தெற்காசியப் பிராந்தியத்தில் ஜனநாயகம் நிலவுகின்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை கணிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜனநாயக ஆட்சி நிலவுகின்றது. பல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுவோரும் இங்கு ஐக்கியமாக வாழ்கின்றார்கள் என்ற பொதுவானதோர் அரசியல் பார்வையும் உண்டு. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கோரி முப்பது வருடங்களாக ஆயுதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் இந்த ஜனநாயகக் கணிப்பு நிலவியது என்பது கவனத்துக்குரியது.
உண்மையில் இங்கு ஜனநாயகம் நிலவுகின்றதா என்பது விமர்சனப் பண்புகளைக் கொண்ட முக்கியமான கேள்வி. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் நாட்டின் ஜனநாயகத்துக்குக் கேடு விளைவித்திருந்தது என்ற ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது. இதனை மறுப்பதற்கில்லை.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெருமையடித்துக் கொண்டது. யுத்தத்துக்கு முடிவு கட்டி, ஆயுத ரீதியான அச்சுறுத்தல்கள் இல்லாத ஒரு சூழலை உருவாக்கி தேர்தல்கள் நடத்தப்பட்டதாக அந்த அரசு விசேடமாக சுட்டிக்காட்டியிருந்தது.
இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் இரண்டு வெவ்வேறு மாகாணங்களாகத் துண்டாடி, கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் முதலில் நடத்தப்பட்டது. தொடர்ந்து வடமாகாண சபைக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. இந்த இரண்டு தேர்தல்களும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் நடத்தப்பட்டன. முன்னதாக இந்திய அமைதிப்படை இலங்கையின் வட–கிழக்குப் பிரதேசங்களில் கால் ஊன்றியிருந்த 80களின் பிற்பகுதியில் வடக்கு–கிழக்கு மாகாணத்துக்கான ஒரு தேர்தல் யுத்த மயமான ராணு வச் சூழலில் நடத்தப்பட்டது.
அதேபோன்றதொரு சூழலில்தான் யுத்தம் முடிவடைந்த பின்னரான ராணுவ மயப்பட்ட ஒரு நிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைகளுக்கான இரண்டு வெவ்வேறு தேர்தல்களும் நடத்தப்பட்டன.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதிகளிலும் இலங்கையில், குறிப்பாக வடக்கு–கிழக்குப் பிரதேசங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அரசியல் உரிமைக்கான விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் பயங்கரவாத நடவடிக்கையாக வெளி உலகுக்குக் காட்டப்பட்ட போதிலும், யுத்த மோதல்கள் காரணமாக தேர்தல்கள் தள்ளி வைக்கப்படவில்லை. ஒத்தி வைக்கப்படவில்லை. ஆயுத ரீதியான அச்சுறுத்தலுக்குத் தேர்தல் நடவடிக்கைகள் இலக்காகி செயலற்றுப் போகவில்லை.
வேடிக்கையான அரசியல் நிலைமைகள்
இதன் காரணமாகத்தான் இலங்கையின் ஜனநாயகத் தன்மை சிறப்பானதாகக் கணிக்கப்பட்டதாகக் கருத வேண்டி உள்ளது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஆயுத மோதல்கள் இல்லாத சூழலில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக சூழலில் நடந்தனவா என்பது கேள்விக்குரியது.
ஏனெனில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்ததையடுத்து, ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டிருந்த போதிலும், மோதல்கள் இடம்பெற்ற வடக்கிலும் கிழக்கிலும் ராணுவ மயமான நிலையில் சிவில் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தது. அதனால் அச்சம் மிகுந்த ஒரு நிலையில்தான் தேர்தல்கள் நடைபெற்றன.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தேர்தல்கள் மட்டுமல்ல. அரச நிர்வாகமும்கூட, ஜனநாயகம் என்ற போர்வையில் உரிமை மறுப்பு நிலையிலான ஆட்சியாகவே நடத்தப்பட்டது. நீதித்துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. அரசியலமைப்பில் எதேச்சதிகாரத்துக்கு வழி வகுக்கும் அம்சங்களை உள்ளடக்கி திருத்தம் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனநாயக ஆட்சி என்ற போர்வையில் தனிமனித அதிகாரம் வரைமுறையற்ற வகையில் கோலோச்சியது.
இந்த எதேச்சதிகாரப் போக்கு காரணமாகவே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இருகட்சி அரசாங்கம் உருவாகியது. அதற்கு நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரும் சூட்டப்பட்டிருந்தது. இந்த அரசாங்கத்தை மிகுந்த நம்பிக்கையோடு மக்கள் உருவாக்கினார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் தேர்தல் உறுதிமொழிகளையும் நல்லாட்சி அரசு காற்றில் பறக்கவிட்டிருந்தது.
அதிகாரப் போட்டியில் சிக்கி, அரசியலமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையிலான தீர்மானங்களை நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி நிறைவேற்றினார். பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. காலத்துக்கு முந்திய நிலையில் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது. அரசியலமைப்புக்கு முரணான வகையில் அதன் விதிகளை மீறுகின்ற வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் நாட்டில் அரசாங்கமே இல்லாதது போன்றதொரு நிலைமை உருவாகியது. ஒரு கட்டத்தில் இரண்டு பிரதமர்கள் அதிகாரத்தில் இருக்கின்ற வேடிக்கையான அரசியல் நிலைமையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டிருந்தது.
எதேச்சதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட போதிலும், அது நல்ல ஆட்சியாக நடைபெறவில்லை. ஜனநாயகம் அங்கு பாதுகாக்கப்படவில்லை. அதனைத் தழைத்தோங்கச் செய்ய எவரும் முற்படவில்லை. இத்தகையதொரு பின்னணியில்தான் 2019 ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
அமோக வெற்றி; ஆனால் சிறுபான்மை அரசு
நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனமும், செயல் வல்லமையற்ற போக்கும், ஜனநாயகத்துக்கு முரணான நடவடிக்கைகளும்
மக்களின் மனங்களை வெல்வதற்குத் தவறியமையும் ஜனாதிபதி தேர்தலின் மூலம், ராஜபக்ஷக்களின் மீள் வருகைக்கு உரமூட்டின. இனவாதப் பிரசாரமும், சிறுபான்மை இன மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகக் காட்டிய வலிமையான அரசியல் நிலைப்பாடும் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. இந்த செல்வாக்கே கோத்தபாய ராஜபக்ஷவை 13 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் ஜனாதிபதியாக வெற்றி பெற வழி வகுத்தது.
அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்று அதிக பெரும்பான்மையுடன் ஒரு ஜனாதிபதி தெரிவாகிய சம்பவம் இந்தத் தேர்தலில் நடந்தேறியது.
இந்த வகையிலான ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியானது இனவாத அரசியல் போக்கிற்குப் பலமான அடித்தளத்தை இட்டுள்ளது. சிறுபான்மை இன மக்களின் வாக்குகளிலும், அவர்களுடைய ஆதரவிலும் பேரின அரசியல் கட்சிகள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற புதிய பாதையை அரசியல் களத்தில் திறந்துவிட்டுள்ளது.
தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ளதையடுத்து, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் சிறுபான்மை அரசு ஒன்றையே புதிய அரசாங்கமாக உருவாக்க முடிந்துள்ளது. பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த போதிலும், தேர்தலில் ஏற்பட்ட தோல்வியினால் மனம் தளர்ந்த காரணத்தினாலோ அல்லது வேறு உள்நோக்கம் கொண்ட அரசியல் காரணங்களினாலோ என்னவோ பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியைத் தன்னிச்சையாகத் துறந்து வெளியேறினார். அவரது ராஜிநாமாவைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் இல்லாமல் போனது.
பொதுத் தேர்தல் ஒன்றின் மூலம் மக்கள் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சி மக்களை நட்டாற்றில் கைவிட்டதுபோன்று இவ்வாறு கைவிட்டுச் சென்றிருக்கக் கூடாது. பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க தன்னிச்சையாக ராஜிநாமா செய்தது ஜனநாயக முறைமைக்கு மாறான ஒரு செயற்பாடாகும் என்று ஜனநாயகத்தின் மீது பற்றுள்ளவர்கள் மனதுக்குள் புழுங்குகின்றார்கள்.
இவருடைய ராஜிநாமாவையடுத்தே புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கான சந்தர்ப்பம் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்குக் கிட்டியது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் புதிய ஜனாதிபதியுடன் அவருக்கும் அவருடைய அரசுக்கும் அரசியல் ரீதியாகப் பெரும் இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் பதவியில் இருப்பதற்காகக் கொண்டிருந்த அதிகாரத்தை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அந்த அதிகாரத்தை, அரசியல் உரிமையை ஐக்கிய தேசிய கட்சி நடுவழியில் கைவிட்டுச் சென்றதன் காரணமாகவே புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்க முடிந்தது. இவ்வாறு புதிய அரசாங்கம் ஒன்று உருவாகும்போது, பாராளுமன்றத்தில் புதிய அரசுக்கான பெரும்பான்மை பலத்தைக் காட்ட வேண்டிய, தவிர்க்க முடியாத பொறுப்பு புதிய பிரதமருக்கு உண்டு.
ஆனால் பிரதமரின் ராஜிநாமா காரணமாகவே புதிய அரசாங்கம் உருவானது. புதிய அராசங்கத்தின் நாடாளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தியதன் மூலம், நாடாளுமன்ற பலத்தை உடனடியாகக் காட்ட வேண்டிய பொறுப்பில் இருந்து அது விடுபட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ அந்தப் பதவிக் குரிய நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டிருக்கவில்லை. ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அரசியல் விருப்பத்தை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பலரும் முதலில் விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அந்தப் பதவியை இல்லாமல் செய்வதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக மீண்டும் அந்தப் பதவியைக் கைப்பற்றி அதிகாரத்தில் இருப்பதற்கே அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அந்த வகையிலேயே மைத்திரிபால சிறிசேனவும் நடந்து கொண்டார். இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலவற்றை 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்துள்ளது. ஜனாதிபதி ஆட்சி முறை உருவாக்கப்பட்டபோது அந்தப் பதவிக்கு இருந்த அதிகாரங்களிலும் பார்க்க அதிக அதிகாரங்களை ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது மஹிந்த ராஜபக்ஷ 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கியிருந்தார்.
இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியாது என்ற நிபந்தனையை இந்தத் திருத்தச் சட்டம் மாற்றி அமைத்தது. ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்ற நிலைமை விசேடமாக உருவாக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி என்ற தனிமனித அடிப்படையில் ஜனநாயக நடைமுறைகளை மீறிச் செயற்படக்கூடிய விடயங்களில் உருவாக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளையும் 18 ஆவது திருத்தச் சட்டம் நீக்கி ஜனாதிபதிக்கு அளவற்ற அதிகாரங்களை வழங்கியிருந்தது.
நல்லாட்சி அரசாங்கம் இவை அனைத்தையும் இல்லாமல் செய்ததுடன், ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவராக இருக்கலாமே தவிர, அவர் எந்தவோர் அமைச்சையும் பொறுப்பேற்று அமைச்சராக இருக்க முடியாது என்ற நிபந்தனையையும் உள்ளடக்கியதாக 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைக் கட்டுப்படுத்தவில்லை.
ஆனால் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியை 19 ஆவது திருத்தச் சட்டத்தின் நிபந்தனைகள் கட்டுப்படுத்தி உள்ளன. பெயரளவில் அவர் அமைச்சரவையினதும், அரசாங்கத்தினதும் தலைவராக இருக்கலாமே தவிர, அதிகாரங்களைக் கொண்டிருக்க முடியாது. அந்த அதிகாரங்கள் சட்டவாக்கத்துறையாகிய நாடாளுமன்றத்துக்கும் குறிப்பாக பிரதமருக்கும் இந்தத் திருத்தச் சட்டம் வழங்கி உள்ளது.
இத்தகைய ஒரு நிலையில்தான் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு பதவி பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் அவருடைய செயற்பாடுகள் அனைத்தும், முழுமையான அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியின் செயற்பாடாகவே அமைந்திருக்கின்றன. பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அதிகாரங்களை அவர் சுதந்திரமாகப் பயன்படுத்துகின்ற ஒரு போக்கையே காண முடிகின்றது.
பொதுத் தேர்தல் ஒன்றை நாடு எதிர்நோக்கி உள்ளது. தேர்தலில் தெரிவு செய்யப்படுகின்ற நாடாளுமன்றத்துடன் கூடிய நிலையிலேயே ஜனாதிபதி முழுமையான அரசாங்கத்தின் தலைவராகத் திகழ முடியும். அதுவரையில் ஒரு தற்காலிக அரசாங்கத்தின் தலைவராகவே அவர் இருக்க முடியும்.
இந்தத் தற்காலிக அரசாங்கத்தின், கிட்டத்தட்ட முழுச் செயற்பாடுகளையும் ஜனாதிபதியே முன்னெடுத்து வருகின்றார். இந்தத் தற்காலிக அரசுக்குப் பொறுப்பாகவுள்ள நிலையிலேயே, நிலையானதோர் அரசாங்கத்தின் நிரந்தரமான நிலைப்பாடுகளையும் கொள்கை நிலைமைகளையும் தெளிவுபடுத்துவது போன்ற கருத்துக்களை அவர் வெளியிட்டு வருகின்றார்.
கணிசமான நிறைவேற்று அதிகாரங்களில் முக்கியமானவற்றைக் கொண்டிருக்கப் போகின்ற பாராளுமன்றம் பதவியேற்கும்போது, அதனுடன் இணைந்தே அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் கட்சியே பாராளுமன்றப் பலத்தைக் கொண்டிருந்தாலும்கூட, அரசியலமைப்பு விதிகளுக்கமைவாக அதிகார பலத்தைக் கொண்டுள்ள பிரதமர் ஜனாதிபதியின் அனைத்துக் கொள்கை நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொண்டிருப்பார் என்பதற்கு உத்தரவாதமில்லை.
ஏனெனில் பலரும் எதிர்பார்ப்பது போன்று பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் மஹிந்த ராஜபக்ஷவே அநேகமாகப் பிரதமர் பதவியை ஏற்றிருப்பார். அவர் முன்னாள் ஜனாதிபதியாக – எதேச்சதிகாரப் போக்கில் அதிகாரங்களைக் கொண்டவராக – தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற இறுமாப்போடு ஆட்சி நடத்தியவர்.
அவ்வாறு அதிகார பலத்துடன் திகழ்ந்த அனுபவத்தைக் கொண்டுள்ள அவர் தனது சகோதரனாக இருந்த போதிலும், ஜனாதிபதியின் போக்குகளை அனுசரித்து, அதற்கேற்ற வகையில் நடந்து கொள்வாரா என்பது தீவிர சிந்தனைக்குரிய விடயம். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமரே நிறைவேற்று அதிகாரங்கள் பலவற்றைக் கொண்டிருக்கப் போகின்றார். அத்தகைய நிலையில் இரண்டாம் நிலையில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய ஒரு நிலையில் ஜனாதிபதி அக்கறையற்ற போக்கை வெளிப்படுத்தியுள்ள சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரும் பாராளுமன்றமும் ஒத்திசைவைக் கொண்டிருக்குமா என்பது தெரியவில்லை.
அபிவிருத்தி ஒன்றே நோக்கம். அபிவிருத்தி ஒன்றிலேயே குறியாக இருந்து தனது அரசு செயற்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடனத்தை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார். ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் இணைந்த ஒன்றே அரசாங்கம். பொதுத் தேர்தலில் சட்டபூர்வமான நிரந்தர பாராளுமன்றம் உருவாக்கப்படும் வரையில் காபந்து அரசாங்கமே நாட்டின் நிர்வாக பொறுப்புகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட வேண்டும்.
வைராக்கிய அரசியல் வேண்டாம்
இந்த நிலையில் அபிவிருத்தி மட்டுமே அரசாங்கத்தின் நோக்கம். அபிவிருத்தியின் ஊடாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். குறிப்பாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. அபிவிருத்தியை முழுமையாக முன்னெடுப்பதன் ஊடாகப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் அவர் கடும் போக்கிலான கருத்தையே வெளியிட்டுள்ளார். காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கலாம். அதற்கான சான்றிதழ்களும் நட்ட ஈடும் வழங்கலாம் என்ற அவருடைய கருத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மனம் நோகச் செய்துள்ளது. குறிப்பாக ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பான முறையில் செயலாற்ற வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பை இந்தக் கருத்து உதாசீனம் செய்வதாகவே அவர்கள் உணர்கின்றார்கள்.
இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வே வேண்டும் என்பது சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடாகும். அதனை முற்றாக நிராகரிக்கும் வகையில் கடும் நிலைப்பாட்டில் அதிகாரப் பகிர்வே கிடையாது என்ற அவருடைய கூற்று நிலைமைகளை மோசமாக்கவே வழிகோலும் என்ற அச்சமும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது.
ஜனநாயக வழிமுறைகளையும், செல்நெறியையும் கொண்ட பல்லின மக்கள் வாழ்கின்ற பல மதங்களை வழிபடுபவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மை இன மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற போக்கில் அரசாங்கத்தைக் கொண்டு நடத்த முடியாது. பெரும்பான்மை மக்கள் விரும்பாத விடயங்கள் பற்றி பேசவே முடியாது. அத்தகைய எந்த விடயத்தையும் செய்யவும் முடியாது என்று வைராக்கிய அரசியல் போக்கில் கருத்துக்களை வெளியிடுவதும் நாட்டின் சீரானதோர் ஆட்சிக்கு வழி வகுக்கமாட்டாது.
எனவே, பல்லாண்டு காலமாக பல்லின மக்கள் இணைந்து வாழ்ந்து வந்த வரலாற்றைக் கொண்ட இந்த நாடு பூகோள அரசியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது. பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டை இன ஐக்கியமும், இன நல்லுறவுமே முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்கின்ற அரசியல் வலிமையைக் கொண்டிருக்கும். இதனைப் புரிந்து கொண்டு அரசு அதற்கேற்ற வகையிலான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்வர வேண்டும். இதுவே வறுமை நிலையில் வசதிகளையும் வாய்ப்புக்களையும் எதிர்பார்த்துள்ள இந்த நாட்டின் ஏழை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..
பி.மாணிக்கவாசகம்