ஆஸ்திரேலியாவின் Operation Sovereign Borders (OSB) எனும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் கடந்த 1 நவம்பர் முதல் 30 நவம்பர் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது.
அக்குறிப்பின் படி, இந்த ஒரு மாதக் காலத்தில் 47 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மருத்துவ உதவிக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றதாக பல ஆண்டுகளாக நவுரு மற்றும் பப்பு நியூ கினியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள்.
இம்மாத(டிசம்பர்) தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த அகதிகளை ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற அனுமதிக்கும் மருத்துவ வெளியேற்றச் சட்டம் நீக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இக்காலக்கட்டத்தில், படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2014க்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வந்த 6 பேர் தானாக முன்வந்து சொந்தநாடு திரும்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் வலுக்கட்டாயமாக சொந்த நாட்டுக்கே நாடுகடத்தப்பட்டுள்ளார். கடந்த 2013 முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்து வருகின்றது.