சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, அந்தக் கொலை விவகாரத்தின் முடிவாக அமையும் என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நம்புவாராக இருந்தால் அவர் பரிதாபத்திற்குரிய முறையில் தவறிழைப்பதாகவே இருக்கும்.
கடந்த வருடம் அக்டோபரில் துருக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, அந்தக் கொலை விவகாரத்தின் முடிவாக அமையும் என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நம்புவாராக இருந்தால் அவர் பரிதாபத்திற்குரிய முறையில் தவறிழைப்பதாகவே இருக்கும்.
கடந்த வருடம் அக்டோபரில் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற அந்தக் கொடூரக்கொலை சவூதி அரேபியாவிற்கு அவமானத்தைத் தேடித்தந்தது. உலகில் அதன் மதிப்பிற்கு நிலையானதொரு ஊறை விளைவித்திருக்கிறது. இளவரசர் முகமட்டின் தனிப்பட்ட மதிப்பை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு சேதப்படுத்தியது.
சுருங்கச் சொல்வதானால் அந்தக் கொலை விவகாரம் முழுவதுமே முடை நாற்றமெடுக்கிறது. இந்த நாற்றம் உகந்த முறையில் நடத்தப்பட்ட நீதி விசாரணையொன்றின் அடையாளத்தைச் சிறிதளவேனும் கொண்டிராத போலி விசாரணையொன்றினால் அழிந்து போகப்போவதுமில்லை. சிதறிக் கலையப் போவதுமில்லை. இந்தப் பயங்கரமான குற்றச்செயல் சவூதி முடியாட்சியின் மனசாட்சி மீதான அழிக்க முடியாத ஒரு கறையாகத் தொடர்ந்து இருக்கப் போகிறது.
ஆரம்பத்திலிருந்தே நம்பகத்தன்மை அற்றவையாக விளங்கிய ரியாத்திலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தின் ஒழுங்கற்ற விசாரணைகள் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 23) 8 பேரைக் குற்றவாளியாகக் கண்டு தீர்ப்பளித்தது. ஆரம்பத்திலிருந்து இறுதி வரை முற்றிலும் இரகசியமான சூழ்நிலைகளில் விசாரணைகள் நடத்தப்பட்டமை நம்பகத்தன்மையை மலினப்படுத்தியதுடன், குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் ஒதுக்கிவிடத்தக்க பலிகடாக்கள் என்ற சந்தேகத்தையும் வலுவடையச் செய்கிறது.
இளவரசர் முகமட்டின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர் சவுத் அல் – கஹ்தானி குற்றச்சாட்டு எதுவுமின்றி விடுவிக்கப்பட்டிருக்கின்றமை மேற்கூறப்பட்ட சந்தேகங்களை எல்லாம் அதிகரிப்பதாக மாத்திரமே அமையும். இஸ்தான்புல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கையாட்கள் குழுவுடன் கஷொக்கியைப் பற்றி சம்பாஷணைகளில் கஹ்தானி ஈடுபட்டதாக சவூதி பிரதி அரச வழக்குத்தொடுநர் ஷலான் பின் ராஜிஹ் ஷலான் முன்னர் கூறியிருந்தார். துருக்கியிலிருந்து கஷொக்கியை பலவந்தமாக நாடு திருப்பியனுப்புமாறு உத்தரவிட்ட சவூதி பிரதிப் புலனாய்வுத் தலைவர் அஹமட் அல் – அஸிரியுடன் கஹ்தானி ஒருங்கிணைந்து செயற்பட்டதாகவும் வழக்குத்தொடுநர் கூறியிருந்தார். கஷொக்கியை கடத்துவதற்கு அனுப்பப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் பின்னர் வஞ்சகர்களாக மாறி சவூதியின் உயர்மட்ட அதிகாரத்தின் அனுமதியின்றி கஷொக்கியை கொலை செய்ததாகவே காண்பிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.
கஹ்தானியும், அஸிரியும் வேறு பதவிகளுக்கு மாற்றப்பட்டார்கள். அஸிரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவரும்கூட விடுவிக்கப்பட்டதாக ஷலான் திங்களன்று கூறினார். போதுமான சான்றுகள் இன்மையே அவர் விடுவிக்கப்பட்டமைக்குக் காரணமாகக் கூறப்பட்டது. இளவரசர் முகமட்டை போலவே இவ்விருவரும் கஷொக்கியின் கொலையில் தமக்கு எவ்வித தனிப்பட்ட பொறுப்பும் இல்லையென நிராகரிக்கிறார்கள்.
கடந்த செப்டெம்பரில் சி.பி.எஸ் செய்திச்சேவையுடனான நேர்காணலில் இளவரசர் முகமட், ‘இது ஒரு கொடூரமான குற்றச்செயல். ஆனால் சவூதியின் தலைவரென்ற முறையில், அதுவும் குறிப்பாக சவூதி அரசாங்கத்திற்காகப் பணியாற்றிய நபர்களினால் இழைக்கப்பட்ட குற்றச்செயல் என்பதால் அதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்கிறேன்” என்று தெரிவித்தார். ‘கொலைக்கு நீங்கள் உத்தரவிட்டீர்களா?” என்று இளவரசரிடம் கேட்கப்பட்ட போது, ‘நிச்சயமாக இல்லை” என்று பதிலளித்திருந்தார். சவூதி அரச குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர்களைப் பொறுத்தவரை அவமானப்படுவதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையிருப்பதால் திங்கட்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு எல்லாமே மிகவும் வசதியானதாகத் தோன்றும். நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றவாளிகள் அடையாளங்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் சவூதி ஆட்சியாளர்கள் கூறுவார்கள்.
இந்த நிலைவரங்களை நோக்கும் போது மரணதண்டனைகள் காட்டுமிராண்டித்தனமானவை என்ற போதிலும் இங்கு அவை பூர்வாங்கமானவையாகவே அமைகின்றன. மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்யக்கூடும். அவர்களது தண்டனைகள் குறைக்கப்படலாம். அல்லது உலகம் கஷொக்கி கொலை விவகாரத்தை மறக்கத் தொடங்கும் போது எதிர்காலத்தில் ஒரு திகதியில் தண்டனைகள் தள்ளுபடி செய்யப்படக்கூடும். ஆனால் இவையெல்லாமே காலப்போக்கில் அடித்துச்செல்லப்படும் என்று இல்லை. கடந்த ஜுன்மாதம் ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் அக்னஸ் கலாமார்டினால் வெளியிடப்பட்ட அறிக்கை முடிக்குரிய இளவரசர் உட்பட உயர்மட்ட சவூதி அதிகாரிகளுக்கு கொலையில் சம்பந்தம் இருப்பதான நம்பகமான சான்றுகளைக் கண்டறிந்தது.
கஷொக்கியின் கொலை சட்டரீதியான விசாரணைகள் ஏதுமின்றிய மரணதண்டi;ன என்றும், சவூதி அரேபியாவினாலும் துருக்கியினாலும் நடத்தப்பட்ட விசாரணைகள் சர்வதேச நியமங்களைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டன என்றும் அக்னஸ் கலாமார்ட் அறிவித்தார். நீதிக்கு இடையூறு ஏற்படுத்துவதில் சவூதி அரசாங்க அதிகாரிகள் ஈடுபடக்கூடும் என்று குற்றஞ்சாட்டிய அவர் விசாரணைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கோரினார். அவரின் சுயாதீனமும், பக்கச்சார்பின்மையும் (ரியாத் நீதிமன்றத்தினைப் போலன்றி) கேள்விக்கு இடமின்றியதாக இருந்தபோதிலும் ஐ.நாவின் சார்பில் அவர் கண்டறிந்தவற்றையும், அவர் செய்த விதப்புரைகளையும் சவூதி அரேபியா நிராகரித்தது.
ஆனால் கலாமார்ட் மாத்திரமல்ல, வேறு தரப்பினரும் இவ்வாறு சந்தேகத்தைக் கொண்டிருந்தனர். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய நேசநாடாகவும், வாணிபப் பங்காளியாகவும் இருக்கும் சவூதி அரேபியாவை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ க்கு எந்தவிதமான பிரத்யேகக் காரணமும் கிடையாது. கஷொக்கி கொலைக்கு இளவரசர் முகமட் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார் என்று கடந்த வருடம் சி.ஐ.ஏ கண்டறிந்ததில் உயர்ந்த நம்பிக்கையை வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள் சி.ஐ.ஏ யின் அந்த முடிவு பல்வேறு வட்டாரங்களினால் ஆதரிக்கப்பட்டது என்றும் கூறினர். பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் காலித் பின் சல்மானுக்கு (இளவரசர் முகமட்டின் சகோதரர்) கஷொக்கி கொலையில் சம்பந்தம் இருந்ததாக சி.ஐ.ஏ சுட்டிக்காட்டியது. அவர் இஸ்தான்புல்லில் இருந்த கஷொக்கியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சவூதி துணைத்தூதரகத்திற்குச் செல்லுமாறு வலியுறுத்தியதுடன், அவரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்பட்டது. காலித்துக்கு கஷொக்கி கொலை செய்யப்படுவாரென்று தெரிந்திருந்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. ஆனால் தனது சகோதரரின் பணிப்பின் பேரிலேயே தொலைபேசி மூலம் பேசியதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் கூறுகிறது.
கஷொக்கி கொலையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பற்றிய சவூதியின் உத்தியோகபூர்வ வார்த்தைகளை நம்புபவர்களாகத் தோன்றுகின்ற வெகுசிலரில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். தனிப்பட்ட முஐறயில் அவர் அவ்வாறு நம்பாவிட்டாலும் கூட சவூதி அரேபியாவுடனான தனதும், வாஷிங்டனினதும் நெருக்கமான உறவை கஷொக்கி விவகாரம் தடம் புரட்டிவிட அனுமதிக்கப் போவதில்லை என்பதை அவர் தெட்டத்தெளிவாகவே கூறியிருந்தார். அவர் கூறுகின்ற அந்த நெருக்கமான உறவுமுறை ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் விற்பனை, பரஸ்பர வர்த்த நலன்கள், இரு நாடுகளுக்கும் ஈரான் மீதிருக்கும் பொதுவான பகை ஆகியவற்றின் மீதே தங்கியிருக்கிறது. டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்தவரை ரஷ்யாவுடன் தொடர்புபட்ட வேறுபல சம்பவங்களில் அவர் தனது சொந்த புலனாய்வுச் சமூகத்தின் கண்டுபிடிப்புக்களைப் புறந்தள்ளியிருக்கிறார்.
ஆனால் வெள்ளை மாளிகையிலிருக்கும் ஊழல்தனமான உணர்ச்சியற்ற ஒரு கோழையினால் தன்னையும், சீர்குலைந்துபோன தனது மதிப்பையும் மீட்டெடுக்க முடியும் என்று இளவரசர் முகமட் கருதுவாரேயானால் அவர் மீண்டுமொரு தடவை தன்னைத் தானே ஏமாற்றுவதாகவே அமையும். கஷொக்கி கொலை இளவரசர் மீது அமெரிக்க காங்கிரஸிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. பிரிட்டனும், ஐரோப்பாவும் சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்கள் விற்பனையைத் தடுப்பதற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக்கூடும். இந்த நிலைவரங்கள் எல்லாம் சவூதி அரேபியாவினால் இழைக்கப்பட்ட திட்டமிட்ட வகையிலான பரந்தளவிலானன மனித உரிமை மீறல்களை தயவு தாட்சண்யமின்றி உலகிற்கு அம்பலப்படுத்துகின்றன.
சவூதி அரேபியா ஒரு வழமையான நாடு என்று தங்களால் எவ்வளவு காலத்திற்குத் தொடர்ந்து பாசாங்கு செய்யமுடியும் என்று மேற்குலக ஜனநாயக நாடுகள் தங்களைத் தாங்களே கேள்விக்குட்படுத்தும் நிர்பந்தத்தை கஷொக்கி கொலை ஏற்படுத்தியிருக்கிறத. பெருமளவிற்கு சீர்திருத்தங்களுக்கு உட்படாத நாடாகவே இன்னுமிருக்கும் சவூதி அரேபியா பரந்தளவில் ஜனநாயகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது. பெண்கள் தொடர்பில் அது மத்தியகால மனநிலையிலேயே இருக்கிறது. நீதி வழங்கப்படவில்லை. சுதந்திரமாகப் பேசியதும், தனது சொந்த நாட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி சுரண்டுபவர்களுக்கு எதிராகத் துணிச்சலாக நின்றதுமே கஷொக்கி செய்த குற்றமாகும். அவரின் கொலைக்கு இன்னமும் பழிதீர்க்கப்படவில்லை.
கஷொக்கியின் உண்மையான கொலையாளிகள் இன்னமும் அம்பலப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள் என்னதான் மூடிமறைக்கின்ற கதைகளைப் பரப்பினாலும் சந்தேக விதைகள் விதைக்கப்பட்டுவிட்டன. இளவரசர் முகமட்டையும், அவரது இரத்த பந்தங்களையும் பொறுத்தவரை இது ஒரு கசப்பான அறுவடையாக இருக்கக்கூடும்.