சிங்கப்பூரின் அரசகரும மொழிகளில் ஒன்றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. தமிழ்மொழி சிங்கப்பூர் பாராளுமன்றத்தில், பாடசாலைகளில் தாய்மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் தமிழுக்கு மிகவும் ஆதரவாக இருப்பதுடன், ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலம், சீனமொழி மற்றும் மலே மொழி ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்டுக்களில் அச்சிடப்படுகிறது. தமிழுக்குரிய அந்த அந்தஸ்தை எந்தத் தடங்கலுமின்றித் தொடர்ந்து பேணுவதில் அரசாங்கம் முழுமையான உறுதியுடன் இருக்கிறது.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் கடந்த ஞாயிறன்று வெளியிட்டுவைத்த ‘தமிழ் சமூகமும், நவீன சிங்கப்பூரின் உருவாக்கமும்’ என்ற நூலில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நேர்காணலொன்றிலேயே அந்நாட்டின் வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புகள் அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த நூலை அந்நாட்டில் வாழும் இந்தியரான ‘ஒன்லைன் வொய்ஸ்’ என்ற இணைய ஊடகசேவையின் ஆசிரியரான சௌந்தரநாயகி வைரவனும், மூத்த சிங்கப்பூர் பத்திரிகையாளரான ஏ.பி.ராமனும் கூட்டாக எழுதியிருக்கிறார்கள்.
‘தமிழ் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடும், அதற்கு வழங்கப்படுகின்ற ஆதரவும் மிகவும் தெளிவானது. மிகுதி தமிழ்ச் சமூகத்தின், குறிப்பாக எமது இளைஞர்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. அவர்கள் தமிழை ஆரத்தழுவி அன்றாட வாழ்வில் பயன்படுத்தி அதனை வாழும் மொழியாக ஆக்கவேண்டும்.
இளந்தலைமுறையினரையும், பரந்துபட்ட தமிழ்ச்சமூகத்தையும் தமிழின் வளர்ச்சியிலும் அதன் கலாசாரத்திலும் தீவிரமாக ஈடுபடுத்துவதற்குத் தமிழ்மொழி உற்சவங்களை ஏற்பாடு செய்வது ஒரு வழியாகும்’ என்று ஈஸ்வரன் நேர்காணலில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நூல் ஆரம்ப நாட்களில் சிங்கப்பூரில் இந்தியர்களின் வருகையை ஆவணப்படுத்துகிறது.
அவ்வாறு வந்த இந்தியர்களில் சிப்பாய்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள், கடன்கொடுப்பவர்கள், சிவில் சேவையாளர்களும் அடங்குவர். காலனித்துவ அரசாங்கம் இந்தியாவில் குற்றவாளியாகக் காணப்படுகின்றவர்களை 1787ஆம் ஆண்டு முதல் சுமாத்திராவிலுள்ள பென்கூலன் பகுதிக்கும், 1990ஆம் ஆண்டிலிருந்து மலேசியத் தீபகற்பத்திலுள்ள பினாங்கிற்கும் அனுப்பிக்கொண்டிருந்தது.
1830களில் சிங்கப்பூரும், மலேசியத்தீபகற்பத்தின் மலாக்கா மற்றும் பினாங் துறைமுக நகரங்களும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் காலனிகளாக மாறின என்று ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ச்சியற்ற தொழிலாளர்களையும், ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களையும் பெறுவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இந்தியா ஒரு பிரதான மூலமாக இருந்தது. இந்தத் தொழிலாளர்கள் ஆரம்ப நாட்களில் சிங்கப்பூரில் உட்கட்டமைப்பு வசதிகளையும், கட்டிடங்களையும் நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டார்கள்.
தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் இயல்பாகவே தங்களது மேலதிகாரிகளின் உத்தரவுகளைப் பணிவாகக் கேட்டுச் செயற்படுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் கல்விப் பின்புலத்தைக் கொண்டிராதவர்களாகவும், தரங்குறைந்த வாழ்க்கை நிலைமைகளின் கீழ் குறைந்தளவு சம்பளத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்தார்களென்றும் நூலில் கூறப்பட்டிருக்கிறது.
காலனித்துவ ஆட்சியாளர்கள் வெளியேறிய பின்னர்தான் சிங்கப்பூர் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டது. தமிழ்ச்சமூகமும் பல்துறைகளில் முன்னேறி சிங்கப்பூரின் சுபீட்சமிகு சமுதாயத்தின் ஓரங்கமாக மாறியது.
நவீன காலத் தமிழ்ச்சமூகத்தினால் சிங்கப்பூருக்குச் செய்யப்பட்ட மிக உயர்ந்த சேவையென்று நோக்குகையில் 1999 செப் டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் 2011 ஆகஸ்ட் 31 ஆம் திகதிவரை சிங்கப்பூரின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய எஸ்.ஆர்.நாதன் என்று பிரபலமாக அறியப்பட்ட செல்லப்பன் நாதனின் சேவையாகும்.
அதேபோன்று ஏனைய இந்தியர்கள் அமைச்சர்களாக, சிரேஷ்ட சிவில் சேவை யாளர்களாக, தனியார்துறையில் வர்த்தகத் தலைவர்களாகவும் சேவையாற்றியிருக்கி றார்கள் என்றும் அந்த நூலில் கூறப்பட்டி ருக்கிறது.