ஆஸி. தொடரின் போது ஹர்திக் பாண்டியா ஃபிட் என்று கூற என்.சி.ஏ.வுக்கு ‘பிரஷர்’?

பும்ரா காய விவகாரத்தில் வெளியே அவர் சிகிச்சை பெற்று உடற்தகுதிச் சான்றிதழுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியை அணுகிய விவகாரத்தில் என்.சி.ஏ. மறுப்பின் பின்னணியில் பல சமயங்களில் ஒரு வீரரை ஃபிட் என்று கூற நெருக்கடி ஏற்படுவதும் மீண்டும் அவர் உடனேயே காயமடைந்தார் என்றால் என்.சி.ஏ. மீது விமர்சனங்கள் எழுவதும் வழக்கமாகி வரும் விஷயம் தெரியவந்தது .அதாவது காயமடைந்த வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. பும்ரா விவகாரத்தில் அவருக்கு 4 மாதங்களாக சிகிச்சை அளித்தவர் வேறு ஒரு மருத்துவர், உடற்தகுதி சோதனை நடத்தி ஃபிட் சான்றிதழ் அளிக்க என்.சி.ஏ.வை திடீரென பும்ரா அணுகியதால் சிக்கல் ஏற்பட்டன.’

இது தொடர்பாக என்.சி.ஏ. தரப்பு ஒன்று தெரிவிக்கும் செய்தி காய அரசியலின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது..

பும்ரா போலவே ஹர்திக் பாண்டியாவும் காயத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்த போது மெல்போர்னில் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா உடற்தகுதி பெற்றுவிட்டதாக சான்றிதழ் அளிக்க தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிசியோதெரபித் துறைக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது அதன் படியே பாண்டியாவுக்கு உடற்தகுதி பெற்றதாக சான்றிதழ் அளிக்கப்பட்டது என என்.சி.ஏ. வட்டாரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

“பாண்டியாவும் வேறு இடத்தில்தான் சிகிச்சை பெற்றார். பிற்பாடு அவரும் எதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாரோ அதே பிரச்சினை மீண்டும் திரும்பிய போது தேசிய கிரிக்கெட் அகாடமி மீது விமர்சனம் எழுந்தது” என்றார், ஆனால் அந்த டிசம்பரின் போது திராவிட் என்.சி.ஏ பணியில் இல்லை என்றும் அந்தத் தரப்பு விளக்கம் அளித்தது.

ஏன் ஒரு குறிப்பிட்ட வீரர் ஃபிட் என்று கூற அழுத்தம் அளிக்கப்படுகிறது, ஏன் அவருக்குப் பதில் நல்ல வேறு மாற்று வீரர் இருக்கும் போது குறிப்பிட்ட காயமடைந்த வீரரை முழு குணம் அடைவதற்கு முன்பாகவே ஏன் ஃபிட் என்று கூற நெருக்கடி அளிக்கப்படுகிறது? யார் இந்த அழுத்தத்தை அளிக்கின்றனர்? வணிக சக்திகளின் கை ஓங்குகிறதா? என்ற கேள்விகளெல்லாம் விடை அறிய முடியா புதிர்களே