துரித கதியில் பிரெக்ஸிட் விவகாரத்தை முடித்துவிட விரும்பும் ஜோன்ஸனின் முன்னாலுள்ள வேகத்தடைகள்!

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதையடுத்து தற்போதைய காலக்கெடுவில் (2020 ஜனவரி 31) அன்று அல்லது அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பெரும்பாலும் வெளியேறும் என்பது இப்போது நிச்சயமாகிவிட்டது.

முன்னாள் பிரதமர் தெரேசா மே தனது பிரெக்ஸிட் உடன்படிக்கைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திரும்பத் திரும்ப மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து ஜோன்ஸன் பிரதமராக வந்தார்.

ஜோன்ஸன் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதியதொரு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு புதிய தேர்தலை நடத்தினார். அவரது கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றதுடன் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததையும் அடுத்து, ஜோன்ஸனின் உடன்படிக்கை தொடர்பான சட்டமூலத்தை மக்கள்

சபையில் (ஹவுஸ் ஒஃப் கொமன்ஸ்) நிறைவேற்றுவது பிரச்சினையாகவே இருக்கவில்லை. பாராளுமன்ற அங்கீகாரம் வெறும் சம்பிரதாயபூர்வமானதாகவே இருந்தது.

ஜோன்ஸனின் உடன்படிக்கைக்கு ஆதரவாக 358 உறுப்பினர்களும், எதிராக 234 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பிரஜைகளின் உரிமைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செலுத்துவதற்கு ஐக்கிய இராச்சியம் செலுத்த இணங்கிக்கொண்ட நிதியினளவு, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வட அயர்லாந்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு உறுப்பினராக இருக்கும் அயர்லாந்து குடியரசிற்கும் இடையில் பௌதிக ரீதியான தடையரண் ஒன்றைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடு போன்ற விவகாரங்களை உடன்படிக்கை கையாளுகிறது.

உடன்படிக்கை மக்கள் சபையில் மீண்டுமொரு தடவை வாக்கெடுப்பிற்கு விடப்படும். அதற்குப் பிறகு மேல்சபையான பிரபுக்கள் சபை உடன்படிக்கை மீது வாக்களிக்கும். ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்ஸிட் தொடர்பான சட்டவிதிமுறை ஒழுங்குகளும், சம்பிரதாய நடைமுறைகளும் ஜனவரி முற்பகுதியளவில் பூர்த்தியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்திற்குச் செல்லும். அந்தப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டதும் (ஜனவரி 29 இல் இது நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது) ஐக்கிய இராச்சியம் முறைப்படியாக ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.

ஆனால் முறைப்படியான ஒரு வெளியேற்றம் சலிப்பைத் தருகின்ற பிரெக்ஸிட் செயன்முறைகள் பூர்த்தியடைந்துவிட்டன என்று அர்த்தப்படாது. ஜனவரி 31 இற்குப் பின்னரும் கூட ஐக்கிய இராச்சியம் குறைந்தபட்சம் 11 மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்கும் – இதனர்த்தம் வாணிபம் வழமைபோன்று தொடரும் என்பதேயாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரிட்டனின் எதிர்கால உறவுமுறை தொடர்பில் இன்னொரு உடன்படிக்கையை எட்டுவதே ஜோன்ஸனின் மிகப்பெரிய சவாலாகும். 2020 டிசம்பர் 31 இற்கு அப்பால் பேச்சுவார்த்தைகளை நீடிப்பதற்கான சாத்தியத்தை ஜோன்ஸன் மறுத்துவிட்டார். அதனர்த்தம் எந்தவிதமான உடன்பாடும் இன்றியே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் என்பதை இன்னமும் நிராகரிப்பதற்கில்லை. தற்போதைய உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளையும் கடந்து சென்றாலும் கூட ஜோன்ஸன் சட்டவாக்க மற்றும் அரசியல் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கிறார்.

தற்போது நடைமுறையிலிருக்கும் ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்களைப் பதிலீடு செய்வதற்குத் தொடர்ச்சியான புதிய சட்டமூலங்கள் பலவற்றை ஜோன்ஸனின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. அத்துடன் தனது உடன்படிக்கை வட அயர்லாந்தின் சஞ்சலமான சமாதானத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் ஜோன்ஸன் சிந்திக்க வேண்டியவராக இருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியத்திடமிருந்து முற்றுமுழுதாக பிரிட்டனைத் துண்டித்துவிட வேண்டும் என்று கடும் அக்கறையுடன் செயற்படுகின்ற அதேவேளை, இரண்டு அயர்லாந்திற்கும் இடையில் பௌதிகத் தடையரண் ஒன்றைத் தவிர்க்க வேண்டியவராகவும் இருக்கும் ஜோன்ஸனின் உடன்படிக்கை பெரிய பிரித்தானியாவிற்கும், அயர்லாந்து தீவிற்கும் இடையில் சுங்க எல்லையொன்றை எழுப்புவதிலும் நாட்டம் காட்டுகிறது. இது வட அயர்லாந்தில் பிரிட்டனுடன் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்று விரும்புகின்ற யூனியன்வாதிகளை ஏற்கனவே சீற்றத்திற்குள்ளாக்கி இருப்பதுடன், தேசியவாதிகளைப் பலப்படுத்தியிருக்கிறது.

பிரெக்ஸிட் தொடர்பான நிச்சயமற்றதன்மை இப்போது முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் பிரெக்ஸிட் எவ்வாறு இடம்பெறும் என்பது தொடர்பான நிச்சயமற்றதன்மை இன்னமும் தொடர்கிறது. மிகவும் பதட்டமான வேகத்தில் பிரெக்ஸிட் விவகாரத்தை முடித்துவிட ஜோன்ஸன் விரும்பக்கூடும். ஆனால் அவர் தன்முன்னால் உள்ள வேகத்தடைகள் பற்றிச் சிந்திக்க வேண்டியவராக இருக்கிறார். இல்லாவிட்டால் பிரெக்ஸிட்டின் விளைவாக அவர் செலுத்தவேண்டிய அரசியல் மற்றும் பொருளாதார விலை மிகப்பெரியதாக இருக்கும்.

(த இந்து)