மூன்றில் இரண்டு சாத்தியமா..?

பாரா­ளு­மன்றத் தேர்தல் என்­பது குறித்த பிர­தே­சத்தின் ஆளு­மை­க­ளையும் ஆட்­சி­யா­ள­னையும் தீர­மா­னிக்கும் வித்­தி­யா­ச­மான செயற்­பா­டாகும். அதிலும் விகி­தா­சார தேர்தல் முறையின் கீழ் பெறப்­படும் பெறு­மா­னங்கள் சற்றும் வித்­தி­யா­ச­மா­ன­தா­கவே வகுக்­கப்­ப­டு­கி­ன்றன. உதா­ர­ண­மாக நான்கு தேர்தல் தொகு­திகள் கொண்ட ஒரு மாவட்­டத்தில் ஒருவர் தேசி­யப்­பட்­டியல் ரீதி­யா­கவும் தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். மாவட்­ட­மொன்றில் மூன்று கட்­சி­க­ளுக்கு மேல் போட்­டி­யி­டு­மாயின் விகி­தா­சார முறையில் தனி­யொரு கட்சி முழு ஆச­னங்­க­ளுக்­கு­ரிய உறுப்­பி­னர்­க­ளையும் தம­தாக்கிக் கொள்­வ­தென்­பது சிக்கல் நிறைந்­ததும் ஒவ்­வாத ஒரு முயற்­சி­யு­மாகும்.

எதிர்­வரும் ஏப்­ரலில் நடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்கும் பொதுத் தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பொது­ஜன பெர­முன பெற்றே தீரும். பெற்றே ஆக­ வேண்­டு­மென்ற நிலையில் அக்­கட்­சி­யினால் பல்­வேறு வெற்­றிக்­கு­ரிய வியூ­கங்கள் வகுக்­கப்­பட்டு வரு­வ­தாகப் பேசப்­ப­டு­கி­றது.

தனிச் சிங்­களப் பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சிப் ­பீடம் ஏறிக்­கொண்ட ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தனது அதிகா­ரத்­தையும் ஆட்சி நிலை­மை­க­ளையும் குறிப்­பிட்ட ஒரு தசாப்த காலத்­துக்­கா­வது இழுத்­துக்­கொண்டு செல்ல வேண்­டு­மாயின் ஒரு­ ப­ல­முள்ள பாரா­ளு­மன்றை தனக்­கேற்­ற­படி அமைக்­க­ வேண்­டிய தேவையும் அவ­ச­ரமும் அவ­ருக்கு இருக்­கி­ற­தென்­பதை எல்­லோ­ருமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும். 19ஆவது திருத்தம் கார­ண­மாக ஜனா­தி­ப­தி­யொ­ருவர் 5 வரு­டங்­களைக் கொண்ட இரு­ ப­ரு­வங்­க­ளுக்கு மேல் இருக்­க­ மு­டி­யாது என்ற திருத்த வரி கார­ண­மா­கவே மேலே ஒரு தசாப்த கால­மெனத் தரப்­பட்­டுள்­ளது. அது மீண்டும் 18 போல் திருத்­தப்­ப­டு­மாயின் வரு­டங்­களைக் கணக்­கிட்டு கூற ­மு­டி­யாது.

மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பாரா­ளு­மன்றில் கொண்டு வரு­வதன் மூலமே ஜனா­தி­ப­தி­­ தன்­னு­டைய அரசு என்ற வார்த்தைப் பிர­யோ­கத்­துக்கு உரித்­து­டை­ய­வ­ரா­கவும் தன்­னு­டைய ஆட்­சி­யொன்றின் மூலமே தனது அதி­கா­ரத்­தையும் ஆளு­மை­யையும் முழு­மை­யாகப் பாவிக்­கக்­கூ­டிய பல­மு­டையவராகவும் நிறை­வேற்று ஜனா­தி­பதியாக செயற்­பட முடியும் என்­பதை யாப்பின் வழி உறு­திப்­ப­டுத்திக் கொள்­ள­மு­டியும் என்­ப­தற்­கான ஒரு கடு­மை­யான முயற்­சியே இந்த மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை என்னும் தாரக மந்­தி­ர­மாகும்.

*நினையாப் பிர­காரம் பாரா­ளு­மன்றம் எதிர்த்­த­ரப்­பி­னரின் ஆட்சி அமைப்­பைக்­கொண்ட ஒரு பாரா­ளு­மன்­ற­மாக அமைந்­து­வி­டு­மாயின் இலங்­கையின் ஆட்சி நிலை­மைகள் மோச­மா­கி­வி­டு­வ­துடன் பாரிய சவால்­களை ஜனா­தி­பதி சந்­திக்­க­ வேண்டி வந்து விடு­மென்­பது வெளிப்­பா­டாகத் தெரி­யப்­படும் உண்மை. உதா­ர­ண­மாக பாரா­ளு ­மன்றத் தேர்­தலில் 113க்கு மேற்­பட்ட ஆச­னங்­களைப் பெற்று ஆட்­சி­ய­மைத்தே தீரு­வோ­மென ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினர் கொக்­க­ரித்து வரு­கின்­றார்கள். அவ்­வா­றாயின் பாரா­ளு­மன்றின்  ஆட்சி அதி­காரம் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­ன­ருக்கு வந்து சேர்ந்­து­விடும். ஆயின் நிலை­மைகள் எவ்­வாறு மாறும்? நிறை­வேற்று அதி­கா­ரத்துக்கும் பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்­துக்கும் இடையே ஏற்­ப­டக்­கூ­டிய முட்டி மோதல் முரண்­பாடு தொடர்பில் நாம் அதி­க­மாக விளக்­கிக்­ கூற வேண்­டிய அவ­சியம் இருக்­காது.

பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறு­வ­தற்­காக ஜன­நா­ய­கத்­துக்கு மாறான செயல்­களைச் செய்­வ­தற்கு பொது­ஜன பெர­மு­ன­வினர் தொடங்கி விட்­டார்கள். அதன் கார­ண­மா­கவே எதிர்த்தரப்­பி­லுள்ள சிறந்த அர­சியல் தலை­வர்­க­ளுக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கத் தொடங்­கி­யி­ருப்­ப­துடன் அர­சியல் தலை­வர்­களை பழி­வாங்கும் நோக்கில் கைது செய்யும் படலமும் வேக­மா­கவும் நுட்­ப­மா­கவும் முடுக்கி விடப்­பட்­டி­ருக்­கி­ற­தென எதிர்த்­ த­ரப்­பினர் கடு­மை­யான விச­னங்­களைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

கடந்த அர­சாங்­கத்தில்  மூத்த அமைச்­ச­ராக மதிக்­கப்­பட்ட மற்றும் செயற்­பட்டு வந்த ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க, கைது செய்­யப்­பட்­டுள்ளார். வாகன விபத்­தொன்­றை அடுத்து தனது அமைச்சர் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி விபத்தை நடத்­திய சார­தியை மாற்றி உண்­மையை மறைத்து சாட்­சி­யங்­களை சோடித்து நீதித்­து­றைக்கு மோசடி செய்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு பின் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். 25,000 ரூபா காசுப் பிணை­யிலும் 5  இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­யிலும் மேற்­படி அமைச்சர் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இக்­கைது தொடர்பில் பழி­வாங்கல் என்ற பின்­னணி இருப்­ப­தாகக் கூறப்­பட்ட அதே­வேளை, கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது மேற்­கொள்­ளப்­பட்ட பிர­சா­ரங்­க­ளின்­போது ஐக்­கிய தேசிய முன்­னணி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் வெற்­றிக்­காக அர்ப்­ப­ணிப்­பு­டனும் ஆவே­ச­மா­கவும் ஈடு­பட்ட ரண­வக்க, எதிர்வரும் பொதுத்­தேர்­த­லின்­போது பெர­மு­னவின் வெற்­றிக்கு இடைஞ்­ச­லா­கி ­வி­டுவார் என்ற உள்­நோக்கம் கரு­தியே 2016ஆம்  ஆண்டு வெலிக்­கடை பொலிஸ் பிரிவில் இடம்­பெற்ற விபத்து  சம்­ப­வத்தை குற்­ற­மாகச் சாட்டி திட்­ட­மிட்ட வகையில் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

மஹிந்த ஆட்சித் தரப்­பி­ன­ருக்கு மாற்­றுக்­ கட்­சி­யி­னரைக் கைது செய்­வது  என்­பது ஒரு புது ­வி­ட­ய­மல்ல. ஏலவே 2010ஆம் ஆண்­டுக்குப் பின் பழி­வாங்கும் நோக்கில் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அந்த வகையில் தானும் கைது செய்­யப்­பட்டு பழி­வாங்­கப்­பட்டேன் என முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா தெரி­வித் ­தி­ருந்தார். புதிய ஆட்­சிக்கு வருவோர் எதிர்த் ­த­ரப்­பி­ன­ரையும் மாற்றுத் தரப்­பி­ன­ரையும் கைது­ செய்தல், பழி­வாங்கல், பத­வி­களைப் பறித்தல் என்­பது அர­சி­யலில் ஒரு புதிய விட­ய­மல்ல. உதா­ர­ண­மாக 2015 ஆம் ஆண்டு ஆட்­சி­ மாற்றம் நிகழ்ந்­த­போது அவர் கைது செய்­யப்­ப­டுவார், இவர் கைது செய்­யப்­ப­டுவார் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது மாத்­தி­ர­மல்ல, அவ்­வா­றான சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றன என்­ப­தற்கு உதா­ர­ண­மாக முன்னாள் பொரு­ளா­தார அமைச்சர் பசில் ராஜபக் ஷ கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்ட சம்­ப­வங்­களும் இடம்­பெற்றுத்தான் இருக்­கின்­றன.

அண்­மைய அர­சியல் மாற்றம் என்­ற­ வ­கையில் ஜனா­தி­பதித் தேர்­தலைத் தொடர்ந்து கைது­ செய்யும் நாடகம் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றது என்­ப­தற்கு இன்­னு­மொரு உதா­ர­ண­மாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரட்­னவை உட­ன­டி­யாகக் கைது செய்­யு­மாறு பிடி­யா­ணை­யொன்றை கொழும்பு மேல­திக நீதிவான் ஆர்.பி. நெலும் தெனிய கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிறப்பித்துள்ளார்.

சர்ச்­சைக்­கு­ரிய, ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் வெள்­ளைவேன் கடத்தல், கொலை, தங்­கக் ­கொள்ளை உள்­ளிட்ட பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய விவ­கா­ரத்தில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் கைது­ செய்ய, நீதிவான் பிடி­யாணை பிறப்­பித்­தி­ருந்தார். வெள்­ளை வான் கடத்தல் தொடர்­பான பிழை­யான தக­வல்­களை வெளி­யிட்டார் என்ற குற்­றச்­சாட்டின் பேரி­லேயே இப்­பி­டி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சட்­டமா அதிபர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­போன்றே இன்­னு­மொரு அதி முக்­கிய அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் விரைவில் கைது செய்­யப்­ப­டுவார். அதற்­கான ஏற்­பா­டுகள் விரை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக இன்­னு­மொரு வதந்தி வேக­மாக அடிப்­பட்டு வரு­கி­றது. இதற்­கான காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுக்கத் தவறிய நபரே இவ்­வாறு கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக அந்த வதந்தி மேலும் தெரி­விக்­கி­றது.

இதில் ஆச்­ச­ரி­யப்­படக் கூடிய விடயம் என்­ன­வெனில் சுடலை ஞானம் பெற்­ற­வர் போல் பிணையில் விடு­த­லை­யாகி வந்து ஊட­கங்­க­ளுக்குச் செய்­தி­ சொன்ன சம்­பிக்க ரண­வக்க, 2004ஆம் ஆண்டு இடம்­பெற்ற பொதுத் தேர்­த­லின்­போது மஹிந்த ராஜபக் ஷவை பிர­தமர் ஆக்­கு­வ­தற்­காக, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புக்கு வெற்­றி யைப் பெற்றுத் தரு­வ­தற்­காக ஜாதிக ஹெல உறு­ம­யவைச் சேர்ந்த 9 தேரர்கள் உழைத்­தார்கள்.

அது போன்றே 2005ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யுடன் இணைந்து  செயற்­பட்டு மஹிந்த ராஜபக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்­கினோம். இத்­த­வ­று­க­ளுக்­காக இப்­பொ­ழுது மக்­க­ளிடம் மன்­னிப்புக் கேட்­கிறேன் என்ற அறிக்­கையை ஹெல உறு­ம­யவின் தலைவர் விடுத்­துள் ளார்.

சம்­பிக்­கவின் இச்­செய்­கையைத் தான் சுடலை ஞானம் என்று கூறு­வது பொருத்­த­மு­டை­ய­தாக இருக்கும். விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டிப்­பதன் மூலம் தமிழ் மக்­களின் நீண்­ட­ கால கோரிக்­கை­களைக்  குழி ­தோண்டிப் புதைத்­து­விட முடியும். தமிழ் மக்­க­ளுக்குப் புதி­ய­தொரு அர­சியல் தீர்வைக் கொண்­டு­வர நினைத்த சந்­தி­ரிகா அம்­மையாரை வீட்­டுக்கு அனுப்­பி­வைக்க வேண்­டு­மென்ற குரோத எண்­ணத்­துடன் அதற்குப் பொருத்­த­மான தலை­மை­யாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பொருத்­த­மு­டைய தலைமை என்­பதை ஹெல உறு­மய ஏற்­றுக்­கொண்­டதன் ஒரு எண்ணப் பாடே, மஹிந்­தவை பிர­தமர் ஆக்­கவும் ஜனா­தி­ப­தி­யாக்­கவும் சம்­பிக்­கவும் அவர் சார்ந்த தேரர்களும் உழைத்­தார்­களே என்­பது உண்­மை­யென்­பது ஒரு புற­மி­ருக்க, சிறு­பான்மை மக்­களின் நேர் விரோத சக்­தி­யாக ஹெல உறு­மய உழைத்­தது என்­பது அதன் அரிச்­சு­வ­டி­களை அறிந்து கொண்­ட­வர்­களால் புரிய முடியும்.

இக்­கைது விவ­கா­ர­மென்­பது நேர­டி­யாக பெரும்­பான்மை சமூ­கத் ­த­லை­வர்­களை நோக்கி பாய்ச்­சப்­ப­டு­வது ஒரு­பு­ற­மி­ருக்க சிறு­பான்மைத் தலை­மைகள் மீதும் இது செலுத்­தப்­ப­ட­லா­மென்ற பயப்­பாடு இப்­பொ­ழுது ஏற்­படத் தொடங்­கி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்னாள் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களும் தொடர்பு கொண்­ட­வர்கள் என்ற சந்­தேக வலை­ வி­ரிப்பின் அடிப்­ப­டையில் முன்னாள் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன்  ஆகி­யோ­ரிடம் சி.ஐ.டி. விசா­ரணை நடத்தி வாக்குமூலம் பெறப்­ப­ட­வுள்­ள­தாக சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­ன­கே­வுக்கு அறி­வித்­துள்­ள­தாக செய்­தி­யொன்று தெரி­விக்­கி­றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களைத் தடுப்­ப­தற்கு அல்­லது அதன் விளை­வு­களைத் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்து சி.ஐ.டி. விசா­ர­ணைக்கு அமைய இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­லா­மெனக் கூறப்­ப­டு­கி­றது. தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் முன்னாள் அமைச்­சர்­க­ளான ரிஷாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம்  ஆகி­யோ­ரிடம் வாக்குமூலம் பெறப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அத்­துடன் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மேலும் பல­ரிடம் வாக்குமூலம் பெறப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அச் செய்தி மேலும் தெரி­விக்­கின்­றது.

மேற்­படி இரு அமைச்­சர்­களும் சிறு­பான்மைத் தரப்­பி­ன­ரான முஸ்லிம் சமூ­கத்தின் முக்­கிய தலை­மை­க­ளாக இருந்து வரு­வ­துடன் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­ற­மொன்­றுக்­கான மூல கர்த்­தாக்­க­ளாக விளங்­கி­ய­வர்கள் என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரியும் உண்மை. ஏலவே மஹிந்த ராஜபக் ஷவின் அமைச்­ச­ர­வையில் சிரேஷ்ட அமைச்­சர்­க­ளாகப் பணி­யாற்­றி­ய­வர்கள்.  அவ்­வாறு உட­னி­ருந்­த­வர்கள் 2015ஆம் ஆண்டின் ஜன­வரி ஆட்சி மாற்­றத்தின் பிர­தான நபர்­க­ளாக விளங்­கி­ய­வர்கள் 2010 ஆம் ஆண்­டுக்குப் பின் குறித்த ஆட்­சிக்­காலப் பகு­தியில் முஸ்லிம் மக்­க­ளுக்கும் இஸ்லாம் மதத்­துக்கும் இழைக்­கப்­பட்ட கொடு­நிலை கார­ண­மாக பல சவால்­க­ளுக்கு ஆளாகி அவஸ்­தைக்கு உள்­ளாக்­கப்­பட்ட நிலையில் தான் தம் சமூ­கத்தைக் காக்க வேண்­டிய நிலையில் ஆட்சி மாற்­றத்­துக்­காக தம்மை ஆளாக்­கிக் ­கொண்­டார்கள் என்­பது சூழ்­நி­லையால் தெரி­விக்­கப்­படும் உண்மை. இதன் கார­ண­மா­கவே 18ஆவது திருத்­தத்­துக்கு உயர்த்­திய கையை 19ஆவது திருத்­தத்­துக்கும் உயர்த்தி உத­வி­னார்கள். வர­லாற்று மாற்­றத்தை அவர்கள் சுய­ தே­வைக்­காக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஒட்­டு­மொத்த தமது சமூ­கத்தின் நன்­மைக்­காக அந்த நிர்ப்­பந்­தத்­துக்கு ஆளாக்­கப்­பட்­டார்கள் என்­பதே உரிய கார­ண­மாக இருக்­கலாம்.

இவ்­வ­கை­யான அகப்­புற சூழ்­நிலை நில­வு­கின்ற நிலையில் பொது­ஜன பெர­முன எதிர்­பார்க்கும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யென்ற இலக்கை அடைய முடி­யுமா என்­பது எழுப்­பப்­படும் கேள்­வி­யாக மாறி­யி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி எதிர்க் ­கட்­சி­க­ளுக்கு எதி­ராக தீவிரம் கொண்ட நட­வ­டிக்­கைகள், சிறு­பான்மைச் சமூ­க­மான தமிழ், முஸ்லிம் சமூ­கத்தை உதா­சீனம் செய்யும் போக்கு பாரம்­ப­ரியக் கட்­சி­யாக இருந்­து­வரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை ஓரம் கட்­டி ­வரும் போக்கு, மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்­தப்­ப­டு­வ­தாக பேசப்­படும் விட­யத்தை ஜனா­தி­பதி கையா­ள­வி­ருக்கும் உத்­திகள் அர­சியல் அதி­காரப் பகிர்­வுக்கு நாட்டில் இட­மில்லை, பொரு­ளா­தார சமத்­து­வத்தின் மூலம் தேசிய நல்­லி­ணக்­கத்தை உண்­டாக்­கி­விட முடி­யு­மென்ற ஜனா­தி­ப­தியின் புதி­ய­ சித்­தாந்தம்.  ஐக்­கிய தேசிய கட்­சியை நோக்கி மாறி­வரும் அனு­தாப அலைகள், கைதிகள் விவ­கா­ரத்­திலும் மனித உரிமைப் பேரவைத் தீர்­மா­னத்தை புறந்­தள்ளும் உதா,­சிப்பு என்ற சூழ்­நிலை வாதத்தைக் கொண்ட ஒரு முடி­வுக்கு வர ­மு­டியும்.

225 உறுப்­பி­னர்­களைக் கொண்ட இலங் கைப் பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யென்­பது 150 ஆச­னங்­களைப் பெறும் ஒரு பகீ­ரதப் பிர­யத்­த­ன­மாகும். 22 தேர்தல் மாவட்­டங்­களில் 196, உறுப்­பி­னர்கள் வாக்கு முறை­யிலும் 29 உறுப்­பி­னர்கள் தேசியப் பட்­டியல் வடி­வி லும் தெரிவு செய்­யப்­பட வேண்டும்.

இதில் வட, கிழக்­கி­லுள்ள எட்டு மாவட்­டங்­க­ளிலும் 29 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­டுவர். இதே­போன்றே மலை­யக மாவட்­டங்­க­ளான நுவ­ரெ­லியா, கண்டி, பதுளை என்­ப­வற்­றுக்கு அப்பால் ஐக்­கிய தேசியக் கட்சி சுதா­க­ரித்­துக்­கொள்ளும் மாவட்­டங்கள் என்றும் சுதந்­திரக் கட்சி செல்­வாக்­குள்ள மாவட்­டங்­க­ளென்றும் பிரித்­துப்­பார்க்க வேண்­டிய தேவை­யி­ருக்­கி­றது.

தேர்தல் வெற்றி என்­பது ஒரே­ வி­த­மான அளவுகோல் கொண்டு தீர்­மா­னிக்கக் கூடிய ஒரு செயல் முறை­யாக எப்­பொ­ழுதும் கொள்ள முடி­யாது. உதா­ர­ண­மாக ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் பொதுத் தேர்தல் முடி­வு­க­ளாக இருக்கும். பொதுத் தேர்தல் முடி­வு­களைப் போலவே  மாகாண சபைத் தேர்தல் முடி­வுகள் அமையும் என்ற கற்­பனை வாய்ப்­பா­டு­களைப் பிர­யோ­கித்து தீர்­மா­னத்­துக்கு வரு­வ­தென்­பது இல­கு­வான காரி­ய­மல்ல.

ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது ஒரு நாட் டின் தேசிய தலை­வரைத் தீர்­மா­னிக்கும் விட­ய­மாகும். வேட்­பா­ளரின் ஆளுமை, அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சியின் செல்­வாக்கு, வாக்கு வங்கி, அவரால் வகுத்துக் கூறப்­படும் பொரு­ளா­தாரக் கொள்கை, வெளி­நாட்டு உறவு, மக்­களின் எதிர்­பார்ப்பு, வேட்­பா­ளரின் முன்­னைய சாதிப்­புகள்… என ஏகப்­பட்ட கார­ணிகள் ஜனா­தி­பதி ஒரு­வரைத் தேர்ந்­தெ­டுப்­பதில் பின்­னணி வகிக்­கின்­றன.

ஆனால் பாரா­ளு­மன்றத் தேர்தல் என்­பது குறித்த பிர­தே­சத்தின் ஆளு­மை­க­ளையும்  ஆட்­சி­யா­ள­னையும்  தீர­்மா­னிக்கும் வித்­தி­யா­ச­மான செயற்­பா­டாகும். அதிலும் விகி­தா­சார தேர்தல் முறையின் கீழ் பெறப்­படும் பெறு­மா­னங்கள் சற்றும் வித்­தி­யா­ச­மா­ன­தா­கவே வகுக்­கப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக நான்கு தேர்தல் தொகு­திகள் கொண்ட ஒரு மாவட்­டத்தில் ஒருவர் தேசி­யப் ­பட்­டியல் ரீதி­யா­கவும் தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். மாவட்­ட­மொன்றில் மூன்று கட்­சி­க­ளுக்கு மேல் போட்­டி­யி­டு­மாயின் விகி­தா­சார முறையில் தனி­யொரு கட்சி முழு ஆச­னங்­க­ளுக்­கு­ரிய உறுப்­பி­னர்­க­ளையும்  தம­தாக்கிக் கொள்­வ­தென்­பது சிக்கல் நிறைந்­ததும் ஒவ்­வாத ஒரு முயற்­சி­யு­மாகும்.

1977ஆம் ஆண்டு இடம்­பெற்ற பொதுத் தேர்­தலின் போது ஜே.ஆர். ஜய­வர்­தனா தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற­ மு­டிந்­த­மைக்­கான காரணம் விகி­தா ­சார முறைமை கொண்டுவரப்­ப­டாத காலத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி 140 ஆச­னங்­களைப் பெற்­றி­ருந்­தது. இதே­வேளை, ஆட்­சி­யி­லி­ருந்த திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான சுதந்­திரக் கட்சி 8 ஆச­னங்­களை மட்­டுமே பெற்று படு­தோல்வி கண்­டி­ருந்­தது. அதன் பின்­னுள்ள எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எந்­த­வொரு ஆட்­சி­யா­ளரும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை தனிக்­கட்­சி­யாக நின்று பரா­ளு­மன்றில் பெற முடி­ய­வில்லை.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின்­போது அர­சி­யலில் ஏற்­பட்ட மாற்றம் கார­ண­மாக இரு தேசியக் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் கைகோர்த்துக் கொண்­டதன் கார­ண­மாக தேசிய அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­பட்­ட­போதும் சிறு­பான்மைக் கட்­சிகள் மறை­மு­க ­மா­கவும் நேர­டி­யா­கவும் ஆளுந்­த­ரப்­புக்கு ஆத­ரவு நல்­கு­கின்­ற­வர்­க­ளா­கவே காணப்­பட்­டார்கள். இதன் கார­ண­மா­கவே 19ஆவது சீர்­தி­ருத்­தத்தை பாரா­ளு­மன்றில் சுல­ப­மாக நிறை­வேற்ற முடிந்­தது.

ஜனா­தி­ப­தி­ய­வர்கள் மார்ச் மாத­ம­ளவில் பாரா­ளு­மன்றைக் கலைத்து ஏப்ரல் இறுதிப் பகு­தியில் பொதுத்­தேர்­தலை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக  செய்­திகள் தெரி­விக்­கின்­றன. தற்­போ­துள்ள இடைக்­கால அமைச்­ச­ர­வை­யா­னது பல­முள்ளதாகவோ நிரந்­தரம் கொண்­ட­தா­கவோ பார்க்­க ­மு­டி­யாத சூழ்­நி­லையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ர­ வ­லுவை பயன்­ப­டுத்­து­வ­தற்கோ அல்­லது செயற்­ப­டுத்­து­வ­தற்கோ முடி­யாத ஒரு சூழ்­நி­லையே காணப்­ப­டு­வ­தாக அனு­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. நாட்டின் தேசியப் பிரச்­சி­னை­களை திசை திருப்பி சர்­வா­தி­கார ஆட்­சியை முன்­னெ­டுக்­க­வே தீவிர அர­சியல் பழி­வாங்­கல்கள் முன­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக ஐக்­கிய தேசிய கட்சி நேர­டி­யா­கவே ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் குற்­றம் ­சாட்டி வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மின்றி சட்­டத்­துக்கு மதிப்­ப­ளிக்கும் நாட்டை உரு­வாக்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்சிப் பீடம் ஏறி­ய­வர்­களால் தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­களைப் பார்க்­கும்­போது சட்டம், நியாயம், நீதி புறக்கணிக்கப்படுவதாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரம சிங்க சாடி வருகிறார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றை  தம்வசப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இம்முயற்சிக்கு சிறுபான்மைக் கட்சிகளான முஸ்லிம் மற்றும் தமிழ்க் கட்சிகளும் ஒத்து ஊதுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ விமர்சனம் செய்து வருகிறார். சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரை  எந்தத் தரப்பினருடனும் ஒட்டவும் முடியாமலும் உதறவும் முடியா மலும் திரிசங்கு நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு நல்கிய காரணத்தினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையென்பது பாரிய சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதும் உண்மையே!

இன்றைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பாராளுமன்றை பல முள்ளதாக ஆக்க வேண்டும். 19ஆவது திருத்தத்தை மறுசீரமைக்க வேண்டும் எந்தவொரு கட்சியினரின் ஆதரவும் இன்றி பாராளுமன்றம் தம் வயப்படுத்தப்பட வேண்டுமென்பதில் கண்ணும் கருத்தும் கொண்டவர்களாகவே காணப்படுகிறார்கள், செயற்பட்டு வருகிறார்கள். இவ்வாறானதொரு நிலை பாராளுமன்றில் உருவாகுமாக இருந்தால் எதிர்க் கட்சியினர் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் அல்லது சிறுபான்மைத் தரப்பினராக இருக்கலாம், மக்கள் விடுதலை முன்னணியினராக இருக்கலாம். இரண்டு பாராளுமன்ற காலத்துக்கு மேல் அடக்கி வாசிக்க வேண்டிய அவல நிலையொன்றே உருவாகும் என்ற கசப்பான உண்மையை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

இதேவேளை, தனியொரு ஆட்சியாளர்களாக நின்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தமதாக்கிக்கொண்டு ஆட்சியை கொண்டு செல்லக்கூடிய சாதிப்பை நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பெற்றுத்தர முடியுமா என்பதும் சந்தேகத்துக்குரிய விடயமே. இன்னும் குறிப்பிட்டுக் கூறுவதானால் இன்றைய ஆளுந் தரப்பினருக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாக்கப்படுமானால் மூன்றில் இரண்டு என்பது கனவாகவே போய்விடலாம்.

(திரு­மலை நவம்)