சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கானியா கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணையை இந்த நாட்டில் உள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்காக இலங்கையின் முன்னாள் சுவிட்சர்லாந்து தூதுவர் ஜோக் பெடரன் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசி ஊடாக உரையாடினார் என்று தெரிவித்த அமைச்சர் அதன் போது சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள இராஜதந்திர தொடர்புகளுக்கு எந்தவித பிரச்சினையுமின்றி முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டாகவும் கூறினார்.
“அந்த சந்தர்ப்பத்தில் சம்பவத்துடன் தொடர்புபட்ட தூதரக அதிகாரி இலங்கைப் பெண் என்பதினால் அது தொடர்பில் நாட்டின் சட்டத்துக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று நான் சுட்டிக்காட்டினேன்” என்றும் அமைச்சர் கூறினார்.
இதேபோன்று அந்த அதிகாரிக்கு தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு. சிலர் இதன் மூலம் தவறான வழியில் நன்மை அடைய எதிர்பார்த்திருப்பதாகவும் ஆனால் இது நீதிமன்றத்தின் முன் உள்ள விடயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal