சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆட்சியாளர்களை விமர்சித்தும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பலர் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர், ‘முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்’ என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். முதல்வர், துணை முதல்வர் வீடுகளுக்கு போலீசார் விரைந்தனர். மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதேபோல் சென்னை தலைமைச் செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கு மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தின் அனைத்து பகுதிகளும் தீவிரமாக சோதனையிடப்பட்டன. இதனால் தலைமைச் செயலகம் இன்று பரபரப்பாக காணப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal