‘பிரபலமான பதின்ம பருவ நபர் மலாலா’: ஐ.நா அறிவிப்பு

கடந்த பத்தாண்டுகளில் பதின்ம வயதில் உலகப் புகழ்பெற்றவர் (most famous teenager) என்ற பட்டத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை “பத்தாண்டு கால மதிப்பீடு” (Decade in Review) என்ற பெயரில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம்(2010), சிரிய உள்நாட்டுப்போர் துவக்கம் (2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது (2015) ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

மலாலா பற்றி குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை ‘2012 இல் பெண்களின் கல்வியில் மும்முரம் காட்டிய மலாலா யூசுப்சாயை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். அவர் மீதான தாக்குதல் உலகை உலுக்கியது. மலாலா நலம் பெற உலகெங்கும் பிரார்த்தனைகள் நடந்தன. யுனெஸ்கோவின் பாரிஸ் தலைமையகத்திலும் அவருக்கு பிரார்த்தனை நடந்தது. அவர் உயிர்பிழைத்து மீண்டு வந்து, பெண் கல்வி மீதான தனது செயலில் வேகமெடுத்தார்.

2014 இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அமைதிக்கான தூதரானார். அவரது அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான பதின்ம பருவ நபராக அவரை உருவாக்கி உள்ளது.’ என கூறியுள்ளது.