தமிழ் மக்களின் ஏகோபித்த அர சியல் தலைமையாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விளங் கிய போதிலும், கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமி ழரசுக் கட்சி அதன் பங்காளிக் கட்சிகளுடன் சம அந்தஸ்தும், சம உரிமையும் கொண்டதாகச் செயற்படவில்லை. தமிழரசுக் கட் சியின் வளர்ச்சியிலும், மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதிலுமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தீவிர கவனம் செலுத்தியிருந்தது.
நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஒரு முக்கியமான கால கட்டத்தை வந்தடைந்திருக்கின்றது. தமிழ் அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலுவாக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது. இந்தத் தேவை காலம் காலமாக நிலவி வந்துள்ள போதிலும் இப்போதைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்வதற்கு தமிழ்த் தரப்பின் அரசியல் திரட்சி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் நீண்ட காலமாகத் தொடர்கின்ற போதிலும், இறுக்கமான ஒற்றுமையுடன் அது முன்னெடுக்கப்படவில்லை. தமிழ் அரசியல் வரலாற்றில் இது மிகக் கசப்பான ஓர் அனுபவமாகப் பதிவாகி உள்ளது.
இன ரீதியான ஒடுக்குமுறைக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த ஒடுக்குமுறை காலத்துக்குக் காலம் அரசியல் சூழலுக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த ஒடுக்குமுறையை ஒன்றிணைந்ததோர் அரசியல் போராட்டத்தின் ஊடாக எதிர்கொள்ள அவர்கள் தவறியிருக்கின்றார்கள். அரசியல் ரீதியான ஒற்றுமையின்மை என்பது இன அடக்கு முறைக்குச் சமாந்தரமாக, பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகின்றது.
தமிழ் அரசியல் தரப்பு என்பது பன்முகப்படுத்தப்பட்டதாகப் பரிணமிக்கவில்லை. இன ரீதியான ஒரு வட்டத்துக்குள்ளேயே அது ஒடுங்கிக் கிடக்கின்றது. குறுந்தேசியவாதத்துடன் வரட்டுத் தனமான அரசியல் செயற்பாடுகளிலேயே அது மூழ்கிக் கிடக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் மீது தொடர்கின்ற அரசியல் ரீதியான ஒடுக்குமுறை என்பது எதிரணியில் விரிவானதொரு தளத்தில் வீச்சுடன் செயற்பட்டு வருகின்றது. இன ரீதியான முரண்பாடாக அமைந்துள்ள போதிலும், தமிழ்த் தரப்பைப் போன்று எதிர்த்தரப்பு இன ரீதியான அடையாளத்தைப் பெயரளவில் மட்டும் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் அதனுடைய வலிமையும் வீச்சும் தமிழ் மக்களை நிலைகுலையச் செய்வதாகவே தொடர்கின்றது.
பல முனைகளிலும் பல்வேறு தளங்களிலும் இடம்பெற்று வருகின்ற இந்த இன ஒடுக்குமுறையின் நீள அகலத்தையும், ஆழத்தையும் தமிழ் அரசியல் தரப்பு இன்னும் சரியான முறையில் உணர்ந்து கொள்ளவில்லை.
அரசியல் உரிமை மறுப்பு என்பது பரந்து விரிந்த பரிமாணத்தைக் கொண்டிருக்கின்றது. வெறுமனே அரசியல் உரிமைகள் மட்டும் மறுக்கப்படவில்லை. தமிழ் மக்களின் சமூக உரிமை, மொழியுரிமை, மத உரிமை, பொருளாதார உரிமை, வாழ்வியல் உரிமை என பல்வேறு தளங்களில் இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மறைமுகச் செயற்பாடுகளின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றன.
தனித்துவ அடையாளச் செயற்பாடுகள்
ஆனால் அந்த உரிமைகள் மறுக்கப்படுகின்ற நிலைமையை அதன் சீரிய தன்மையை தமிழ் அரசியல் தரப்பு உணர மறுக்கின்றது. அல்லது அந்த யதார்த்தத்தை நன்கு தெரிந்து கொண்டு, அறியாததைப் போன்று அரசியல் ரீதியாகப் பாசாங்கு செய்கின்றது என்றே கூற வேண்டியுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைக்கான தாயகம், சுயநிர்ணயம், பகிரப்பட்ட இறைமையுடன் கூடிய பிராந்திய சுயாட்சி என்பது போன்ற அடிப்படை நிலைமைகளைக் கொண்டு அது தமிழ்த் தேசியமாக அரசியலில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அடையாளத்தின் கீழேயே அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புக்களும் – ஏன் சமூக அமைப்புக்களும் கூட பெயரிடப்பட்டு, அதற்கான செயற்பாடுகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.
ஆரம்ப காலத்தில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்ற இரண்டு பெரும் சக்திகளாகத் திகழ்ந்த அரசியல் அமைப்புக்கள் ஆயுதப் போராட்ட காலத்தில் பல்வேறு பிரிவுகளாக தமிழ் ஈழம் என்ற தனிநாட்டை இலக்காகக் கொண்டு தமக்கான பெயர்களைச் சூட்டிக்கொண்டன. தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு போன்ற பெயர்களில் அந்த ஆயுதமேந்திய அமைப்புக்கள் செயற்பட்டிருந்தன.
தீவிரவாதப் போக்கில் போராட்டம் நடத்திய ஆயுதமேந்திய குழுக்களுக்கு மறுபுறத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை மலையகக் கட்சியாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் இணைத்துக் கொண்டு செயற்பட்டன. ஆயுதமேந்திய போராட்டம் மேலெழுந்த போது மிதவாத அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் மந்தமடைந்தன.
இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து இலங்கையில் காலடி எடுத்து வைத்த இந்திய அமைதிப்படை காலத்தில் விடுதலைப்புலிகளைத் தவிர ஏனைய அமைப்புக்கள் ஆயுதக் குழுக்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பின. அந்த அமைப்புக்கள் தேர்தலில் பங்கேற்பதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி களம் அமைத்துக் கொடுத்திருந்தது. ஆயினும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய ஈ.பி.டி.பி. தனித்து சுய அடையாளத்தில் ஜனநாயக வழிமுறையில் தேர்தலில் பங்கேற்றது. அது தொடர்ந்து தனிக்கட்சியாக இன்னும் செயற்பட்டு வருகின்றது.
விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கி, அவர்கள் தனிச் சக்தியாக யுத்தத்தில் ஈடுபட்டபோது பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணியும் செயலிழந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போன்றதோர் அரசியல் அமைப்பின் அவசியத்தை உணர்ந்த தமிழ்த்தரப்பினால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு விடுதலைப்புலிகளும் பச்சை விளக்கைக் காட்டியிருந்தனர்.
ஆயுதப் போராட்ட காலத்தில் எவ்வாறு ஆயுத குழுக்கள் தனித்தனியாக இயங்கினவோ அதேபோன்று விடுதலைப்புலிகளின் காலத்திலும், யுத்தம் முடிவடைந்ததன் பின்னரும் அந்த அரசியல் கட்சிகளும், ஏனைய அரசியல் கட்சிகளும் தனித்துவ அடையாளத்துடன் இயங்கும் நிலைமை தொடர்ந்தது. தொடர்கின்றது.
குடும்ப எதேச்சதிகாரத்தின் வீழ்ச்சி
தமிழ்த் தரப்பில் அரசியல் கட்சிகள் தனித்துவமான அடையாளத்துடன் செயற்படுவதிலேயே கவனமாக இருக்கின்றன. ஆனால் அவற்றின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியத்தையும், தமிழ் மக்களையும் இன ரீதியாக அடையாளப்படுத்துவதிலேயே அதிகம் கவனக்குவிப்பைக் கொண்டிருக்கின்றன.
ஆனால் எதிர்த்தரப்பாகிய பேரின அரசியல் கட்சிகள் சிங்கள பௌத்த தேசியத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து கிடந்தாலும் பெயரளவில் முழு நாட்டையும் பிரதிபலிப்பதாகவே தங்களுடைய அடையாளங்களைப் பேணி வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன என்ற பொதுமக்கள் கட்சி என்பவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும்.
அந்தக் கட்சிகளும் பெயரளவிலான தமது தனித்துவத்தைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் சக கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்தாலும், தமிழ் மக்களுடைய விடயங்கள் அல்லது விவகாரங்களில் அவைகள் அனைத்தும் ஒரே இலக்கையும் ஒரே நோக்கத்தையும் கொண்டதாக தமக்குள் ஐக்கியப்படுவதைக் காண முடிகின்றது.
தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில் அல்லது இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அந்தக் கட்சிகள் தேசிய மட்டத்தில் பொதுவானதோர் அரசியல் கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்த ஒன்றிணைவையும், ஒரே இலக்கைக் கொண்ட செயற்பாட்டையும் நல்லாட்சி அரசாங்கம் என்ற கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மூலம் சிறந்த உதாரணமாக் கண்கூடாகக் காண முடிந்தது.
ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய மட்டத்திலான இரு பெரும் அரசியல் கட்சிகளாகத் திகழ்ந்தன. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி நடத்தி வந்துள்ளன. இவற்றில் ஒரு கட்சி தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படும்போது அல்லது முற்படுவதாகக்
காட்டுகின்ற அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எதிர்க்கட்சியாகிய மற்ற கட்சி அதற்கு தனது முழு எதிர்ப்பையும் காட்டி, அந்த முயற்சியை முறியடித்துவிடுவதையே தமது வழமையான அரசியல் செயற்பாடாகக் கொண்டிருக்கின்றன.
ஆனால் யுத்தம் முடிவடைந்த ஆறாம் ஆண்டு 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக் ஷ குடும்ப எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டின. அதன் விளைவாக ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
தேர்தலில் ஆதரித்தோரின் எதிர்பார்ப்புகள் நிராகரிப்பு
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும், அரசியல் ரீதியாக அதிசயமான நிகழ்வாகவும் இந்த இரு கட்சி அரசாங்கம் அமைந்தது. பாம்பும் கீரியும் போல அரசியலில் நேர் முரணான நிலைமைகளைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு கிட்டியதாகவே பலரும் நம்பினார்கள். எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அந்த இரு கட்சி அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதாகப் போக்குக் காட்டியதேயொழிய அர்த்தமுள்ளதாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுவதாக நல்லாட்சி அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்கி ஒப்புதல் அளித்தபோதிலும், பொறுப்பு கூறுகின்ற நடவடிக்கைகளையும் இதய சுத்தியுடன் முன்னெடுக்கவில்லை.
நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதாக ஒப்புக்கொண்ட போதிலும், அதனையும் இழுத்தடித்து காலம் கடத்தி ஆட்சி அமைப்பதற்குத் தேர்தலில் உதவி புரிந்த சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணான செயற்பாடுகளையே முன்னெடுத்தன. தமிழ்த்தேசியத்துக்கு எதிரான சிங்கள பௌத்த தேசியத்தை நிலைநாட்டுவதிலேயே அரசு கவனம் செலுத்தியது.
வடக்கு–கிழக்கு இணைந்த தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்காக யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் போர்வையில் தமிழர் பிரதேசத்தில் இருந்து சிங்கள மக்களும் இடம்பெயர்ந்தார்கள் எனக் கூறி சிங்களக் குடியேற்றங்களை வெளிப்படையாகவே நல்லாட்சி அரசு முன்னெடுத்தது.
சிஹல உறுமய, பொதுபல சேனா போன்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் தோற்றத்தையும் அவற்றின் செயற்பாடுகளை
யும் ஊக்குவித்திருந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் போக்கையே நல்லாட்சி அரசாங்கம் பின்பற்றியது. இத்தகைய அமைப்புக்களின் ஆசீர்வாதத்துடன் பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் எவரும் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டன. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் துணையோடு பௌத்த விகாரைகளை அமைக்கும் கைங்கரியங்களும் தாராளமாக இடம்பெற்றன.
இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் நோக்கத்தையும் தமிழர் தாயகத்தின் இனப்பரம்பல் நிலைமையைத் தலைகீழாக மாற்றி அமைப்பதையுமே இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கவில்லை
தமிழ்த்தேசியத்தையே தங்களின் அரசியல் செயற்பாட்டின் உயிர்மூச்சாகக் கொண்டிருப்பதாகப் பெயரிலும் பேச்சுக்களிலும் வெளிப்படுத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போன்ற நிலைமையிலேயே செயற்பட்டிருந்தன.
அழுத்தும் பிரச்சினைகளான வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோருக்குப் பொறுப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிப்பு, படித்த வாலிபர்களுக்கான வேலைவாய்ப்பு, கிராமிய பிரதேச மட்டங்களில் அரச நிதியொதுக்கீட்டின் கீழான அபிவிருத்தி போன்ற விடயங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தினவே தவிர தோலிருக்க சுளையை விழுங்குவதைப் போன்று தமிழ்த்தேசியத்தின் உயிர் நாடியையே அழித்தொழிக்கின்ற அரச நடவடிக்கைகளுக்கு எதிராக முறையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
காகிதப் புலிகளைப் போன்று அறிக்கை அரசியலிலும் ஏனைய தமிழ்க் கட்சிகள், தமிழ் அரசியல் அமைப்புக்களைச் சாடுவதிலும், அவற்றின் குறைபாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்வதுமே தமிழ் அரசியலின் இலக்கணமாகத் திகழ்ந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின் உருவாக்கத்துக்கும், அதன் நிலைபேறான ஆட்சிக்கும் உறுதுணையாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தனது ஆதரவு தளத்தைப் பேரம்பேசுவதற்கான ஒரு களமாகப் பயன்படுத்தவில்லை. அதற்குத் துணியவுமில்லை. குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நலன்களில் அதீத அக்கறை கொண்டு செயற்பட்ட ஒரு போக்கையே பிரதிபலித்தது.
தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் தலைமையாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விளங்கிய போதிலும், கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி அதன் பங்காளிக் கட்சிகளுடன் சம அந்தஸ்தும், சம உரிமையும் கொண்டதாகச் செயற்படவில்லை. தமிழரசுக் கட்சியின் வளர்ச்சியிலும், மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதிலுமே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தீவிர கவனம் செலுத்தியிருந்தது.
அரசியல் ரீதியாக மிகப் பலமான எதிராளியாக விளங்கிய அரச கட்சிகள் தமிழ்த்தேசியத்துக்கு எதிராக மறைமுக நிகழ்ச்சிநிரலில் முன்னெடுத்த நில, பொருளாதார, வாழ்வியல், மத உரித்து, வாழ்வுரிமை என்பவற்றில் நேர் முரணான நிலைப்பாடுகள் குறித்தும் அவை சார்ந்த நடவடிக்கைகள் குறித்தும் அரசாங்கத்திடம் அழுத்தமான எதிர்ப்புகளையும் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்தவில்லை.
பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்திடமும், நாடாளுமன்றத்திலும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் அவ்வப்போது பேச்சுக்களை நடத்தியிருந்தாலும், அழுத்தமான நிலைப்பாடாகவும், அரசாங்கத்துக்கு அர்த்தமுள்ள வகையில் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவே இல்லை.
பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் இழுத்தடிப்பு நடவடிக்கைகளின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அழுத்தமான வகையில் செல்வாக்கைப் பிரயோகித்திருக்க முடியும். ஆனால், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் வழிகாட்டலில் அல்லது அவற்றின் நலன்கள் சார்ந்த நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்தே வந்துள்ளது. இது கூட்டமைப்புத் தலைமையின் தனித்துவமான அரசியல் செயற்பாடாக அமைந்ததே தவிர, தமிழ் மக்களின் நலன்களுக்கான செயற்பாடாக அமையவில்லை. அந்த மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாகவும் அமையவில்லை.
தேர்தல் வெற்றியிலும் பார்க்க முக்கியமானது
பங்காளிக் கட்சிகளுடன் சமநிலையில் செயற்படுவதற்குக் கூட்டமைப்பின் தலைமை தவறியதனால், ஏனைய கட்சிகளை தமிழரசுக் கட்சியின் கட்சி நலன்களுக்காகப் பயன்படுத்திய போக்கு காரணமாகவே கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும் பிளவுகளும் தலையெடுத்தன.
தேர்தலில் மக்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதற்கான கூட்டு முயற்சியாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமை தனது பங்காளிக் கட்சிகளுடனான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இதுவே அதன் பங்காளிக்கட்சிகள் பிரிந்து சென்று தனியாக இயங்குவதற்கும் மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்கு முயற்சிப்பதற்குமான முக்கிய காரணமாகும்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் போக்கில் அதிருப்தியடைந்து, அந்த கூட்டுக்குள்ளிருந்து வெளியேறிய கட்சிகளும், முக்கியஸ்தர்களும் புதிது புதிதாகக் கட்சிகளை உருவாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுகின்றனர். ஏற்கனவே களத்தில் செயல் நிலையில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து பலமுள்ளதோர் தமிழ் அரசியல் அமைப்பாகச் செயற்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பம். எதிர்பார்ப்பு.
அத்தகையதோர் அரசியல் திரட்சியையே இன்றைய அரசியல் சூழலும் தமிழர் தரப்பில் அவசியம் என்பதை வலியுறுத்துகின்ற போக்கைப் பிரதிபலித்துள்ளது. கடும்போக்குடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இறுக்கமான – சிறுபான்மையினருக்கு மாறானதோர் அரசியல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழ் அரசியல் பலமுள்ளதோர் அரசியல் அமைப்பாகப் பரிணமித்து அர்த்தமுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தேவையை புதிய அரசியல் கட்சிகளை உருவாக்குகின்ற தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கனவே தனித்துச் செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டமைப்புக்கு மாற்றாகப் புதியதோர் அரசியல் அமைப்பாகத் திரட்சி பெறுவதிலும் இதயசுத்தியுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. சிறுபிள்ளைத் தனமான காரணங்களை வெளிப்படுத்தி முரண்பாடுகளை வளர்த்து தமிழ் மக்களுக்குரிய பலமானதோர் அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அவர்கள் பின்தங்கிய செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.
அறிக்கை அரசியலும், தமிழ்த்தரப்புக்குள்ளேயான விமர்சன அரசியலுமே அவர்களின் அரசியல் போக்காகத் திகழ்கின்றது. தமிழ் மக்களுக்கான ஒரு பலமான அரசியல் அமைப்பை அல்லது அரசியலையும் ஏனைய விடயங்களையும் உள்ளடக்கியதானதொரு வலுவான அமைப்பை உருவாக்குவதில் அவர்கள் கவனம் சிதறியவர்களாகவே இருக்கின்றனர்.
தமிழ் அரசியலில் இதனால் காணப்படுகின்ற சிதறிய நெல்லிக்காய் மூட்டை போன்ற அரசியல் நிலைப்பாடும், அரசியல் போக்கும், தமிழ் மக்களின் எதிர்கால நலன்களுக்கு ஒருபோதும் பயன்தரப் போவதில்லை. பாரதூரமான விளைவுகளுக்கே வழிவகுக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அரசியல் விடயமல்ல. சிதறுண்ட அரசியல் போக்கிற்குத் தமிழ் அரசியல் தலைமைகள் முடிவுகட்டி காலத்தின் தேவை கருதி ஒன்றிணைந்து ஓர் அமைப்பாகச் செயற்பட வேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். இது வரப்போகின்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அவசியத்திலும்பார்க்க முன்னுரிமையானது. முக்கியமானது.
– பி.மாணிக்கவாசகம்