கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் தான் கடத்தப்பட்டு, விசாரணைக்க உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் காரணமாக இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் பாத்திரம் மீண்டுமொரு தடவை முக்கியய கவனத்தைப் பெற்றிருக்கிறது.
பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறியே அந்த ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான ஒரு நிலைவரமாகும்.
அவரின் கடத்தல் தொடர்பாகக் கூறப்பட்ட விபரங்கள் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிசைவாக அமையவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது.
ஆனால், அந்தக் கடத்தல் நாடகத்தின் போது அவர் விசாரணைக்குட் படுத்தப்பட்டு, தொல்லைகளுக்குள்ளாக்கப்பட்டாரா (இதுவே அவரது பிரதான முறைப்பாடு) என்பது இன்னமும் தெளிவற்றதாகவே இருக்கிறது.
அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கிரிமினல் வழக்குகளை விசாரணை செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவருக்கு சுவிட்ஸர்லாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டது பற்றிய தகவல்கள் வெளிக்கிளம்பியதைத் தொடர்ந்து உடனடியாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
செல்வாக்கு மிக்க மேற்கு நாடான சுவிட்ஸர்லாந்துடனான உறவுகள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்று புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதகாலம் கூடக் கடந்துவிடாத நிலையில் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது.
கடந்த 5 வருடங்களாகப் பதவியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான முன்னைய அரசாங்கம் சர்ச்சைக்குரியவையாக முன்னர் இருந்த விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால் அந்த முயற்சிகள் அந்த அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பெரும் பாதகமாக அமைந்துவிட்டன. அதை ஜனாதிபதித் தேர்தலில் காணக்கூடியதாக இருந்தது. அந்த விவகாரங்கள் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரையும், அதன் முடிவிற்குப் பின்னரான நிலைவரங்களையும் சுற்றியவையாகவே இருந்தன.
மறுபுறத்திலே, சர்வதேச சமூகத்திலிருந்து இராணுவ அதிகாரிகளும், கேந்திர முக்கியத்துவ விவகார ஆய்வாளர்களும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இலங்கை கையாண்ட வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு வந்தனர்.
அதேவேளை இலங்கைப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காகப் பொறுப்புக் கூறப்படவேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் சமூகம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களினால் கோரப்பட்டது.
சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கடந்த 5 வருடகாலத்தின் போதும் மேற்கூறப்பட்ட ஒரு பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பான அணுகுமுறைகளே முக்கியத்துவம் பெற்றிருந்தன. அண்மையில் இராணுவ அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு வைபவமொன்றில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஜனவரி ஆட்சிமாற்றம் குரோத உணர்வு கொண்ட அந்நியப்படையொன்று ஆக்கிரமித்து இலங்கையைக் கைப்பற்றியது போன்றதாகவே பெரும்பாலும் இருந்தது என்று குறிபபிட்டிருந்தார்.
இதனால் இரண்டு முக்கிய விளைவுகள் ஏற்பட்டதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். முதலாவதாக நாட்டின் புலனாய்வுச்சேவைகள் முற்றுமுழுதாகச் செயலிழக்கச் செய்யப்பட்டன. அதன் காரணமாக அனர்த்தம் மிகுந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு முன்னாள் அரசாங்கத்தினால் முடியாமற்போனது. ‘புலனாய்வுச் சேவைகளின் உறுப்பினர்கள் போலிக்குற்றச்சாட்டுக்களின் பேரில் முன்னாள் அரசாங்கத்தினால் கொடுமைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய நிலையை புலனாய்வுச் சேவைகளை சேர்ந்தவர்கள் மாத்திரம் எதிர்நோக்க வேண்டியிருக்கவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது ஆயுதப்படைகளுக்குத் தலைமை தாங்கிய உயர் கட்டளைப் பீடமும், சகல வகையான முறைப்பாடுகளுக்கும் பதிலளிக்குமாறு ஊடகங்களின் பரபரப்பான விளம்பரத்துடன் பொலிஸார் முன்னிலையில் நிறுத்தப்பட்டது.
தேர்தல் வாக்குறுதி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 அக்டோபரில் முன்னைய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட (இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலானது) சர்ச்சைக்குரிய 30ஃ1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகும் என்பது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாகும். ‘நாம் எப்பொழுதுமே ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுவோம். ஆனால் முன்னைய அரசினால் கைச்சாத்திடப்பட்ட அந்தத் தீர்மானத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இணக்கப்பாட்டின் ஒரு தரப்பு என்ற வகையில் நாம் அதை ஏற்கனவே நிராகரித்திருக்கிறோம்” என்று அவர் கூறியிருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின்படி பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றம் போர்க்குற்றங்களுக்காக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு நீதி விசாரணைப் பொறிமுறையை நிறுவுதல் உட்பட முப்பதிற்கும் அதிகமான கடப்பாடுகளை நிறைவேற்றுவதாக முன்னைய அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. மனித உரிமைகள் பாதுகாவலர்களின் கருத்துக் கோணத்திலிருந்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஆதரித்த பலரும் உத்தேச நீதி விசாரணைப் பொறிமுறையை கலப்பு நீதிமன்றம் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும், விசாரணையாளர்களையும் கொண்டது) என்று வர்ணித்தனர். அந்தக் கலப்பு நீதிமன்றம் என்பது அதை எதிர்த்தோருக்கு ஒரு இடிதாங்கியாக மாறியது. கலப்பு நீதிமன்றத்தைப் பற்றிப் பெரிதுபடுத்திப் பேசப்பட்டதன் விளைவாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அந்தத் தீர்மானம் முழுவதும் போரில் வெற்றியைப் பெற்றுத் தந்தவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலானது என்று மக்கள் மனதில் படிந்துவிட்டது.
பாதுகாப்புச் சேவைகள் கட்டளையகம் மற்றும் கல்லூரியில் பட்டம்பெற்று வெளியேறிய இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் அண்மையில் நிகழ்த்திய உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போரில் வெற்றி பெற்றவர்களுக்குத் தண்டனை வழங்கப்படப்போகிறது என்று மக்கள் மத்தியிலும், படையினர் மத்தியிலும் இருந்த கவலையைத் தணிக்கும் நோக்கில் கருத்து வெளியிட்டார். கடந்த 5 வருடகால அநீதிகளை அரசாங்கம் நிவர்த்தி செய்யும் என்றும், எமது ஆயுதப்படைகளுக்கு உரித்தான மதிப்பையும், கௌரவத்தையும் மீட்டெடுக்க சர்வதேச மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் மத்தியில் கிளம்பிய கடுமையான எதிர்ப்பின் காரணமாக ஜெனீவா தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த சர்வதேச நீதிபதிகள் தொடர்பான நிலைப்பாட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கனவே பின்வாங்கியிருந்தனர் என்பது இந்தப் பின்புலத்தில் கவனிக்கத்தக்க முக்கிய விடயமாகும். ஜெனீவா தீர்மானத்தின் பெரும்பாலான பகுதிகள் பொதுமக்களின் ஆதரவைப் பெறக்கூடிய உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் உட்பட இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை ஒப்படைத்தல், வழமை நிலையை மீள ஏற்படுத்துதல் என்பவற்றைப் பற்றியதாகவே இருந்த போதிலும் அந்தத் தீர்மானத்தைப் படைவீரர்கள் மீது வழக்குத் தொடுப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டது என்று காண்பித்தமை மிகவும் துரதிஷ்டவசமான ஒரு நிலைவரமாகும். இந்த முக்கியமான செய்தியை அந்த ஜெனீவா தீர்மானத்தில் கையெழுத்திட்ட முன்னைய அரசாங்கம் ஆதரித்துக் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.
வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள்
புதிய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது கடமைப்பொறுப்புக்களை முறைப்படி ஏற்றுக்கொண்ட பிறகு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் முன்நிலையில் உரையாற்றுகையில் அரசாங்கத்திற்கு அதன் வெளியுறவுக்கொள்கையில் முன்னுரிமை வழங்கவிருக்கும் விடயங்களைக் குறிப்பிட்டார். முன்னைய அரசாங்கத்தின் கீழ் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளை மீள்பரிசீலனை செய்யப்போவதாக அவர் தெரிவித்தார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு, சுயாதிபத்தியம் மற்றும் ஒருமைப்பாடு மீது எதிர்மறையான தாக்கமொன்றைக் கொண்டிருந்த எந்தவொரு வெளிநாட்டு உடன்படிக்கையும் மீளாய்விற்கு உட்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் தினேஷ் குணவர்தன கூறினார். இலங்கையால் இணையனுசரணை வழங்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30ஃ1 தீர்மானம் உட்பட பல சர்ச்சைக்குரிய உடன்படிக்கைகள் மீளாய்விற்கு உட்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்திருப்பவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதும், அவர்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதும் ஐ.நாவின் ஆணையுடனான நிலைமாறுகால நீதிமுறைமையின் இன்றியமையாத ஓரங்கமாகும். இதுவே மனித உரிமைகள் அமைப்புக்களின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. இதை எவ்வாறு சிறந்த முறையில் பெற்றுக்கொள்வது என்பதே கேள்வியாகும். நீதிமுறைமை முற்றுமுழுதாக நிலைகுலைந்து போகாத நாடுகளில் தீர்மானங்களை மேற்கொள்ளும் பதவிகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவருவதற்குக் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. நிலைமாறுகால நீதியைப் பொறுத்தவரை மிகவும் அண்மைக்காலத்தில் வெற்றிகரமான செயன்முறையை முன்னெடுத்த நாடாக விளங்கும் கொலம்பியா ஆலோசகர்கள் அந்தஸ்த்தில் மாத்திரம் வெளிநாட்டு நிபுணர்களை வரவழைத்து, விசாரணைகள் உள்நாட்டு நீதிபதிகளின் தலைமையில் நடத்தும் பாதையொன்றைத் தெரிவு செய்திருந்தது. கலப்பு நீதிமன்றம்தான் அவசியமானதொரு வழிமுறையாக இருக்கவேண்டும் என்றில்லை. கம்போடியாவில் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கலப்பு நீதிமன்றமுறை 14 வருடகால விசாரணைகளின் பின்னர் 3 பேரை மாத்திரமே குற்றவாளிகளாகக் கண்டு தீர்ப்பு வழங்கியது. அந்த விசாரணைக்கான செலவினம் 20 கோடி அமெரிக்க டொலர்களையும் தாண்டியது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி கலப்பு நீதிமன்றமொன்றில் சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்கள் தொடர்பில் அதிலிருக்கும் ஏற்பாட்டை மாற்றியமைத்து தனது நிலைப்பாட்டை இலங்கை பலப்படுத்த வேண்டுமென்றால் இலங்கையின் நீதித்துறை அரசியல் தலையீடுகள் இல்லாதது என்று அரசாங்கத்தினால் காண்பிக்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்பது முக்கியமானதாகும்.
இரத்துச் செய்துவிடுவதற்கு அரசாங்கம் விரும்புகின்ற அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தம் உண்மையில் அரசாங்கத்திற்குப் பலம் தருகின்ற ஒரு மூலமாக இருக்கமுடியும். அந்தத் திருத்தச்சட்டம் நீதித்துறை, பொலிஸ், அரசாங்கசேவை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற முக்கிய அரச நிறுவனங்களின் சுயாதீனத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. சுவிஸ் தூதரக விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெருமளவிற்குப் பெற்றிருக்கும் இன்றைய நிலையில் இலங்கையின் நீதிமுறையின் சுயாதீனத்துவத்தை உலகம் எவ்வாறு பார்க்கப்போகிறது என்பது ஒரு அமிலப் பரீட்சையாக இருக்கப்போகிறது.
இந்த விவகாரத்தில் பொலிஸார் எவ்வாறு விசாரணை செய்கிறார்கள், சட்டமாதிபர் திணைக்களம் தமது வாதத்தை விவகாரத்தின் உண்மைநிலை பற்றி அறுதியும், இறுதியுமான தீர்மானத்தை மேற்கொள்ளப் போகின்ற நீதித்துறை முன்பு எவ்வாறு முன்வைக்கப் போகின்றது என்பனவெல்லாம் இதில் உள்ளடங்கியிருக்கின்றன.
கலாநிதி ஜெஹான் பெரேரா