகரங்களில் வசிப்பவர்களை மீட்கும் பணி இனி தொடங்கப்பட உள்ளது. ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் அதிகமான வெள்ளத்தை எதிர்பார்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார்.