வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஐந்து அழகிப் பட்டங்கள் கறுப்பினப் பெண்கள் வசமாகியுள்ளது.
மிஸ் யுஎஸ்ஏ, மிஸ் டீன் யுஎஸ்ஏ, மிஸ் அமெரிக்கா, மிஸ் யுனிவர்ஸ் மற்றும் மிஸ் வேர்ல்ட் என 2019 ஆம் ஆண்டின் அழகிப் பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் கறுப்பின அழகிகள்.
கடந்த சனிக்கிழமை (14.12.2019), லண்டனிலுள்ள கண்காட்சி மையத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் மிஸ் ஜமைக்கா, டோனி ஆன் சிங் 69 ஆவது உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற நான்காவது ஜமைக்கா அழகி இந்த டோனி ஆன் சிங் ஆவரார். 23 வயதான இவர், புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் உளவியல் மாணவி ஆவார்.
111 போட்டியாளர்களை வீழ்த்தி உலக அழகிப் பட்டத்தை தன் வசமாக்கிக்கொண்ட டோனி, “செயின்ட் தாமஸ், ஜமைக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து சிறுமிகளே – தயவுசெய்து உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் கனவுகளை அடைவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தக் கிரீடம் என்னுடையது அல்ல, உங்களுடையது. உங்களுக்கும் ஒரு நோக்கம் உள்ளது” என்று டுவீட் செய்தார். இவருக்கு 2018 ஆம் ஆண்டின் உலக அழகி வனேசா மகுடம் சூட்டினார்.
இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட சுமன் ரத்தன் ராவ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
கடந்த வாரம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோஸிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். இவரைத் தொடர்ந்து உலக அழகிப் பட்டத்தையும் கறுப்பினப் பெண் வென்றிருப்பது அந்நாட்டு மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் அந்நாட்டு இளம் பெண்களுக்கு நேர்மறை ஆற்றலை மேம்படுத்த வைத்திருக்கிறது. இந்த வருடம் மட்டுமே, ஐந்து முதன்மை அழகிப் பட்டங்களை வென்றிருக்கிறார்கள் இவர்கள்.
கடந்த ஆண்டு, மிஸ் அமெரிக்கா அமைப்பு, அழகிப் போட்டியிலிருந்து நீச்சல் உடை சுற்றை நீக்கியது. 2012 ஆம் ஆண்டிலிருந்து மிஸ் யுஎஸ்ஏ மற்றும் மிஸ் டீன் யுஎஸ்ஏ அமைப்புகள், திருநங்கைகளைப் போட்டியாளர்களாக அனுமதிக்கத் தொடங்கியது.
இதுபோன்ற ஆரோக்கியமான மாற்றங்களுக்கிடையே, இலகுவான சருமம், நேரான கூந்தல் போன்ற வெள்ளை இனப் பெண்களுடன் தொடர்புடைய `அழகியல்’ என்ற கோட்பாட்டை உடைத்திருக்கிறது இவர்களின் வெற்றி. இந்த மாற்றம் நிச்சயம் சமுதாயத்துக்குத் தேவை. மேலும், இந்த அழகிப் போட்டிகளில் கறுப்பினப் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் ஒருபக்கம் நீண்ட காலமாக இருந்தது. இந்த ஆண்டின் கறுப்பின வெற்றி எல்லாவற்றையும் உடைத்தெறிந்திருக்கிறது.