தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறமாட்டார்கள் என்பதே எனது கணிப்பு. அவர்களுக்கு வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர் பதவி.
எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்பார்கள். எவ்வாறு நடந்துகொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்கேற்றவாறு நடிப்பார்கள். கொள்கைகள் பற்றி அவர்கள் எவருமே அலட்டிக்கொள்வதில்லை என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி..வி. விக்கினேஸ்வரன் அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவருடனான நேர்காணலின் முழு விபரம் வருமாறு,
கேள்வி : தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இருந்துவிட்டு நேற்று வரைக்கும் எத்தகைய கொள்கை ரீதியான கருத்துக்களையும் கூறாது இன்று மாற்று அணியைத் தேடுவதென்பதும் ஒன்று சேருவதென்பதும் இன்னும் ஒரு அணியாகத்தான் இருக்குமே தவிர, அது மாற்று அணியாக இருக்க முடியாது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அவ்வகையில் இவ்வாறான விமர்சனங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் : தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2013 இல் தனது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கிய விடயங்களையே நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். ஆகவே புதிதாக கொள்கை ரீதியாக நாங்கள் எதனையும் கூற வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பினர் எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சுயநல வாழ்க்கையில் ஊறி நிற்கின்றார்கள் என்பதே எமது குற்றச்சாட்டு. மாற்று அணி என்பது இயற்கையாக உதிக்க வேண்டும். பழைய போத்தல்களில் இருந்தவற்றை புதிய புட்டிகளில் அடைத்துவிட்டு மாற்று அணி என்று குதிப்பது பயன் அற்றது. தேர்தலுக்காகவே சிலர் நீங்கள் கூறிய வாசகங்களைக் கூறி வருகின்றார்கள். எமது மக்கள் சேவை தேர்தலுக்கு அப்பால் செல்ல வேண்டும். நாங்கள் மாற்று அணியினரா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி :- தமிழ்க்கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்ற கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் அழைப்பினை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் : காலம் கடந்த ஞானமாகவே கருதுகின்றேன். ஒன்றிணைந்த கட்சிகள் பலவற்றை இதுகாறும் ஓரங்கட்டிவிட்டு ஓர்மையுடன் ஒற்றுமை பற்றிக் கூறுவது வியப்பாக இருக்கின்றது. ஒரு வேளை இரா. சம்பந்தனும் எம்.ஏ. சுமந்திரனும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார்களானால் தமிழ்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட அது வழிவகுக்கக்கூடும்.
கேள்வி :- உங்களின் தலைமையில் புதிய மாற்று அணியைக் கொண்ட கூட்டு விரைவில் உருவாகும் என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தின் போது கலந்துரையாடி, ஊடக சந்திப்பிலும் அறிவித்திருந்தார். அவ்வகையில் மத்திய குழுக்கூட்டத்தின் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா ?
பதில் : கொள்கை அடிப்படையில் நாங்கள் சேர வேண்டும் என்ற முடிவை தமிழ் மக்கள் பேரவையில் இருந்த போதே நாங்கள் எடுத்துவிட்டோம். அந்த அடிப்படையில்தான் நாங்கள் வடமாகாண சபையில் ஒருமித்துப் பயணித்தோம். கலாநிதி சர்வேஸ்வரன் எங்களின் பொறுப்புமிக்க அமைச்சராகக் கடமையாற்றினார். ஆகவே ஏற்கனவே கூட்டு உருவாகிவிட்டது. அதன் பயணப் பாதையை இப்பொழுது போட்டுக்கொண்டிருக்கின்றோம். தேர்தல் கூட்டு உருவாகும். அது மாற்று அணியின் அத்திவாரமா என்பதை இருந்து பார்த்துத்தான் கூறமுடியும். அவர்களின் மத்திய குழுக்கூட்ட முடிவு என்ன என்று எனக்குத் தெரியாது. ஆகவே அது பற்றி என்னால் கருத்து வெளியிட முடியாது.
கேள்வி :- புதிய மாற்று அணியைக் கொண்ட கூட்டுக்கு பொதுமக்களிடையே எவ்வாறான வரவேற்பு கிடைக்கும் ?
பதில் : முதலில் அது மாற்று அணியாக மக்களிடையே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். எமது கூட்டுக்கு வடக்கு கிழக்கில் ஆங்காங்கே நல்ல வரவேற்பு இருப்பதை நாம் கவனித்து வந்துள்ளோம்.
கேள்வி : கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியன கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மாற்று அணியில் இணையவுள்ளதாக அளவளாவப் படுகிறது. அவ்வகையில் அவ்வாறானவர்களின் இணைவு குறித்து ?
பதில் : தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன்ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பதே எனது கணிப்பு. அவர்களுக்கு வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்பார்கள். எவ்வாறு நடந்துகொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்கேற்றவாறு நடிப்பார்கள். கொள்கைகள் பற்றி அவர்கள் எவருமே அலட்டிக்கொள்வதில்லை.
கேள்வி : ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்திய 13 ஆவது திருத்தச் சட்டத்தை, கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் முன்னெடுப்பார்களா ?
பதில் :- தற்போதைய ஜனாதிபதி 13 ஆவது திருத்தச் சட்டம் வேண்டாம் என்றே முன்னர் கூறி வந்தார். தற்போதைய பிரதமர், காலத்துக்கு காலம் 13 க்கு அப்பால் என்றெல்லாம் கூறிவிட்டு எதனையும் செய்யவில்லை. தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பதில் அவர்களுக்கு நாட்டமில்லை. சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் தாங்கள் முன்வந்து தருவனவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டு வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இந்த யதார்த்த உண்மையை மோடியவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அவர் கூறிய பின்னரும்
13 ஆவது திருத்தச் சட்டம் புதிய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாம் கூறுவது சரியென்ற முடிவுக்கு மோடியவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி : எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புதிய மாற்று அணி நிறைவான ஆசனங்களை கைப்பற்றமாட்டாது என்ற கதையாடலை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் :- மாற்று அணியொன்று வருவதையிட்டு பீதியடைவதுடன் வரப்படாது என்ற முனைப்பில் இருப்பவர்கள் இலங்கைத் தமிழரசுக்கட்சியினர். தமிழரசுக்கட்சியின் தற்போதைய உண்மையான தலைமை ( அது மாவை அல்ல) அரசியலை விட்டு நீங்கினால் ஒரு வேளை கூட்டமைப்பு பிழைத்துக்கொள்ளும். இல்லை என்றால் தற்போதைய தலைமைக்கு எதிராகவே மக்கள் வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எண்ண இடமுண்டு.
கேள்வி : கிழக்கின் தலைமைத்துவம் எவ்வாறானவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என கருதுகின்றீர்கள் ?
பதில் : கிழக்கு மாகாண மக்களின் குறைகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் ஒரு தலைமைத்துவத்திடம். ஆனால் அத்தலைமைத்துவம் மக்களின் குறைகளை முன்வைத்து அதிகாரம் பெற்ற பின் மக்களை உதாசீனம் செய்யுமாக இருந்தால் மக்களின் கதி அதோ கதி என்றாகிவிடும். கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையாக செயல்படும் அதே நேரம் தமக்கிடையே இருக்கும் முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் களைய முன்வர வேண்டும். அவ்வாறு களையாவிட்டால் மத்திய பெரும்பான்மையான கட்சிகளின் கை ஓங்கிவிடும். ஏற்கனவே தமது மக்கள் தொகையை கிழக்கு மாகாணத்தில் 30 சதவிகிதத்திற்கு பெருக்கிக்கொண்டிருப்பவர்கள் எமது பரஸ்பர சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் அடிப்படையாக வைத்தே எமது இருப்பை ஆட்டங்காண வைத்துவிடுவார்கள் என்பதை நாங்கள் உணர வேண்டும்.
– நேர்காணல் – பாக்கியராஜா மோகனதாஸ்