கடந்த அரசாங்கத்தின் வீண் செலவுகளுக்கான ஆதாரங்கள்……!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த அரசாங்கத்தின் நிதி  நிலைமை மற்றும் அரசாங்கத்தின் வீண் செலவுகள் தொடர்பான  ஆதாரங்களை ஜனவரி மாதம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவார் என்று தகவல் மற்றும் தொடர்பாடல், உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உருவாக்கப்படும்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவற்கான செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு  கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அனைத்து துறைகளையும் வலுப்படுத்தினால் எதிர்பார்க்க கூடிய இலக்கை அடைய முடியும்.

கிராமபுற அபிவிருத்திகளை மேம்படுத்துவது தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பிரதான  வழிமுறையாக அமையும். நாட்டில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. கிராம புறங்களின் அபிவிருத்திக்கான ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு 20 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெற்றுக் கொண்டுள்ள 300 மில்லியனுக்கும் மேற்படாத வணிக முறை கடன்கள் மீள் செலுத்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடன் சுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை  ஏலத்தில் விடுவதற்கு  தீர்மானித்ததைத் தொடர்ந்து காப்பீடு வழங்கும் வகையிலேயே கடனை மீள் அறவிடுவது தற்காலிகமான இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடன் சுமைகளுக்கு உள்ளாகியுள்ளவர்களின் கடன்களை அரசாங்கத்தினால் ஒருபோதும் மீள் செலுத்த முடியாது. இரு தரப்பினருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்த வழிகாட்டலை மாத்திரம் காண்பிக்க முடியும். கடன் சுமை தொடர்பில் பிரதமர் அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதானிகளிடம் அறிக்கை கோரியுள்ளார்.

ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில்வாய்ப்புக்கள்
ஜனவரியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் வாய்ப்புக்களில் உள்வாங்கப்படுபவர்கள், குறைந்த வருமானத்தை பெறுபவராகவும், தற்போதும் சமுர்த்தி பயனாளியாகவோ அல்லது சமூர்த்தி பயனாளி ஒருவரை உள்ளடக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ, கல்வி பொதுத்தராதர உயர்தர, மற்றும் சாதாரண தர பரீட்சைகளில் சித்தியடையாதவராகவும், குறைந்த கல்வி தகைமையினை உடையவராகவும் இருக்க வேண்டும்.

சமுர்த்தி பயனாளிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்குவதால் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஒருபோதும் இரத்து செய்யப்படாது.  ஏழ்மையினை இல்லாதொழித்து மக்கள் சுயகௌரவத்துடன் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கான சூழல்  ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் பிரதான நோக்கமாகும்.

வாழ்க்கை செலவு
மக்களின் வாழ்க்கை செலவுகள் தற்போது உயர்மட்டத்தில் காணப்படுகின்றன. இதற்கு காலநிலை மற்றும் பொருளாதார பொது காரணிகள் பல செல்வாக்கு செலுத்துகின்றன.  நாடு அரிசி வகை ஒரு கிலோ  98 ரூபாவிற்கு  விற்பனை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பல விற்பனை நிலையங்களில் இந்த விலைக்கு  அரசி விற்கப்படுவதில்லை என்று  மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

அரசாங்கத்தின் தீர்மானத்தை அரசி உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டும். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் விற்பனையில் ஈடுப்பட்டால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவ்வாறிருப்பினும் இன்னும் இருவாரத்திற்குள் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலைக்கு அமைய அரிசியினை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.


எம். சி. சி. ஒப்பந்தம்
பல்வேறு  தரப்பினரால் சர்ச்சையினை ஏற்படுத்திய மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து ஆராய அரசியல் சார்பற்ற பல்துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பாராளுமன்ற விவாதத்தை தொடர்ந்து ஒப்பந்தம் குறித்து இறுதி தீரமானம் எடுக்க்கப்படும் என்றார்.