இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்!

தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தி.மு.க.விற்கு மனமே வரவில்லை. மக்களைச் சந்திக்கும் எண்ணமே இல்லை. தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை மிரட்டும் விதமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து நீதிமன்றம் சென்று வருகிறார்கள். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, மற்றவர்கள் எழுதிக் கொடுத்ததை ஸ்டாலின் பேசுகிறார். மக்களிடையே அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகமான செல்வாக்கு இருப்பதால் தேர்தலைச் சந்திக்க தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பயப்படுகின்றன.

 

மத்தியில் தி.மு.க. ஆட்சியில் பங்கு வகித்த போது இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை? இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. துரோகம் செய்து விட்டதாக ஸ்டாலின் கூறுவது பொய்.

இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது. எனவே ஈழத்தமிழர்கள் பற்றிப் பேச தி.மு.க.விற்கு எந்த அருகதையும் கிடையாது. குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

எந்த மதத்தினருக்கும் சிக்கல் ஏற்படாது. இந்தியாவில் வாழும் யாருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று, பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தெளிவுபடுத்தி விட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இதுதொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா, பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதனை மீண்டும் நாங்கள் வலியுறுத்துவோம்.” என்றார்.