ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு காரணிகள் உந்துசக்தியாக அமைகின்றன. இவற்றுள் அச்சமூகத்தினரிடையே காணப்படும் ஒற்றுமையும் முக்கிய காரணியாக அமைகின்றது. சமூகத்தின் ஒற்றுமை சீர்குலையும் போது அபிவிருத்தி தடைப்படுவதோடு மேலும் பல பாதக விளைவுகளும் ஏற்படும் என்பதும் தெரிந்த ஒரு விடயமேயாகும். இந்த வகையில் மலையக சமூகத்தை எடுத்துக்கொண்டால் இச்சமூகத்தினரிடையே நிலவும் விரிசல்கள், கட்சி ரீதியான மற்றும் தொழிற்சங்க ரீதியான வேறுபாடுகள் உள்ளிட்ட பலவும் இச்சமூகத்தினரின் எழுச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
மேலும் மலையக அரசியல்வாதிகள் இம்மக்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கும்போது பொது இணக்கப்பாட்டுடன் ஓரணியில் நின்று கோரிக்கைகளை முன்வைப்பதோடு, இவை வெற்றிபெற உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மலையக சமூகத்துக்கு இந்த நாட்டில் மிக நீண்ட வரலாறு இருக்கின்றது. தனித்துவம் மிக்க ஒரு சமூகமாக இம்மக்கள் இந்நாட்டில் உருவெடுத்திருக்கின்றனர். கல்வித்துறையிலும் ஏனைய பல துறைகளிலும் இம்மக்கள் ஆரம்ப காலங்களைக் காட்டிலும் இன்று எவ்வளவோ முன்னேறி இருக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. தமது அடையாளத்துடன் கூடிய ஒரு பல்கலைக்கழகத்தைக் கோருகின்ற அளவிற்கு மலையக சமூகம் தலைநிமிர்ந்திருக்கின்றது என்றால் அது உண்மையில் பாராட்டத்தக்க ஒரு விடயமேயாகும். எனினும் மலையக அடையாளத்துடன் கூடிய ஒரு பல்கலைக்கழகம் இம்மக்களுக்காக தேவைதானா? என்ற ரீதியிலும் கருத்து வெளிப்பாடுகள் இருந்துவருகின்றன. புத்தாக்கம் என்று வரும்போது உலகளாவிய ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல எதிர்ப்புகள் வெளிக்கிளம்புவது வழமையாகும். இது ஒன்றும் புதிய விடயமல்ல. மலையக மக்களுக்கு பல்கலைக்கழகம் என்றால் அங்கு ஒரு புத்தாக்கம் இருக்கின்றது. மலையக மக்கள் என்றாலே ஒரு தொழிலாள வர்க்கம் என்ற அடையாளம் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. எனவே அவர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமா? என்ற எண்ணம் பலரிடையே காணப்படுகின்றது. தொழிலாள வர்க்கத்தினருக்கு ஒரு பல்கலைக்கழகம் தேவைதானா? என்று சிலர் சிந்திக்கின்றார்கள்.
இங்கிலாந்து நாட்டில் புகையிரத பாதைகளை அமைத்தபோது அதிகமான வர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். புகைவரும், இடங்களை ரயில்வே திணைக்களம் சுவீகரித்துவிடும் என்றெல்லாம் கருத்துகள் வெளியாகின. எனினும் இப்போது அந்நாட்டில் புகையிரத நடவடிக்கைகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. இதனைப்போன்றே தமிழ் நாட்டில் எட்டு வழிப்பாதை இடப்பட்ட நிலையைக் கண்டித்து எதிர்ப்புகள் தலைதூக்கின. மேலை நாடுகளில் உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டபோது ஆரம்பத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல காரணங்களையும் கூறினர். இவ்வாறாக புத்தாக்கம் என்று வருகையில் எதிர்ப்புகள் தலைதூக்குவது இயல்பான ஒரு விடயமாகும். மலையக பல்கலைக்கழக விடயத்திலும் இது நடக்கின்றது. எதிர்ப்புகளையும் மீறி பல்கலைக்கழகம் சாத்தியமாகும் என்று பரவலாக நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மலையக சமூகத்தின் கோரிக்கை மெச்சத்தக்கதேயாகும்.
மலையக மக்கள் வரலாற்றில் பல துன்ப துயரங்களையும் சந்தித்திருக்கின்றார்கள். இன்னும் சந்தித்தும் வருகின்றார்கள். துன்ப துயரங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தொழிலாளர்களின் சோகக்கதையை மு.நித்தியானந்தன் ‘கூலித் தமிழ்’ இல் தெளிவாக எடுத்துக்கூறியிருக்கின்றார். தமிழகத்தின் வானம் பார்த்த பூமியில் வரண்டுபோன கண்மாய்களையும் பஞ்சம் பரிதவிக்கும் முகங்களையும் பார்த்து கதியற்று நின்றவர்கள் இலங்கைக்கு அடிமைகளாகக் கடத்தப்பட்டு படகுகளில் திணிக்கப்பட்டார்கள். படகுகள் கவிழ்ந்து இறந்தவர்கள், புயல் காற்றில் தோணிகள் கவிழ்ந்து சமுத்திரத்தோடு சங்கமித்தவர்கள் போக உயிர்கொண்டு வந்தவர்கள் எலும்புக்கூடுகள் சமைத்த பாதைகளில் இருநூறு மைல்கள் வரை ஓட்டிச்செல்லப்பட்டனர். இந்தியாவில் கொளுத்தும் வெயிலில் குளுமை காட்டும் சொந்தமாவது இருந்தது. இங்கோ எலும்பை உருக்கும் குளிரில் அடர்ந்த விருட்சங்களின் கானகக் குரல் மட்டுமே எதிரொலித்தது என்கிறது கூலித்தமிழ்.
இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் அடிமைகளை விடவும் மோசமாக நடத்தப்பட்ட வரலாறுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. தோட்டத்துரைமாரின் கொடுமையினால் தொழிலாளி ஒருவர் உயிரிழக்கவும் நேர்ந்திருக்கிறது. இதுபற்றி டொனோவொன் மொல்ட்ரிச் என்பவர் தனது நூல் ஒன்றில் தெளிவுபடுத்தி இருக்கின்றார். துரை பங்களாவில் கொய்யா மரத்தில் பழங்களைப் பிடுங்கியதற்காக தோட்டத்துரைமார் சிறுபிள்ளைகளை இரத்தம் சிந்த அடித்திருக்கின்றார்கள். தோட்டத்துரையைப் பார்ப்பதற்காக மார்புக்கு மேல் கைகளை குறுக்காக போட்டபடி பவ்வியமாக நின்ற இளைஞனைப் பார்த்து ஏதோ காரணத்தால் எரிச்சலடைந்த துரை அவ்விளைஞனை தரக்குறைவாக திட்டித்
தீர்த்த சம்பவங்களை நினைவுபடுத்தி எம் கண்களையும் கூலித்தமிழ் குளமாக்குகின்றது. அன்றில் இருந்து இன்றுவரை தொழிலாளர்களை மனிதராகவே கருதாமல் இழிவாக நடத்தும் போக்கு துரைத்தனத்தின் ரத்தத்தில் ஊறிப்போய் உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
பல்வேறு சுரண்டல்களுக்கும் உள்ளான மலையக மக்கள் பல்வேறு வகையிலும் ஏமாற்றப்பட்டமை ஒன்றும் புதிய விடயமல்ல. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் மலையக சமூகத்தினரின் மீதான நெருக்கீடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டு சகல துறைகளிலும் அம்மக்களை நிர்வாணப்படுத்தியமை இலங்கையின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வேயாகும். இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகள், ஒப்பந்தங்கள், இடம்பெறச் செய்தமை, இம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் எனப்பல திட்டமிட்ட செயற்பாடுகளும் வெற்றிகரமாக இடம்பெற்றிருக்கின்றன. இனியும் இடம்பெறாது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை.
இனவாதிகளின் இலக்கு
இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளியினர், முஸ்லிம்கள் என்ற அனைத்து சிறுபான்மை இனங்களையும் மழுங்கடிக்கச் செய்யும் முனைப்புகள் தொடர்ச்சியாகவே இடம்பெற்ற வண்ணமாக உள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலையில் இதுகுறித்து இதயசுத்தியுடனான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இல்லை. இலங்கையில் இருந்தது பயங்கரவாதப் பிரச்சினையே. பிரபாகரன் இறந்த கையோடு அதுவும் முடிந்துவிட்டது. எனவே இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லாத நிலையில் அதற்கான நிரந்தர அரசியல் தீர்வு குறித்தோ அல்லது வேறு விடயங்கள் குறித்தோ சிந்திக்கவேண்டிய அவசியமில்லை என்று சில மேதாவிகள் கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பதனையும் எம்மால் அவதானிக்கக்கூடியதாகவே உள்ளது. உச்சகட்ட அதிகாரப் பகிர்வு, சமஷ்டி முறையிலான தீர்வு என்பன பற்றிப் பேசுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கின்றது. ஆனால் சாதக விளைவுகள் எட்டாக்கனியாகி இருக்கின்றது.
முஸ்லிம் மக்களை பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் வீழ்ச்சியடையச் செய்யும் நடவடிக்கைகளில் கடந்த காலத்தில் இனவாதிகள் ஈடுபட்டிருந்தனர். ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புச் சம்பவம் இனவாதிகளுக்கு தீனிபோட்டிருந்தது. ஒரு குழுவினரின் செயற்பாடுகளால் ஒரு சமூகத்தை வேரறுக்க இவர்கள் திட்டமிட்டனர். வரலாற்றில் தொடர்ச்சியாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வந்திருப்பதைக் காணலாம். இனவாதிகள் முஸ்லிம்களின் வளர்ச்சியின் மீது கொண்ட பொறாமையின் விளைவாக இந்நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
இனவாதிகள் மலையக மக்களையும் விட்டு வைக்கவில்லை. இம்மக்களை ஓரம் கட்டுவதை குறியாகக்கொண்டு பல நடவடிக்கைகள் இடம் பெற்றிருக்கின்றன. தீர்மானிக்கும் சக்தி மற்றும் பேரம் பேசும் சக்தி என்பன மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களிடம் இருந்து கைநழுவிப் போய் இருக்கின்றது. இச்சமூகங்களுக்கு இடையே காணப்பட்ட மற்றும் இச்சமூகங்களுக்கு உள்ளே காணப்பட்ட விரிசல்களும் இந்நிலைக்கு வலுச்சேர்த்திருக்கின்றது என்றால் மிகையாகாது. எனவே சிறுபான்மை சமூகங்கள் தமக்கிடையேயும் தமக்குள்ளேயும் ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டிய ஒரு அவசியப்பாடு மேலெழுந்திருக்கின்றது. சிறுபான்மையினரின் பிளவுகள் கூத்தாடிக்கு கொண்டாட்டமாகி விடக்கூடும் என்பதனையும் மறந்து விடுதலாகாது.
தொழிலாளர் எண்ணிக்கை
பெருந்தோட்டத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கம்பனியினரின் அடக்குமுறை, எதேச்சதிகாரம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதும் நீங்கள் அறிந்த விடயமேயாகும். பெருந்தோட்ட சேவையாளர்களின் பல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்காது கம்பனிகள் இழுத்தடிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக குற்றச் சாட்டுக்கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெருந்தோட்ட நிலங்கள் அபிவிருத்தி என்னும் போர்வையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுவீகரிக்கப்படுகின்றன. இதனால் தேயிலையின் விளைநிலம் குறைவடைகின்றது. இதனால் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. தேயிலைத் தோட்டங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை முன்னைய காலங்களை விட இப்போது சடுதியான வீழ்ச்சி நிலையினை எதிர்நோக்கி இருக்கின்றது. 1980 ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்களில் 5 இலட்சத்து 41 ஆயிரத்து 971 தொழிலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் 1990 இல் நான்கு இலட்சத்து எட்டாயிரத்து 784 தொழிலாளர்களும் 1995 இல் மூன்று இலட்சத்து இரண்டாயிரத்து 743 தொழிலாளர்களும் 2005 ஆம் ஆண்டில் இரண்டு இலட்
சத்து 46 ஆயிரத்து 478 தொழிலாளர்களும் 2010 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 12 ஆயிரத்து 826 தொழிலாளர்களும் தேயிலைப் பெருந்தோட்டங்களில் பதிவு செய்து கொண்டிருந்தனர். 2015 ஆம் ஆண்டில் இத்தொகையில் கணிசமான ஒரு வீழ்ச்சி நிலையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அந்த ஆண்டில் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 322 தொழிலாளர்களே பெருந்தோட்டங்களில் பதிவு செய்து கொண்டிருந்தனர். எனவே பெருந்தோட்ட தொழில்துறையின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.
பெருந்தோட்டங்களைக் காட்டிலும் சிறுதோட்டங்கள் தற்போது ஆதிக்கம் மிக்கனவாக விளங்குகின்றன. உற்பத்தி உள்ளிட்ட பல விடயங்களிலும் பெருந்தோட்டங்கள் இப்போது பின்தள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கை பெருந்தோட்டங்களிலும் சிறு தோட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தேயிலை உற்பத்தியின் அளவை நோக்கும்போது அது பின்வருமாறு அமைகின்றது. 1995 ஆம் ஆண்டு இலங்கையில் 280.1 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 168.8 மில்லியன் கிலோ கிராம் தேயிலை பெருந்தோட்டங்களிலும் 111.3 மில்லியன் கிலோ கிராம் தேயிலை சிறு தோட்டங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டது. இதேவேளை இரண்டாயிரமாம் ஆண்டு பெருந்தோட்டங்களில் 100.1 மில்லியன் கிலோ கிராமும் 2010 ஆம் ஆண்டில் 100.8மில்லியன் கிலோ கிராமும் 2017 இல் 104 மில்லியன் கிலோ கிராமுமாக தேயிலை உற்பத்தி இருந்தது. இந்நிலையில் சிறு தோட்டங்களில் 2000ஆம் ஆண்டு 183.8 மில்லியன் கிலோ கிராமும் 2010 ஆம் ஆண்டில் 230.1 மில்லியன் கிலோ கிராமும் 2017 ஆம் ஆண்டில் 244 மில்லியன் கிலோ கிராமுமாக தேயிலை உற்பத்தி காணப்பட்டது.
இவைகளைக் கருத்தில்கொண்டு பார்க்கையில் பெருந்தோட்டங்கள் வீழ்ச்சிப் போக்கை வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கம் பெருந்தோட்டங்களை புறந்தள்ளி செயற்படும் நிலையில் சிறு தோட்டங்களுக்கு வசதிகள் பலவற்றையும் செய்து கொடுப்பதாக கருத்துக்கள் நிலவுகின்றன. உரமானியம் கடன் வசதிகள் எனப்பலவும் இதில் உள்ளடங்குகின்றன. எனவே அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனான செயற்பாடு பெருந்தோட்டங்களின் பின்னடைவுக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பெருந்தோட்டங்களின் இருப்பும் தொழிலாளர்களின் இருப்பும் இன்று கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த மலையக அரசியல்வாதிகள் கவனம் செலுத்துதல் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றது.
முன்வைப்புகள்
மலையக அரசியல் கட்சிகள் இம்மக்களின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை தேர்தல் காலங்களில் முன்வைப்பதை நாம் அவதானிக்கின்றோம். இதனடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு அமைந்திருந்தது. மலையக தமிழ் மக்களின் அடையாளம் லயத்திற்கு பதிலாக தனிவீடு, காணிப் பிரச்சினைக்கான தீர்வு, சுயத்தொழில் முயற்சியாளர் சம்மேளனம், உள்ளூராட்சி நிறுவனங்கள், மலையக தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு அதிகார சபை, மாகாண கல்வி அமைச்சு, மலையக மக்களுக்கு அரச நிர்வாகத்தில் பங்கு, மலையகத் திற்கான பல்கலைக்கழகம், பாராளுமன்ற– மாகாண சபை– உள்ளூராட்சி மன்றங்களில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் என்று பல்வேறு விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
மலையக கல்வியின் குறைவளர்ச்சி நிலைமையைக் கருத்தில்கொண்டு தனியார் கல்வியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதேவேளை இம்முறை ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய ஜனநாயக முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைக்கேற்ப பல்வேறு விடயங்கள் மலையக மக்கள் தொடர்பில் உள்ளடக்கி இருந்தன. தோட்டத் தொழிலாளரின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பெருந்தோட்டத் துறை மீள்கட்டமைப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய மலையக தமிழ்ச் சமூகத்தை அங்கீகரித்தல், ஜனாதிபதி செயலணி, கல்வி, நிலமும் வீடும், கைத்தொழில் வலயங்கள், பொது நிர்வாகம் என்று பல விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தோட்டங்களை கிராமங்களாக மாற்றும் நிலைமை தொடர்பில் ஏற்கனவே கவனம் செலுத்தியிருந்தது. இதேவேளை 32 அம்ச கோரிக்கைகளையும் முன்வவைத்திருந்தது. முழுமையான பல்கலைக்கழகம் ஒன்றினை நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கவேண்டும். ஊவா மாகாணத்தில் கல்வியியல் கல்லூரி ஒன்றை அமைக்கவேண்டும். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளையை ஹட்டனில் நிறுவுதல், பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வாழ்கின்ற 14 மாவட்டங்களில் உயர்தர விஞ்ஞான, வர்த்தகப் பிரிவுகளை உள்ளடக்கிய பாடசாலைகளை தேவையான அளவு
உருவாக்குதல், அரச தொழில் வாய்ப்பில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை அதிகரித்தல், பெருந்தோட்டங்களில் இயங்காதுள்ள தொழிற்சாலைகளை இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக்காக மாற்றியமைத்தல் எனப் பல விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆரம்ப சுகாதார மையங்களை பெருந்தோட்டங்களில் உருவாக்குதல், பிரதேச செயலக அதிகரிப்பு, கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லைகளை மீளமைத்தல் என்பனவும் இதில் உள்ளடங்கும்.
இவற்றுடன் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் பல கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவிடம் முன்வைத்திருந்தது. தொழிலாளர் சம்பள உயர்வு, கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி எனப் பல்வேறு விடயங்களும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.
பொது இணக்கப்பாடு
மலையக மக்களின் பிரச்சினைகள் பலவும் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் உள்ளன. கல்வி, சுகாதாரம், அரசியல் சமூக நிலைமைகள், வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளும் இதில் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. இவற்றுடன் நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போன்று இனவாதிகளின் மேலெழும்புகையானது மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மைகளின் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. இனவாதத்தினால் நாடு துன்ப, துயரங்கள் பலவற்றை ஏற்கனவே அனுபவித்திருக்கின்றது. எனினும் இனவாதிகள் இன்னும் திருந்துவதாக இல்லை. எனவே இனவாத தீயில் இருந்து மலையக மக்களைக் காப்பாற்றவேண்டிய ஒரு மிக முக்கியதேவை காணப்படுகின்றது. தோட்டங்களினதும், தொழிலாளர்களினதும் இருப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. எனவே இவற்றைத் தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஆழமாகச் சிந்தித்து செயற்படுதல் வேண்டும். தோட்டங்களினதும், தொழிலாளர்களினதும் இருப்பு கேள்விக்குறியானால் தொழிற்சங்கங்களும், அரசியல்வாதிகளும் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும் என்பதனையும் மறந்து விடுதலாகாது. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அவரவர்தம் அடையாளங்கள் மிகவும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இவற்றை உரியவாறு பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.
இன்று மலையகத்தவர்கள் சிலர் சிங்களமயமாகி வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிங்களத்தில் பேசி, சிங்களவர்களைப் போல உடைகளை அணிந்துகொண்டு சிங்களவர்களைப் போன்று காரியமாற்றும் நடவடிக்கைகளில் மலையகத்தவர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலைமையானது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும். எனவே எம்மவர்கள் சிங்களமயமாக முற்படுவதில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்கவேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.
தொழிலாளர்களின் லயத்து வாழ்க்கையினால் பாதக விளைவுகள் பலவும் ஏற்படுகின்றன. எனவே லயத்து கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தனிவீட்டு கலாசாரத்தை துரிதமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. நாடுகளின் வெற்றிக்கு நிறுவனங்களின் சீரான, சிறப்பான இயக்கம் என்பது முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. நிறுவனங்களின் முறையான இயக்கமின்மை, செயற்பாட்டுத்திறனின்மை காரணமாக நாடுகள் தோல்வியடைவதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார். இது முற்றிலும் உண்மையான ஒரு கருத்தாகும். பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இதனை நிரூபிப்பதாகவே உள்ளன. இப்படிப்பார்க்கையில் வைத்தியசாலைகள், கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் எனப் பல நிறுவனங்களும் முறையாக இயங்குவதோடு சமூக அபிவிருத்திக்கு வழிகாட்டவும், வலுசேர்க்கவும் வேண்டும். இவைகளின் முறையான உச்சகட்ட நன்மைகளை மலையக சமூகத்திற்கும் நாட்டுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் உறுதிபூணுதல் வேண்டும்.
மலையக மக்களின் வாழ்க்கைத் தராதரங்கள் கீழ்நிலையில் உள்ளன. வருமானப் பற்றாக்குறை இதில் கூடியளவு தாக்கம் செலுத்துகின்றது. எனவே இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர் மட்டத்தில் வைப்பதற்கான காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படல் மிகவும் இன்றியமையாததாகின்றது. ஏனைய சமூகங்களுக்கும் மலையக சமூகத்திற்கும் இடையேயான விரிசல் நிலை அல்லது இடைவெளி என்பது அதிகமுள்ளது. எனவே இந்த இடைவெளி இனங்காணப்பட்டு நிரப்பப்படுதல் வேண்டும்.
மலையக மக்களின் அபிவிருத்தி கருதி நேர்நிலை பாரபட்சம் என்ற அடிப்படையில் அரசாங்கம் விசேட உதவிகளையும் சலுகைகளையும் மலையக மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சாதகமாக்கிக்கொள்ள அரசியல்வாதிகள் முழுமூச்சுடன் செயற்படுதல் வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்
முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி உள்ளிட்ட மலையக கட்சிகள் பலவும் மலையக மக்களின் நலன்கருதி கோரிக்கைகள் பலவற்றை தனித்தனியாக முன்வைத்திருக்கின்றன. இது உரிய சாதக விளைவுகளை ஏற்படுத்துமா? என்பது கேள்விக்குறியாகும்.
தனித்து குரல் கொடுப்பதை விட பல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு குழுவாக குரல் கொடுக்கையில் சாதக விளைவுகள் அதிகமாகும். குழுவினரின் அழுத்தமானது வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் என்பதனை மறுக்க முடியாது. மலையக அரசியல்வாதிகள் தனித்தனியாக கோரிக்கைகளை முன்வைப்பதை விட பொதுவான கோரிக்கைகளை ஐக்கியத்துடன் முன்வைத்து வெற்றிபெற முயற்சிக்க வேண்டும். பொது இணக்கப்பாடு என்பது மிகவும் அவசியமாகும்.
பிரிந்து நிற்பது ஏன்?
மலையக அரசியல்வாதிகள் பிரிந்து நின்று செயற்படுவதன் காரணமாக மக்கள் அதனால் பாதிப்பிற்கு முகம்கொடுக்க வேண்டி வருகின்றது என்பதே உண்மையாகும். மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு இப்பிரிவுகள் வலுச்சேர்க்கின்றன. மலையக அரசியல்வாதிகள் ஏன் பிரிந்து செயற்படுகின்றார்கள்? என்று நாம் நோக்குகின்ற போது தனிப்பட்ட வேறுபாடுகள், ஆளுமை, சுயநலன்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் பிரிந்து நின்று செயற்படுவதனைக் காணமுடிகின்றது. மலையக மக்களின் தீர்க்கப்படாத முக்கிய தேவைகள் பல காணப்படுகின்றன. இவற்றை நிறைவேற்றிக்கொள்ளவேனும் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும். அடையாளத்தை பேணுகின்ற முனைப்பில் இவர்கள் ஒற்றுமையைக் காண்பிக்கவேண்டும்.
மலையக அரசியல்வாதிகளிடையே கொள்கை ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான வேறுபாடு கிடையாது. குறிப்பாக இத்தகைய வேறுபாடுகள் இவர்களிடம் காணப்படவில்லை. அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைப்பதனையே இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வட பகுதியைப் பொறுத்தவரையில் சில கட்சிகள் அரசாங்கத்துடன் ஒத்து ழைக்கின்றன. இன்னும் சில கட்சிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முடியாது என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றன. மலையகத்தைப் பொறுத்தவரையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சிக்கும், இ.தொ.கா. பொதுஜன முன்னணிக்கும் ஆதரவு வழங்குகின்றது. எனவே கொள்கை ரீதியான வேறுபாடுகளை எம்மால் இனம்காண முடியாதுள்ளது. தனிப்பட்ட வேறுபாடுகளே பிரிவுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. தலைமைத்துவப் போட்டி என்பதும் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. கட்சிகள் ஒன்றிணைகையில் தலைமைத்துவம் குறித்த பிரச்சினைகள் மேலெழும்பும். எல்லோரும் தலைவராக முடியாது. கூட்டுத் தலைமை என்பதும் இங்கு சாத்தியமானதாகத் தென்படவில்லை. கட்சிகள் ஒன்றிணையும் போது யார் தலைமைத்துவத்தை ஏற்பது என்ற பிரச்சினை மேலெழும்புகின்றது. கூட்டுத் தலைமை சாத்தியப்படாத நிலையில் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இது சிக்கல்களை தோற்றுவிப்பதாக உள்ளதுடன் கட்சிகளின் இணைவிற்கும் தடையாக உள்ளது.
துரைசாமி நடராஜா