பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை!

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2008 வரை ஆட்சி செய்தவர் பர்வேஸ் முஷரப். இவர் தனது ஆட்சியின்போது 2007-ஆம் ஆண்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்.  அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், மூத்த நீதிபதிகளை சிறையில் அடைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2014-ஆம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது முஷரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
தேசத்துரோக வழக்கு விசாரணை தொடங்கியபோது, மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு துபாய் சென்ற முஷரப், அங்கேயே தங்கிவிட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.