“சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டதொரு சம்பவம் என்பது தற்போது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக்கிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி பெற்றுக்கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அரசாங்கத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை இதன்போது தெரிவித்த தூதுவர், “நான் அனைத்து இலங்கையர்களினதும் ஜனாதிபதி ஆவேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டமையை தான் மிகவும் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
“இலங்கையுடனான தொடர்புகள் பலமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் பயனுள்ள வகையில் காணப்படுதல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மகிழ்ச்சியடைகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் சேவையாற்றும் உள்நாட்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட அலுவலர் ஒருவருடன் தொடர்புபட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்த சுவிஸ் தூதுவர், இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நோக்கமும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு இல்லை என வலியுறுத்தினார்.
“இரு நாடுகளின் நன்மைக்காகவும் நாம் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இந்த அசௌகரியமான நிலைமையிலிருந்து மீண்டு, ஏதேனும் தவறான அபிப்பிராயம் காணப்படின் அதனை நீக்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என சுவிஸ் தூதுவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி “கடத்தலுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டதொரு சம்பவமாகும் என்பது தற்போது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊபர் அறிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சீசீரிவி காட்சிகள் போன்ற மறுக்க முடியாத ஆதாரங்கள் இதனை உறுதி செய்கின்றன. எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக ஏதேனும் தரப்பினரின் தேவைக்காக தூதரக அலுவலர் இவ்வாறு செயற்பட்டிருக்கக்கூடும். சம்பவத்துடன் தொடர்புடைய அலுவலர் ஏன் இவ்வாறு செயற்பட்டார் என்பது இன்னும் தெளிவாகவில்லை” என குறித்த விசாரணை பற்றிய முன்னேற்றத்தினை தூதுவருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
சுவிட்சர்லாந்து தூதரகம் செயற்பட்ட விதம் தொடர்பில் தான் எவ்வித தவறையும் அவதானிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததோடு, அச்செயற்பாடு நியாயமானதாகும் என்றும் தமது அலுவலகத்தில் பணிபுரியும் உறுப்பினர் ஒருவர் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் போது தூதரகம் அதில் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகும். என்று ம் குறிப்பிட்டார்.
மேலும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுவிஸ் தூதுவரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி இதனூ டாகவே உண்மை வெளிப்படும் எனவும் தெரிவித்தார்.