அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எப்.) இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பாக ‘தேசிய அறிவியல் அறக்கட்டளை’ விளங்குகிறது. அந்நாட்டில் மருத்துவம் சாராத அறிவியல் மற்றும்பொறியியல் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு இந்த அறக்கட்டளை கணிசமான உதவிகளை செய்து வருகிறது.
இதுதவிர, அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களிலும் இந்த அறக்கட்டளை முக்கியப் பங்காற்றி வருகிறது.
இதனிடையே, இதன் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த பிரான்ஸ் கார்டோவாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த இயக்குநரை தேர்வு செய்யும் பணிகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் அடுத்த இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதனை அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சேதுராமன் பஞ்சநாதன், தற்போது அரிசோனா பல்கலைக்கழகத்தில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கு முன்பு, அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினராகவும், அமெரிக்க ஆலோசனைக் கவுன்சிலின் (கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி) உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
கல்விப் பின்னணி
தமிழகத்தைச் சேர்ந்தவரான சேதுராமன் பஞ்சநாதன், சென்னை விவேகானந்தா கல்லூரியில் 1981-ம் ஆண்டு இயற்பியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். பின்னர், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்த இவர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு துறையில் இளநிலைப் பட்டமும், மெட்ராஸ் ஐ.ஐ.டி.-யில் எலக்ட்ரிக்கல் பொறியியல் கல்வியில் முதுநிலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, கனடாவில் ஒட்டாவா பொறியியல் பல்கலைக்கழகத்தில் எலக்டிரிக்கல் மற்றும் கணினி அறிவியலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.
Eelamurasu Australia Online News Portal