சம காலத்திலும் எதிர்காலத்திலும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவும் ஜனநாயக ரீதியான நாடாளுமன்ற முறைமைக்குள் முக்கியமான சம்பிரதாயங்களுக்குள் அடங்குகின்ற சலுகைகளை பாதுகாப்பதற்கான கடமையை நிறைவேற்றுவதில் , எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திப்படுத்துவதிலிருந்து சபாநாயகர் கருஜய சூரிய எந்த சந்தர்ப்பத்தில் பின்வாங்கப் போவதில்லை என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரை சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டமை, நலன் விசாரித்தமை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யப்படும் போது இது வரையில் பின்பற்றப்படுகின்ற சம்பிரதாயங்களை மீறி கைது செய்யப்பட்டதாலேயே சம்பிக ரணவக்கவை சிறைச்சாலையில் சென்று சபாநாயகர் பார்வையிட்டதால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் கவனம் செலுத்தியிருக்கிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நாடாளுமன்ற உறுப்பினரொருவரை கைது செய்யப்பட வேண்டி ஏற்பட்டால் அது தொடர்பில் எவ்வித மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. ஆனால் அதற்காக பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்பது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்தியிருந்தார்.
இதற்கு முன்னர் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் முறையாக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களது சலுகைகள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்திய போது , குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் அரசியல் கட்சி தொடர்பில் கவனம் செலுத்தியதில்லை என்பது இரகசியமல்ல.
எனினும் சம்பிக ரணவக்க நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி அவர் கைது செய்யப்பட்டதாலேயே சபாநாயகருக்கு அவர் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட வேண்டியேற்பட்டது.
எனினும் இதற்கு முன்னர் முறையாக கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட உறுப்பினரை எந்த சந்தர்ப்பத்திலும் சபாநாயகர் சிறைச்சாலையில் சென்று பார்வையிடவில்லை என்பது சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.
எனவே சம்பிரதாயங்களை மீறி கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படுகின்றமையை தனிநபர் ஒருவரை அல்லது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை காப்பாற்றுவதற்காக சபாநாயகர் செயற்படுகின்றார் என்று கருத முடியாது என்பதை வலியுறுத்தி கூற விரும்புகின்றோம் என அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.