யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது.
பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளது. அங்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்தச் சிலை சிறைச்சாலைக்கு முன்பாக வீதியில் அமைக்கப்பட்டது.
இந்தச் சிலை கைதி ஒருவரால் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. சிறைச்சாலைக்கு உள்ளே இருந்த இந்தச் சிலை நேற்று சிறைச்சாலைக்கு வெளியே எடுத்து வரப்பட்டது. அந்தச் சிலையை மூடி துணியால் கட்டடப்பட்டிருந்தது.
முன்னதாக சங்கமித்தை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்திறங்கிய காட்சி சிறைச்சாலையின் சிலை வைக்கப்பட்ட இடத்தில் வரையப்பட்டது.
இவ்வாறு சிறைச்சாலைக்கு வெளியே வீதியில் பௌத்த சின்னங்கள் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ரப்பு எழுந்தது. அந்த இடத்தில் இன்று காலை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கூடினர்.
அவர்களின் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய சிலை அந்த இடத்திலிருந்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.
இதேவேளை வடமாகாண சபையின் முன்னாள். உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , சங்கமித்தையின் வரலாற்றை சித்தரிக்கும் ஓவியம் போன்று , யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னான சங்கிலியனின் வரலாற்றை சித்தரிக்கும் ஓவியத்தை வரைய அனுமதிக்க வேண்டும் என சிறைச்சாலை அத்தியட்சகரிடம் கோரினார். அதற்கு எழுத்து மூலம் அனுமதி கோருமாறும் , அதனை சிறைச்சாலை திணைக்களத்திடம் அனுமதி கிடைத்ததும் ஓவியம் வரைய அனுமதிக்கலாம் என தெரிவித்தார்.