அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க கோலா கரடி ஒன்று வீதியில் இறங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மலைகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, சுமார் 25,000 ஹெக்டேர் மரங்களை சாம்பலாக்கியுள்ளது.
இதன் காரணமாக, அடிலெய்ட் பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பச் சுழல் நிலவுகிறது. கடும் வெப்பம் காரணமாக, காட்டில் உள்ள கோலா கரடிகள் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி வரும் கோலா கரடியைப் பலரும் அரவணைத்து தண்ணீர் வழங்கி வருகிறார்கள். ஜேன் ப்ரிஸ்டர் என்னும் விலங்கு நல ஆர்வலர், காட்டுத்தீ சம்பவத்தின்போது, தன் வீட்டில் பாதுகாத்த 46 கோலா கரடிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கி அரவணைத்திருக்கிறார்.
இந்நிலையில், அன்னா ஹேஸ்லெர் என்ற பெண்மணி, தன் நண்பர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அடிலெய்ட் காடுகளின் வழியே செல்லும்போது, ஒரு கோலா கரடி வீதியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அந்தக் குழு தங்களின் சைக்கிளை நிறுத்தியுள்ளது.
அதன் பின்னர் நடந்தவற்றை அன்னா ஹேஸ்லெர் சொல்கிறார்.
” அவுஸ்திரேலியாவில் உள்ள கோலா கரடிகள் கடுமையான வெப்பத்தால் அவதிப்படுகின்றன. நாங்கள் வண்டியை நிறுத்தியதும், அந்த கோலா கரடி எங்களை நோக்கி ஓடி வந்தது. நான் தண்ணீர் கொடுக்கத் தொடங்கியதும் எனது சைக்கிளின் மேல் ஏறி தண்ணீர் குடித்தது” என்கிறார். அவர்கள், குழுவில் இருந்த அனைவரது தண்ணீரையும் கோலா கரடிக்கு வழங்கியுள்ளனர். ‘அதன் பார்வையிலேயே, அதன் தண்ணீர்த் தேவை புரிந்தது’ என்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இது தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ள அவர், “இந்தத் தருணத்தை என்னுடன் பயணித்த 10, 11 பேர் பார்த்தனர்” என்றார்.
இந்தப் பதிவுகளுக்கு கமென்ட் செய்த பலரும், அவன் தண்ணீர் பருகும் விதத்திலே தண்ணீருக்காக அவன் ஏங்கியது தெரிகிறது’’ என்று கோலா கரடியின் நிலை குறித்து வேதனை தெரிவித்துள்ளனர்.