உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது!

மக்களை குணப்படுத்த வேண்டும் என எண்ணிய மருத்துவர் சயத் மிர்வாஸ் ரோஹனியால் உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது.

தாலிபான் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து தப்பி வந்த இந்த இளம் ஆப்கானிய மருத்துவர், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறையில் சிக்கி தனது 32 வயதில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தற்கொலை செய்து கொண்டார்.

ரோஹனி மரணம் தொடர்பான விசாரணை மிகவும் ஆரம்ப கட்டங்களிலேயே உள்ள நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார் இக்குடும்ப வழக்கறிஞரான ஜார்ஜ் நியூஹவுஸ். “தங்கள் மகனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை தெரிந்து கொள்ள நினைக்கிறது அக்குடும்பம்,” என்கிறார் ஜார்ஜ்.

ரோஹனி, ஆஸ்திரேலியாவில் இறந்திருக்கலாம். ஆனால், அவரது மன நல பிரச்னைகள், அதற்கு பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உருவாகியது எனக் கூறுகிறது ரோஹனியின் குடும்பம்.

ஆஸ்திரேலியாவுக்குள் படகு வழியாக வர முயற்சிப்பவர்களை நிராகரிக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆஸ்திரேலிய அரசு, ஆயிரக்கணக்கான அகதிகளை நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியது. அப்படி அனுப்பப்பட்டவர்களில் ஆப்கான் அகதியான ரோஹனியும் ஒருவர்.

2008 முதல் 2014 வரையிலான காலக்கடத்தில், 50,000 பேர் ஆஸ்திரேலியாவை நோக்கிய ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தும் இருக்கின்றனர்.

கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கும் ஆஸ்திரேலிய கொள்கை, படகுகளை நிறுத்தியிருக்கலாம். ஆனால், பல அகதிகளை கடும் மன நல சிக்கல்களுக்கு உள்ளாக்கியுள்ளதாக என்கின்றனர் அகதிகள் நல ஆர்வலர்கள்.

“ரோஹனியின் நிலை, 48 ஆண்டுகால சுகாதார பணியில் நான் கண்ட மோசமான துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு,” என்கிறார் ஓய்வுபெற்ற கல்வியாளரான கப்ரிலே ரோஸ்.

மனுஸ்தீவிலிருந்து 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு கொண்டு வரப்பட்டு சமூக தடுப்பில் வைக்கப்பட்டிருந்த ரோஹனி, கடந்த அக்டோபர் 15ம் தேதி தற்கொலை செய்துகொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.