தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
திரிஷா தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 96′ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விருதுகளை வென்று வருகிறார்.
சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் திரிஷா பேசும் போது, ” ’96’ படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும். அதுபோன்ற கதாபாத்திரங்களை படங்களில் பார்த்திருக்கிறேன். அதில் நான் நடித்து இந்த அளவுக்குப் பிரபலமாகும் என தெரியாது. படம் வெற்றியடையும். அதில் உள்ள ராம், ஜானு கதாபாத்திரங்களுடன் ரசிகர்கள் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று எண்ணினேன்.
ஆனால், சாதாரண ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்து நடித்தது இந்த அளவுக்கு வைரலாகியுள்ளது. அவ்வளவு எளிமையான தோற்றம் அது. எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும். ஒருசில கதாபாத்திரங்கள் மேஜிக் போன்று நிகழும். ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்குப் பிறகு ’96’ படத்தின் ஜானு கதாபாத்திரம் தான் இப்படியொரு அற்புதம் செய்தது.
காதல் கதைகள் எளிதாக மக்களைச் சென்றடைகிறது என எண்ணுகிறேன். எனக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ காதல் கதை எதுவும் கிடையாது. ஆனால் 96 கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது’ இவ்வாறு திரிஷா கூறினார்