வெளிநாட்டுத் தூதரகத்தின் பணியாளராகிய ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் நாட்டின் நியாயமான சட்ட நடவடிக்கைகளாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் பெயரைக் காப்பதாக அமையவில்லை என்ற தொனியிலேயே இந்த விவகாரத்தில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. தனது தூதரக அதிகாரி ஒருவர் மீது தெளிவற்ற முறையில் சட்டம் பாய்ந்திருப்பதாகவும், தூதரகம் என்ற அந்தஸ்தில் அதன் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு உரிமைகள் போதிய அளவில் நிலைநாட்டப்படவில்லை என்ற சாரத்திலேயே சுவிற்சர்லாந்து அரசின் நிலைப்பாடு வெளிப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
சட்டவாட்சி சீராக நடைபெற வேண்டும். அதன் சர்வதேச அளவிலான புகழுக்கு பங்கம் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஒரு நாட்டின் நல்லாட்சிக்கும், சர்வதேச அளவிலான அங்கீகாரத்திற்கும் மிக முக்கியமானது.
இந்த விடயம் இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. சட்டம் ,ஒழுங்கு என்பது ஒரு நாட்டு அரச நிர்வாகத்தின் உயிர்நாடியாகும். சட்டம், ஒழுங்கு சரியான முறையில் கடைப்பிடிக்கப்படாவிட்டால் – சீராகச் செயற்படுத்தப்படாவிட்டால் அங்கு அரச நிர்வாகம் குழப்பகரமான நிலையிலேயே இருக்கும். அரச நிர்வாகம் குழப்பகரமாக இருந்தால் மக்களுடைய வாழ்க்கை முறை பாதிக்கப்படும். ஏனைய செயற்பாடுகளும் குழம்பிய நிலைமைக்கு ஆளாக நேரிடும்.
இதன் காரணமாகத்தான் சட்டவாட்சி சீராக நடைபெற வேண்டியதை உறுதிப்படுத்துமாறு சுவிஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது. ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு இன்னுமொரு நாட்டின் அரசாங்கம் அரச நிர்வாகத்தை சீராக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்துவது அல்லது அறிவுரை வழங்குவது நல்லதல்ல.
அரசாங்கம் என்பது மக்களால் நிறுவப்படுவது. அதற்கென இறைமை உண்டு. அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்திற்குக் கிடைக்கின்ற புகழும் மரியாதையும் அந்த நாட்டின் மக்களுக்குக் கிடைப்பதாகவே கருதப்படும். அதேபோன்று அரசாங்கத்திற்குக் கிடைக்கின்ற விமர்சனங்களும் ஆட்சி முறை பற்றிய கருத்துக்களும் அந்த நாட்டு மக்களுக்குக் கிடைப்பவையாகவே கருதப்படும்.
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதரக விசா வழங்கும் பிரிவின் பணியாளராகிய கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண்மணி மீது சட்டம் பாய்ந்துள்ள முறைமை குறித்து சுவிஸ் அரசாங்கம் விடுத்திருந்த ஓர் அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இலங்கை தனது சட்டவாட்சியை சர்வதேச தரத்திற்கு, அந்த அளவிலான நற்பெயருக்குப் பங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜரீக உறவென்பது மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டியது. ஒரு நாடு இன்னுமொரு நாட்டை அடக்கியாள்கின்ற வகையிலோ அல்லது அந்த நாட்டின் கௌரவமான நிலைப்பாடுகளைப் பாதிக்கின்ற வகையிலோ நடந்து கொள்வது இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவுக்கும், இராஜரீக உறவு நிலைமைக்கும் நல்லதல்ல.
குற்றச்சாட்டு பொய்யானது அத்தகைய சம்பவம் நடைபெறவே இல்லை
குறிப்பாக இலங்கை மோசமானதோர் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது. இந்த முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும், ஒத்தாசையும் உதவிகளும் அவசியமாகி இருக்கின்றன.
விடுதலைப்புலிகளுடனான யுத்தத் தின்போது பயங்கரவாதம் என்ற பெயரில் அதனை அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாள்வதற்கு அயல் நாடாகிய இந்தியாவும் சர்வதேச நாடுகளும் உதவிக்கரங்களை நீட்டியிருந்தன. இந்த உதவிக்கரம் என்பது இராணுவ வழிமுறைகளிலான உதவிகளாக மட்டும் அமைந்திருக்கவில்லை. பண்பியல் ரீதியில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் நல்லாட்சி ஒன்றை நிலைப்படுத்துவதற்குமான உதவிகளும் அடங்கியிருந்தன என்பதை மறந்துவிட முடியாது.
இறைமையுள்ள அரசாங்கம் ஒன்று தன்னெழுச்சிகொண்ட சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கும், ஆபத்துக்களுக்கும் உள்ளாகும்போது ஏனைய அரசுகள் மனிதாபிமான ரீதியில் அதற்கு உதவி புரிய முன்வருவது இயல்பு. இந்த மனிதாபிமான நிலைப்பாடு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். ஆனாலும் அத்தகைய உறவுகள் அந்தந்த நாடுகளின் இறைமை என்ற எல்லையைக் கடந்து செயற்படுவதில்லை. ஆனால் சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளராகிய பெண்மணி மீது சட்ட நடவடிக்கைகள் பாய்ச்சப்பட்டிருக்கின்ற முறைமையானது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜரீக நல்லுறவில் கீறலை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள், மனிதாபிமான நிலைமைகள் என்பனவற்றில் உலக நாடுகள் மத்தியில் சுவிற்சர்லாந்து முன்னணியில் திகழ்கின்ற ஒரு நாடாகும். சர்வதேச மட்டத்தில் இதுவிடயத்தில் தனித்துவமான ஓரிடத்தைக் கொண்டுள்ள அந்த நாட்டுடன் இலங்கை அரசு முரண்படுகின்ற வகையில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது அதன் சர்வதேச உறவு நிலைமைக்கு ஆரோக்கியமானதல்ல என்பதே மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கருத்து.
வெள்ளை வானில் வந்தவர்கள் தன்னைக் கடத்திச்சென்று துன்புறுத்தினார்கள் என்று அந்தப் பெண்மணி தெரிவித்திருந்த குற்றச்சாட்டு பொய்யானது. அத்தகைய ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை. அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்தக் குற்றச்சாட்டை அந்தப் பெண்மணி முன்வைத்திருந்தார் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வெள்ளை வான் கடத்தல் என்ற குற்றச்சாட்டு, அரசாங்கம் என்ற பொது நிலைமையைக் கடந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை சம்பந்தப்படுத்திய ஒரு விடயம் என்றும் அரசாங்கத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தானே பாதிக்கப்பட்டிருப்பதாக நாட்டின் அதி உயர் அதிகாரத்தையும் அதி உயர்ந்த தலைமை நிலைமையையும் கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நடந்ததென்ன…..?
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றி பெற்றதும், மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்ட முக்கியமான குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிய நிசாந்த சில்வா தனது குடும்பத்தினருடன் சுவிற்சர்லாந்து நாட்டுக்குத் தப்பியோடினார்.
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் யுத்த மோதல்கள் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்த கோத்தபாய ராஜபக் ஷ மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவரது சகோதரர் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த அக்காலப்பகுதியில் அதிகார பலம் மிகுந்த ஒருவராக கோத்தபாய ராஜபக் ஷ திகழ்ந்தார். அத்துடன் மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களில் ஈடுபட்டிருந்த அரச மற்றும் நிர்வாகத் துறைகளைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் தண்டனை விலக்கீட்டு கலாசாரத்தின் அனுகூலங்களைப் பெற்றிருந்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
அந்த வகையில் சண்டே லீடர் செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச்சம்பவம், ஊடக வியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணா மல் போயுள்ளமை, 11 தமிழ் மாணவர் கள் கடத்திச்செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டமை, யாழ்ப்பாணத்தில் வித்தியா சிவலோகநாதன் என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு கூட்டு வன்முறையின் பின்னர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட முக்கியமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. இந்த விசாரணைகளுக்கு முக்கிய பொறுப்பதிகாரியாக நிசாந்த சில்வா செயற்பட்டிருந்தார்.
ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதும் பொலிஸ் புலனாய்வு பிரிவில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்தப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா ஆகியோரின் மெய்ப்பாதுகாவல் சடுதியாக நீக்கப்பட்டது. ஷானி அபேசேகர காலி பிரதேச பிரதிபொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்தப் பதவிக்குப் பொதுவாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரத்திலான ஒருவரே நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தண்டனை இடமாற்றத்தின் கீழான ஒருமுறைமையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே நிசாந்த சில்வா நாட்டைவிட்டு குடும்பத்தினருடன் சுவிற்சர்லாந்துக்குத் தப்பியோடினார். நாட்டை விட்டுச் செல்வதற்கு பொலிஸ் திணைக்கள நடைமுறைகளுக்கமைய அவர் முன் அனுமதி பெற்றிருக்கவில்லை. நாட்டைவிட்டுச் செல்வது குறித்து முறையாகத் தனது மேலதிகாரிகளுக்கோ அல்லது பொலிஸ் திணைக்களத்திற்கோ அவர் அறிவித்திருக்கவும் இல்லை. இதற்காக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நிசாந்த சில்வா நாட்டைவிட்டுத் தப்பியோடி சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் புகுவதற்கு கொழும்பிலுள்ள அந்த நாட்டின் தூதரகம் உரிய விசா அனுமதிகளை வழங்கியிருந்த பின்னணியிலேயே வெள்ளை வானில் வந்தவர்களினால் தான் கடத்திச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், அந்தத் தூதரக விசா பிரிவைச் சேர்ந்த உள்ளூர்வாசியாகிய பெண்மணி கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார்.
வெள்ளை வானும் பின்னணியும்
யுத்த காலத்தில் வெள்ளைவான் என்பது அச்சுறுத்தலின் அடையாளமாக மிகுந்த அச்சத்தின் ஒரு குறியீடாகத் திகழ்ந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நிலைமையில் ஏற்பட்டிருந்த மாற்றம், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த நிலைமை வெகுவாக முன்னேற்றம் அடைந்திருந்தது.
ஆயினும் 2019 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெள்ளைவான் குறித்த அச்சம் மீண்டும் தலையெடுத்துள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் மீண்டும் ஏற்பட்டுள்ள ஓர் ஆட்சி மாற்றமே இதற்கு முக்கிய காரணம். இந்த ஆட்சி மாற்றம் நாட்டை மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்கு இட்டுச் சென்றுவிடுமோ என்ற அரசியல் ரீதியான அச்சம் பல மட்டங்களிலும் பலரிடமும் காணப்படுகின்றது.பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரியாகப் பணியாற்றிய நிசாந்த சில்வா விசாரணை நடத்திய சம்பவங்கள் நாட்டையே உலுக்கி அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்களில் அதிகமானவற்றில் வெள்ளைவான் விவகாரம் இழையோடியுள்ள அம்சமே, அந்த விசாரணைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் உயிர்நாடியாகத் தெரிகின்றது. நிசாந்த சில்வா மேற்கொண்டிருந்த விசாரணைகள் பக்கச்சார்பானவை என்றும், குறிப்பாக அரசியல் ரீதியாக அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே மேற்கொண்ட நடவடிக்கைகளாகவும் இப்போது சித்தரிக்கப்படுகின்றது. இதன் தொடர்நிலையாகவே சுவிஸ் தூதரகப் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் விவகாரம் கையாளப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
உள்ளூர்வாசியாகிய கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் எந்தவிதமான அரசியல் பின்னணியையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சாதாரண ஒரு பிரஜையாகவே அவர் கருதப்படுகின்றார். இருப்பினும் வெள்ளைவான் என்ற கொதிநிலை சார்ந்த அரசியல் குறியீட்டுடன் – அந்தக் குறியீட்டுச் சம்பவத்துடன் அவர் தொடர்புபட்டிருப்பது நிலைமைகளை சிக்கலாக்கியிருக்கின்றது. அவர் கூறியிருப்பதைப் போன்று அவர் வெள்ளைவான் மூலமாக எவராலும் கடத்தப்படவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ள அரச தரப்பினர், அவர் குறிப்பிட்ட சம்பவத்தில் உண்மையாக என்ன நடந்தது என்பதை விபரமாக வெளியிடவில்லை. அந்தப் பெண்மணி சம்பவ தினத்தன்று சம்பவ நேரத்தில் வீடொன்றிற்குச் சென்றிருந்ததாகவுமே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீட்டில் என்ன நடந்தது அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால் வெள்ளைவானில் கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்த தகவல் தேசிய மட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கான பின்னணி என்ன அதற்கான காரணங்கள் என்ன என்பது போன்ற விபரங்களை அறிந்து கொள்வதற்காகவே அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
சட்டத்தின் பாய்ச்சல்
வெளிநாட்டுத் தூதரகத்தின் பணியாளராகிய ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் நாட்டின் நியாயமான சட்ட நடவடிக்கைகளாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் பெயரைக் காப்பதாக அமையவில்லை என்ற தொனியிலேயே இந்த விவகாரத்தில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. தனது தூதரக அதிகாரி ஒருவர் மீது தெளிவற்ற முறையில் சட்டம் பாய்ந்திருப்பதாகவும், தூதரகம் என்ற அந்தஸ்தில் அதன் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு உரிமைகள் போதிய அளவில் நிலைநாட்டப்படவில்லை என்ற சாரத்திலேயே சுவிற்சர்லாந்து அரசின் நிலைப்பாடு வெளிப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
இந்த விவகாரத்தினால் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜந்திர உறவுகளில் ஏற்பட்டுள்ள கீறல் நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்காக உயர்மட்ட இராஜதந்திரி ஒருவரை சுவிற்சர்லாந்து அரசு இலங்கைக்கு அனுப்பி முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றது. ஆயினும் அந்தப் பேச்சுவார்த்தைகளில் இயல்பான சுமுக நிலைமை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளின் நேரடி நிலையில் முன்னேற்றம் காணப்படாததையடுத்து, இந்த விடயத்தை அடுத்து ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை அமர்வில் கையாள்வதற்கான முயற்சிகள் சுவிற்சர்லாந்து அரச தரப்பில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பி.மாணிக்கவாசகம்