தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்கிற்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் வெளீயீடும் புவிசார் அரசியல் கைதிகளாய் உள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய ஒரு திறந்த கலந்துரையாடலும் இன்று முற்பகல் 09.30 மணி முதல் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் மூத்த பேராசிரியர் க. சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பூகோளப் போட்டி நடைபெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழருக்காகப் பேரம் பேசும் ஒரேயொரு தரப்பாகவிருந்த நிலையில் முதற்கட்டமாக அந்த அமைப்பை அழிக்க வேண்டும். அந்த அமைப்பை அழிப்பதன் ஊடாக மக்களை அடிபணிய வைத்து அந்த அழிவிற்குப் பின்னாலிருக்கக் கூடிய அரசியல் தலைவர்களை எடுபிடிகளாகப் பாவிப்பதற்கானதொரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்குத் தான் அன்றைய காலகட்டத்தில் காய்கள் நகர்த்தப்பட்டன.
பூகோள அரசியல் தான் இலங்கையில் பல விடயங்களைத் தீர்மானிக்கின்றது. விசேடமாக இனப்பிரச்சினை தொடர்பாக பேசுகின்றவர்கள் பூகோள அரசியலை விளங்கிக் கொள்ளாமல் ஒரு போதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்ற விடயத்தையும் மிகவும் ஆணித்தரமாக மு.திருநாவுக்கரசு தனது நூலில் பதிவு செய்திருப்பதை நான் வரவேற்கின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கிய காலத்திலிருந்து நாங்கள் மேற்கண்ட விடயத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். சுமந்திரனோடு 2010 ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தில் இடம்பெற்ற பகிரங்க விவாதத்தில் சர்வதேச சட்டம் என்ற ஒன்று கிடையாது. சர்வதேச அரசியல் தான் இலங்கையில் நடைபெறும் விடயங்களைத் தீர்மானிக்கிறது என நான் தெளிவாகக் கூறியிருந்தேன்.
சர்வதேச அரசியலை நாங்கள் விளங்கிக் கொள்ளாமலிருந்தால் கிடைக்கிற சந்தர்ப்பங்களை நாங்கள் நழுவ விடுவோம். இந்த மக்களுக்கு நாம் மிகப் பெரிய துரோகத்தைச் செய்து விடுவோம் என்ற விடயத்தை அப்போது தெளிவாக நான் பதிவு செய்திருந்தேன். சிங்கள பெளத்த தேசியவாதம் என்ற விடயத்தை மிகவும் ஆணித்தரமாகவும், தெளிவாகவும் அவர் பதிவு செய்திருக்கிறார். சிங்கள, பெளத்த தேசியவாதத்தையும், அதனுடைய உண்மையான சிந்தனைகளையும், திட்டங்களையும், இலக்குகளையும் நாங்கள் சரிவரப் புரிந்து கொள்ளாவிட்டால் முட்டாள்களாக இந்த மக்களை வழிப்படுத்துவோம். இலங்கைத் தீவை மையப்படுத்திய பூகோள அரசியல் என்றால் என்ன? நாங்கள் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளைப் பற்றிப் பேசுகின்றோம்.
சுமந்திரன் இங்கு அதனைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், மற்றவர்கள் பேசினார்கள். இலங்கைத் தீவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு கேந்திர நிலையத்திலிருக்கிறது. இந்தத் தீவின் முக்கியத்துவம் எதிர்கால உலகத்தில் எந்தத் தரப்பு மிகவும் வலிமையான வல்லரசாக அமையும் என்ற விடயத்தைத் தீர்மானிக்குமளவுக்கு இந்த முக்கியத்துவம் அமைந்துள்ளது. இரண்டாம் உலக மகாயுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் இலங்கைத் தீவைத்து தான் மேற்கு நாடுகள் அனைத்தும் ஆசிய பசுபிக் கடற்படைகளுடைய தளமாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆகவே, இதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அனைத்துத் தரப்புக்களும் மேற்குச் சார்ந்த தரப்புக்களாகவே இருந்து வந்தார்கள். மேற்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
மேற்கு நாடுகளின் முக்கியத்துவம் வளர்ந்து வர 1980 ஆண்டுகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக மாறத் தமிழர் உரிமைப் போராட்டத்தை இந்தியா கைப்பற்றிப் பலப்படுத்தி இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைக் கொடுத்து இலங்கை- இந்திய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்கள். இதன் மூலம் இந்தியா தனது நலன்களை உறுதிப்படுத்துகிறது. இந்தியா இலங்கையில் வேறொரு வல்லரசும், வெளிச்சக்தியும் தங்களுக்குத் தேசிய பாதுகாப்பு ரீதியாகப் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் இருக்க முடியாது என்பதை இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஊடாக இந்தியா உறுதி செய்கின்றது. அமெரிக்காவைப் பொறுத்தவரை 1980 ஆம் ஆண்டுகளில் பனிப் போர் முடிவுற்று வந்த ஒரு காலகட்டம். இந்தியாவிற்கு இவ்வாறான முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்கு அமெரிக்கா அந்த வேளையில் தயங்கவில்லை.
இன்னும் சில வருடங்களில் பனிப் போர் முடிவுக்கு வந்து, வரப் போகின்ற புதிய உலகத்தில் இந்தியா தன்னுடன் நல்லுறவுகளைப் பேணும் வாய்ப்புத் தான் அதிகமாகக் காணப்படுகிறது என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். அன்றைய காலகட்டத்தில் இந்தியா தன்னுடைய நலன்களை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனும் வகையில் இலங்கைத் தீவில் உறுதிப்படுத்தியுள்ளது. சோவியத் யூனியனுடன் நடைபெற்ற பனிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைத் தீவில் மேற்கு நாடுகள் கூடப் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலையும் உருவாகியிருந்தது. இந்த நிலைமை ராஜபக்சவின் வருகைக்குப் பின்னரே இலங்கையில் மாற்றமடைகிறது.
முதல் தடவையாக சீனா உலகத்தில்இரண்டாம் வல்லரசாக இருக்கின்ற நிலையில் இரண்டாம் நிலை எனும் இடத்திலிருந்து முதலாம் இடத்தைப் பெறுவதற்கு இலங்கைத் தீவு மிக முக்கியமானதொரு இடமாக அமைந்துள்ளமையை உணர்ந்து சீனா கடந்த 15 வருடங்களாகத் தன்னுடைய காய்களை நகர்த்திக் கொண்டு வந்தது. ராஜபக்ஷ தான் அதன் உச்சம். சீனாவைப் பொறுத்தவரை சீனாவின் வளர்ச்சி வேகம் அமெரிக்காவைத் தாண்ட வேண்டுமெனில் தன்னுடைய கடற்பாதைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவையிருக்கிறது.
ஒரு நாடு தன்னுடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் பொருளாதார முன்னேற்றம் முக்கிய இடம் வகிக்கிறது. பொருளாதாரம் வளர்வதற்கு எரிபொருள் தேவை. சீனாவின் எரிபொருள் தேவைகளில் 80 வீதத்திற்கு மேல் மத்திய கிழக்கு நாடுகளிருந்து தான் கப்பல்களில் கொண்டுவரப்படுகின்றது. ஆகவே, அந்தக் கடற்பாதையை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாய தேவை சீனாவிருக்கிறது. அந்த வகையில் முத்துமாலை என்ற திட்டத்தை வகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.