புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், முளைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் மறைக்க இன்னொரு புதிய பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுருங்கச் சொல்லின், பெரிய கோடு – சிறிய கோடு தத்துவம் தான்.
ஒரு விவகாரத்தின் மீது குவிகின்ற மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு, இன்னொரு விவகாரத்தின் மீது அதிக கவனத்தைக் குவிக்க வேண்டும். அது மக்களின் கோபத்திலிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றும்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன், சில அத்தியாவசியப் பொருட்களின் வரிகளைக் குறைத்தும், விலைகளைக் குறைத்தும், மக்களின் அபிமானத்தை வெல்ல முயன்றது.
ஆனாலும், அதையும் மீறி வெள்ளை வேன் குற்றச்சாட்டுகளும், பீதியும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெறத் தொடங்கின.
அதற்கு முக்கிய காரணமாக இருந்தது, சுவிஸ் தூதரகத்தில் விசா உதவியாளராக பணியாற்றும் பெண் அதிகாரி கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தான்.
அந்தக் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிப்பதற்கும், அரசாங்கத்துக்கு எதிரான சதித்திட்டம் என்று நிரூபிப்பதற்கும் எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தினால் சுவிஸ் அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையில் கடுமையான இழுபறி நிலைகள் தோன்றியிருந்தன. எனினும், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்த விவகாரம் குறித்த செய்திகள் ஊடகங்களில் அடங்கிப் போயிருக்கின்றன.
அரசாங்கத் தரப்பில் இருந்தும் சரி, சுவிஸ் தரப்பில் இருந்தும் சரி, அதிகமாக எந்தச் செய்திகளும் வெளியாகவில்லை.
சுவிஸ் அரசாங்கம் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை கொழும்புக்கு அனுப்பி வைத்ததை அடுத்து, இரண்டு தரப்புகளும் இந்த விவகாரத்தை அடக்கி வாசிக்க தீர்மானித்துள்ளன போலும்.
ஏனென்றால், இந்த விவகாரத்தினால் இருதரப்பு உறவுகளும் சீர்குலையும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.
இந்த விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு, சம்பிக்க ரணவக்கவின் கைது அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, பரபரப்பான சூழல் காணப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான நகர்வுகள் தொடங்கப்பட்டன.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் நடந்த வெள்ளை வேன் கடத்தல்கள் குறித்து வெளிப்படுத்துவதற்காக அவர் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றைக் காரணம் காட்டி, கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதனால் ராஜித சேனாரத்னவின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியிருந்த சூழலில் தான், நாசூக்காக அரசாங்கம் ஒரு முடிவை எடுத்திருக்கிறது, அடுத்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடத்தப்படவுள்ள சுதந்திர தின விழாவின் போது, தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என்றும், சிங்களத்தில் மட்டும் தான் பாடப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, மீண்டும் தேசிய கீத விவகாரம் பலரதும் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி அதனை ஒட்டிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன-–ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 2016 ஆம் ஆண்டிலிருந்து, தமிழ் மொழியிலும் சுதந்திர தின விழாக்களின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது.
அந்த முடிவை திடீரென இரத்து செய்யும் முடிவு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கூறியிருக்கின்ற காரணமும் தவறானது.
இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும், ஹிந்தியில் தான் தேசிய கீதம் பாடப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார். அவரது அந்த தகவல் முற்றிலும் தவறானது.
இந்தியாவின் தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால், வங்கமொழியிலேயே (பெங்காலி) எழுதப்பட்டது. இன்னமும் வங்க மொழியில் தான் அது பாடப்பட்டும் வருகிறது.
பெரும்பான்மையினராக ஹிந்தி மொழி பேசுகின்ற மக்கள் இருந்தாலும், சிறுபான்மை மொழியான வங்க மொழியில் எழுதப்பட்ட தேசிய கீதத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது இந்தியா.
இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படும் நிலையில், அங்கு ஒவ்வொரு மொழியிலும் தேசிய கீதத்தை பாட முடியாத நிலை இருக்கலாம். ஆனால் இலங்கையில் தமிழும், சிங்களமும் தான் பெரும்பாலான மக்களின் தாய் மொழியாக உள்ளன.
எனவே, தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதை அனுமதிப்பதால் ஒன்றும் கெட்டு விடப்போவதில்லை. அதனால் நாட்டின் பாதுகாப்புக்கோ, இறைமைக்கோ ஆபத்து வந்து விடாது. ஆனாலும் இனவாதம் அதனைத் தடுக்கிறது.
தேசிய கீத விவகாரத்தில் இந்தியாவை துணைக்கு அழைத்துக் கொள்ளும் தற்போதைய அரசாங்கம், மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் இந்தியாவின் அரை சமஷ்டி முறையைப் பின்பற்றத் தயாராக இல்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயம்.
சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை ஏற்கனவே, வடக்கில் நடைமுறைக்கு வந்து விட்டது. வடமராட்சி கிழக்கில் இராணுவ கட்டளை அதிகாரி பங்கேற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில், தமிழுக்குப் பதிலாக சிங்களத்தில் தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் முடிவு எந்தளவுக்கு வேகமாக வடக்கில் திணிக்கப்படுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. 2016ஆம் ஆண்டு தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, அதற்கு எதிராக தெற்கில் இனவாத கூச்சல்களை எழுப்பியவர்கள் பலர் இப்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களின் கைங்கரியம் தான் இது என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக் கூடாது என்று அரசியலமைப்பிலோ வேறு எந்த ஆவணங்களிலோ கூறப்பட்டிருக்கவில்லை.
இலங்கையின் முதலாவது சுதந்திர தினம் 1949ஆம் ஆண்டு சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்பட்ட போது, தமிழ், சிங்கள மொழிகளில் தான் தேசிய கீதம் பாடப்பட்டது.
அதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்போது அரசாங்கத்தினால் அச்சிடப்பட்ட அழைப்பிதழில் கூட அது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழில் தேசிய கீதம் பாட முடியாது என்றோ அது சட்ட விரோதம், மரபு இல்லை என்றோ யாராலும் கூறமுடியாது. தேசிய கீதத்தை இலங்கை பாடத் தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழில் இசைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.
சிங்கள இனவாதத்தினால் தான், தமிழ் மொழிக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது.
68 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் தேசிய கீதம் இசைக்க ஆரம்பிக்கப்பட்ட போதும், அந்த மரபு நிலைத்து விடாமல் தடுக்கும் நோக்கில், தற்போதைய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்திருக்கிறது.
தமிழ் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளப் போவதாகக் கூறிக் கொண்டே அவர்களிடம் இருந்து விலகிச் செல்வதற்கான வழிகளைத் தான் அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் மக்கள் தனக்கு வாக்களிக்காது போனாலும், எல்லா மக்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என்று பதவியேற்பு உரையில், கூறியிருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ.
அவரது ஆட்சி தான், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுகின்ற வாய்ப்பை மறுத்திருக்கிறது. இந்த மறுப்பு, இலங்கையில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம், உரிமை குறித்த கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது.
எல்லா மக்களும் சமத்துவமாக, சமமான உரிமைகளுடன் வாழுகின்ற நிலையை ஏற்படுத்தப் போவதாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ கொடுத்த வாக்குறுதியை இது கேள்விக்குள்ளாக்குகிறது.
இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்படும் போது பெரும்பாலான தமிழ் மக்களுக்கு அதன் அர்த்தம் புரிவதுமில்லை. அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமில்லை.
தமிழ்மொழியில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்படும் போது, அதற்கு மதிப்பளிக்கும் நிலையை உருவாக்கும் வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பையும் கெடுக்கும் வகையில் தான் அரசாங்கத்தின் முடிவு அமைந்திருக்கிறது,
இப்போது இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கின்ற நிலையில், இதிலிருந்து கவனத்தை திசை திருப்ப இன்னொரு விடயத்தை முன்னிலைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகிக் கொண்டிருப்பார்கள்.
ஏனென்றால், மறதி என்ற நோயைப் பயன்படுத்தி, மக்களின் கவனத்தைப் புது புதுப் பிரச்சினைகளுக்குள் தள்ளுவது தான், எப்போதுமே ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பானது.
– சுபத்ரா