தொடர்ந்து ஆஸ்திரேலிய காவலில் தமிழ் அகதி குடும்பம் !

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரிய ஈழ தமிழ் குடும்பத்தை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியிருக்கும் சூழ்நிலையில், அவர்கள் மேலும் 2 மாதங்கள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

“இந்த குடும்பத்தை மறந்து விடாதீர்கள்,” எனக் கூறியுள்ளார் இக்குடுமப்த்தின் வழக்கறிஞர் கரினா ஃபோர்ட். கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது ஆஸ்திரேலிய அரசு.

பிரியா, நடசேலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கைக்கான அத்தனை விதமான சட்ட வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இரண்டு வயது குழந்தை தருணிகாவுக்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டால் இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய சூழல் ஏற்படலாம் என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக விரைவில் நடக்கக்கூடிய நீதிமன்ற விசாரணை முக்கியத்துவம் மிகுந்ததாக பார்க்கப்படுகின்றது.

இதுபோன்ற பெரும்பாலான விவாகரங்களில் வழக்கு நடக்கும் போது தடுப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வழக்கு நடக்கும் போது அவர்கள் ஏன் ஆஸ்திரேலிய சமூகத்தில் வாழக் கூடாது,” என கேள்வி எழுப்பியிருக்கிறார் வழக்கறிஞர் ஃபோர்ட். “உண்மையில், இதில் எந்தவிதமான தர்க்கரீதியான காரணமும் இல்லை. இது இரண்டு குழந்தைகளை கொண்ட குடும்பம். இவர்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்கள் கிடையாது. அப்படியே தடுப்பில் வைத்திருக்க வேண்டும் என்றாலும் கிறிஸ்துமஸ் தீவில் வைக்க வேண்டிய தேவையில்லை,” என்கிறார் ஃபோர்ட். இக்குடும்பம் முன்பு வசித்த குவின்ஸ்லாந்த் பகுதியிலிருந்து சுமார் 4000 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர். இந்திய பெருங்கடலில் உள்ள இத்தீவு, ஆஸ்திரேலியா நிர்வகிக்கும் பகுதியாக இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.