மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் சாதனை என்று கூறத்தக்க விடயம், 19 ஆவது திருத்தச் சட்டம் தான். அந்தத் திருத்தச் சட்டத்தை, இல்லாமல் ஒழிப்பதே, இப்போதைய அரசாங்கத்தின் முதல் வேலைத் திட்டமாக இருக்கிறது.
இது ஒன்றும், புதிய அரசாங்கத்தின் இரகசியமான வேலைத் திட்டம் அல்ல; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வெளிப்படையாகவே இதனைக் கூறி வருகிறார்கள்.
19 ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானது என்றும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை இல்லாமல் ஒழிப்பது தான், முதல் வேலையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து விட்டது தான், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மீது, தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டிருக்கின்ற முக்கியமான கோபத்துக்குக் காரணம்.
19 ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களின் மீது கை வைக்காமல் இருந்திருந்தால், மஹிந்த ராஜபக்ஷ இப்போது மீண்டும் ஜனாதிபதியாக இருந்திருப்பார்.
அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற அடுத்த கணமே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும், இன்னும் எத்தனையோ காரியங்கள் நடந்தேறியிருக்கும்.
அதையெல்லாம் தடுத்து நிறுத்தி, வைத்திருப்பது 19 ஆவது திருத்தச்சட்டம் தான். எனவே தான், அதனை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்பதில் ராஜபக்ஷவினர் உறுதியாக இருக்கிறார்கள்.
இன்னும் சில நாள்களில் பிறக்கவிருக்கும் 2020 ஆண்டில், 19 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான வேலைத் திட்டம் தான், இலங்கை அரசியலில் முக்கியமான விடயமாக இருக்கப் போகிறது.
ஏனென்றால், மார்ச் மூன்றாம் திகதிக்குப் பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி செய்திருக்கிறார்.
மார்ச் மூன்றாம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்து விடும். அதற்குப் பின்னர் அவர், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவற்கு, ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வார்.
ஏனென்றால், தற்போதிருக்கும் நாடாளுமன்றத்தில், ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. இந்த நாடாளுமன்றத்தை வைத்துக் கொண்டு அவர்களால் எதையும் செய்து விட முடியாது. எனவே, புதிய தேர்தலுக்குச் செல்வதை விட வேறு வழியில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மீது கைவைப்பது தான், ஆளும்கட்சியின் திட்டம்.
அதேவேளை, 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆளும்கட்சிக்குக் கிடைக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால், 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க முடியாமல் போகும்.
அதற்காக ராஜபக்ஷவினர், தமது முயற்சிகளை கைவிடுவார்கள் என்று கருதுவதற்கில்லை.
ஐ.தே.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை உடைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஏற்கெனவே, 2010 ஆம் ஆண்டு, இதே உத்தியைப் பயன்படுத்தித் தான், 18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிருந்தது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்.
கட்சிகளை உடைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு அமைச்சர் பதவிகள், பணம், சொத்துகள் என்று பேரம் பேசப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலை வீசப்படும்.
தற்போதைய அரசமைப்புச் சட்டத்தின் படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள 30 அமைச்சர்களை மட்டும் தான் நியமிக்க முடியும். அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களை நியமிப்பதற்கும் கடுமையான வரையறைகள் உள்ளன.
2015 வரை இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பிரமாண்டமான அமைச்சரவையில் 70 இற்கும் அதிகமான அமைச்சர்கள் இருந்தனர். அப்போது அமைச்சர்களாக இருந்த பலர், இப்போது இராஜாங்க அமைச்சர்களாக இருக்கிறார்கள். பலர் வெறும் எம்.பிக்களாகவே இருக்கிறார்கள்.
காரணம், 19 ஆவது திருத்தச்சட்டம் தான். அவர்கள் முழு அமைச்சுப் பதவிகளுக்காக ஏங்குகிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் அமைச்சர்கள் நியமனத்தின் போது கடும் நெருக்கடிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கினால் அவர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டியிருக்கும். அதனால் தான் இப்போதைக்கு, எதிர்க்கட்சிகள் பாதுகாப்பாக இருக்கின்றன. யாரையும் விலைக்கு வாங்க ஆளும்கட்சி தயாராக இல்லை.
ஆனால், 19 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டால், அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறை செய்யப்படாத நிலை ஏற்பட்டு விடும். எத்தனை பேரை வேண்டுமானாலும் அமைச்சர்களாக நியமிக்கலாம். அதனால், எதிர்க்கட்சி எம்.பிக்கள், கட்சி மாறி வாக்களிக்கத் துணிந்து கைதூக்க முயற்சிப்பார்கள். எனவே, வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரான காலம் என்பது, எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் நெருக்கடியானதாகவே இருக்கப் போகிறது. எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமன்றி, ஜனநாயகத்துக்கும் கூட, அது அச்சுறுத்தலானதாக மாறலாம்.
அதற்கான அறிகுறிகள் பல இப்போதே வெளிப்படவும் தொடங்கி விட்டன. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேசிய தேர்தல் ஆணைக்குழு போன்ற சுதந்திர ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன.
இதன் மூலம் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டு விட்டதாக முன்னைய அரசாங்கம் வெற்றிப் பேரிகை கொட்டியது.
ஆனாலும், சுதந்திர ஆணைக்குழுக்கள், சுதந்திரமாக இயங்கக் கூடிய நிலையை ஆட்சியில் உள்ள அரசாங்கமே, தீர்மானிக்க முடியும் போலத் தெரிகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பொலிஸ் தரப்பு, தமது அதிகாரத்தை மீறிச் செயற்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கு முன்னர், சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டு, அவரது அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், சம்பிக்க ரணவக்கவை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்குச் சென்று விட்டே, அதுபற்றி பிரதிச் சபாநாயகருக்கு அறிவித்திருக்கின்றனர் பொலிஸார். இது நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறுகின்ற செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஆனால், தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த விவகாரத்தில் தலையீடு செய்யவில்லை. ஏதோ முறைப்பாடு செய்தார்கள் என்பதற்காக, பதில் பொலிஸ்மா அதிபரிடம் விளக்கம் கேட்பதுடன் தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிற்கிறது.
பொலிஸ் ஆணைக்குழுவின் கடிவாளம் சரியாக இருந்திருந்தால், சம்பிக்க ரணவக்கவின் கைது விடயத்தில் அது பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும்.
நீதித்துறையிலும் கூட, அவ்வாறான அரசியல் தலையீடுகள் தென்படுகின்றன.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் வழக்குகள் கையாளப்படும் முறைகள், தீர்ப்புகள் என்பன, நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
சுதந்திர ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதே, சம்பந்தப்பட்ட துறைகள் அரசியல் அதிகாரங்கள், செல்வாக்குக்கு அப்பாற்பட்டதாக, பக்கச்சார்பற்றதாகச் செயற்பட வேண்டும் என்பதற்காகத் தான்.
ஆனால், அந்த நோக்கத்தில் இருந்து சுதந்திர ஆணைக்குழுக்கள் விலகிச் செல்ல முற்படுகின்றனவா, அரசியல் மாற்றங்களுக்கேற்ப அவை வளைந்து கொடுக்கின்றனவா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
பொதுத் தேர்தலுக்குப் பின்னரான சூழலில், ஜனநாயகம் எந்தளவுக்கு கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற அச்சம் இப்போதே எழுந்துள்ளதற்குக் காரணம், சுயாதீன ஆணைக்குழுக்கள் வளைந்து கொடுக்கத் தொடங்கியிருப்பது தான்.
19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டு விட்டதான நம்பிக்கை பலரிடம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை இப்போது மெல்ல மெல்ல சிதறடிக்கப்பட்டு வருகிறது.
19 ஆவது திருத்தச் சட்டமே இப்போது ஆபத்தில் இருக்கிறது. இந்த நிலையில், 19 ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கிய சுதந்திர ஆணைக்குழுக்களின் சுயாதீனத் தன்மை குறித்த அச்சம் நியாயமானதே.
எது எவ்வாறாயினும், சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்றவற்றை உருவாக்கினால் மட்டும் போதாது; அவற்றைச் சுயாதீனமாக இயங்க விடக் கூடிய, ஜனநாயகத்தை மதிக்கத் தெரிந்த அரசாங்கங்களும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தெளிவாகப் புரிகிறது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத அதனை தமக்குச் சார்பாக வளைக்கக் கூடிய ஆட்சியாளர்கள் மத்தியில், 19 ஆவது திருத்தம் போல எத்தனை திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் சரி, எத்தனை சுதந்திர ஆணைக்குழுக்களைக் கொண்டு வந்தாலும் சரி, அதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மையாக இருக்கப் போவதில்லை.
இலங்கையின் அரசியல், உலகத்துக்கு கற்றுத் தருகின்ற பாடம் இது.
கே. சஞ்சயன்