ஆஸ்திரேலிய ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுமார் 40 அகதிகளுக்கு முறையான சிகிச்சை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்  33வயது குர்து அகதி மோஸ்.

மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்பட்ட சுமார் 40 அகதிகளும், பல மாதங்களாக மெல்பேர்னில் உள்ள ஒரு ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மனுஸ்தீவில் சுமார் 7 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 40 நாட்களுக்கு முன்பு ஆஸ்மா சிகிச்சைக்காக தன்னை ஆஸ்திரேலியா கொண்டு வந்ததாகக் கூறுகிறார் அகதி மோஸ்.

“வந்ததிலிருந்து எனக்கு எக்ஸ்-ரே மட்டும் எடுத்திருக்கிறார்கள். எனக்கு ஆஸ்தமா, மன அழுத்த பிரச்னை இருக்கிறது. ஆனால், இங்கு எனக்கு எந்த மருத்துவமும் வழங்கப்படவில்லை. எனக்கு மட்டுமல்ல, இங்குள்ள யாருக்குமே வழங்கப்படவில்லை,” என்கிறார்.

“வெளிக்காற்றை சுவாசிப்பதற்கான இடம் கூட எங்களுக்கு இல்லை. ஒரு நாளில் சுமார் 19 மணிநேரம் அறைக்குள்ளேயே கழிக்க வேண்டியதாக இருக்கிறது. நாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம், நாங்கள் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை,” எனத் தெரிவித்திருக்கிறார் குர்து அகதி மோஸ்.

தனிப்பட்ட வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய எல்லைப்படையின் பேச்சாளர், சம்பந்தப்பட்ட அகதிக்கு மருத்துவ சிகிச்சை நிறைவடையும் பட்சத்தில் அந்த அகதி மீண்டும் நவுரு அல்லது பப்பு நியூ கினியாவுக்கெ அனுப்பப்படுவார் எனக் கூறியிருக்கிறார்.

“தங்கும் இடம் தொடர்பான முடிவுகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை பொறுத்து எடுக்கப்படும். இவ்வாறு அழைத்து வரப்படும் (அகதிகள்) குடியேற்ற தடுப்பு மையமற்ற விடுதியில் வைக்கப்படலாம்,” என எல்லைப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.