காணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது என்கிறார் கோத்தா!

யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில்  6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது.

மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை  வழங்க முடியும்.  இதனைவிட அவர்களை  மீள  கொண்டுவர முடியாது  என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் தொடர்பில் படிப்படியாக நடவடிக்கை  எடுக்கப்படும். மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில்   பரிசீலிக்க  குழுவொன்று அமைக்கப்படும்.  இதேபோன்றே அம்பாந்தோட்டை துறைமுக  விவகாரம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது என்றும்   அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி  செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடியபோதே  ஜனாதிபதி   இவ்வாறு  தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

கேள்வி: வடக்கு, கிழக்கில்  காணாமல் போனோரது  உறவினர்கள்  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெனிவாவிலும்  அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.  இந்த காணாமல்போனோர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள்?

பதில்:  காணாமல்போனோர் பிரச்சினையானது அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான் இதற்கான தீர்வு இழுபட்டு செல்கின்றது. எமது  இராணுவத்தினரிடம் 5000பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்கு  சென்றவர்கள். மீளத்திரும்பி வரவில்லை.  யுத்த பூமிக்கு செல்பவர்கள்   உயிரிழக்கின்றனர்.  உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படமுடியாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுகின்றனர். யுத்தத்தின்போது   புலிகள்  மற்றும் இராணுவத்தினருக்கு  இவ்வாறு   நடந்துள்ளது. யுத்தத்தின்போது 6000  இராணுவத்தினரின் சடலங்கள்  மீட்க்கப்படவில்லை.  யுத்த களத்தில் சடலங்கை மீட்க முடியாத  சூழல் ஏற்படும். அது தொடர்பான அனுபவம் எனக்கு இருக்கிறது.

ஆனால்  சடலங்கள்  மீட்கப்படாவிட்டால்  தனது பிள்ளைகளோ கணவரோ இறந்ததை அந்த குடும்பத்தினர்  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  எமது இராணுவத்தரப்பிலேயே  உடல்கள் மீட்கப்படாதவர்களது  உறவினர்கள் பலர்  சாத்திரக்காரர்கள் குறித்த நபர்  உயிருடன் இருப்பதாக கூறுவதாக கூறுவார்கள். முகமாலை யுத்தத்தின்போது  129   இராணுவத்தினரின்   சடலங்கள்   மீட்கப்படவில்லை.   ஒரு மாதத்திற்குப் பின்னர்  செஞ்சிலுவைச் சங்கம் சிதைந்தநிலையிலான சடலங்களை  எம்மிடம் கொண்டுவந்து ஒப்படைக்கப்பார்த்தது. ஆனால் அடையாளம் தெரியாத அந்த சடலங்களை நாங்கள் பொறுப்பேற்கவில்லை.  ஏனெனில் அடையாளங் காணாத சடலங்களை நாம் எப்படி உறவினர்களிடம் கையளிப்பது.

எமது ஆட்சியின் போத நிலத்தடியில் சிறைகூடங்கள்  உள்ளதாகவும் அதற்குள்  காணாமல்போனவர்கள்  அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்  குற்றம்சாட்டப்பட்டது.ஆனால் கடந்த அரசாங்கத்தில் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது. காணாமல்போனோர்  உயிரிழந்துள்ளதே உண்மையாகும். நாம் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது.

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை  மீளக்கொண்டுவர  முடியாது.   இந்த விடயம் தொடர்பில் இவ்வாறான தீர்வையே காணமுடியும்.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்கு  1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது  உறுதி கூறியிருந்தீர்கள். அதற்கான நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்:   எல்லா விடயத்தையும் ஒன்றாக செய்ய முடியாது. தற்போத நாம் முதல்கட்டமாக வரிச்சலுகைகளை வழங்கியுள்ளோம்.   நுகர்வோருக்கு   இதன்மூலம்  குறைந்த விலைகளில் பொருட்களை வழங்குவதற்கு  நடவடிக்கை  எடுத்துள்ளோம்.  ஆனால் வரிகள் குறைக்கப்பட்ட போதிலும் பொருட்களின் விலைகள்  குறைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.   ஏன்  விலைகள் குறைக்கப்படவில்லை என்று  ஊடகங்களும் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த  விடயம் குறித்து நிதி அமைச்சின் அதிகாரிகளுடனும் நான் கலந்துரையாடியுள்ளேன்.

இதேபோன்று ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர்  நிபுணத்துவம் இல்லாத  1 இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை  எடுத்துள்ளோம். க.பொ.த. சாதாரண  தரம்  சித்தி  பெறாதவர்களுக்கும்   வறுமைக் கோட்டின்  கீழ் வாழ்பவர்களுக்கும் இத்தகைய தொழில்களை  வழங்குவதற்கு   நாம்   நடவடிக்கை எடுத்துள்ளோம்.   ஏழ்மை காரணமாக கல்வி கற்க முடியாத நிலை, சுயதொழில்களை செய்ய முடியாத நிலை, விவசாயம் செய்ய முடியாத நிலை இவ்வாறு பல்வேறு தரப்பினரும்  உள்ளனர்.  எனவே  இத்தகையவர்களுக்கு   நிபுணத்துவம் இல்லாத வேலைகளை வழங்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

பட்டதாரிகள் நியமன விடயத்திலும் சீரான நடைமுறை  கையாளப்படவேண்டியுள்ளது.

கேள்வி:  மிலேனியம் சவால்  ஒப்பந்தம்  தொடர்பில் எத்தகைய  முடிவினை எடுக்கப்போகிறீர்கள்?

பதில்: மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில்  உள்ள விடயங்கள்  தொடர்பில்   பரிசீலனை செய்யவேண்டும். அதில் என்ன விடயங்கள்  அடங்கியிருக்கின்றது.  அதனால் நாட்டுக்கு  ஏற்படும்    நன்மை என்ன? தீமை என்ன?   என்பது குறித்து குழுவொன்றினை அமைத்து ஆராயவுள்ளோம்.

கேள்வி: புதிய ஆண்டு பிறக்கப்போகின்றது.   புதிய ஆண்டில் உங்களுக்குள்ள சவால் என்று எதனைப் பார்க்கின்றீர்கள்?

பதில்: நாம் உறுதியளித்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும். அதுவே  எமக்குள்ள சவாலாகும்.   இந்த  வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை   அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள்,   ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமாகும்.   யுத்தத்தை நிறைவு செய்வதற்கு  அனைவரும்  ஒத்தழைத்தது போல்  இதற்கும் ஒத்துழைக்கவேண்டும்.

கேள்வி: பாராளுமன்றம் 3ஆம் திகதிகூடவுள்ளது. அன்றைய தினம்  உங்களது   அக்ராசன உரையை அடுத்து   மீண்டும் பாராளுமன்றத்தை  ஒத்திவைக்கம் எண்ணம் இருப்பதாக  கூறப்படுகின்றது.  அது குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன?  பாராளுமன்ற  தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவீர்களா?  

பதில்: பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவேன். அதன் பின்னர் மாகாணசபை தேர்தலையும் நடத்துவதற்கு  நடவடிக்கை  எடுக்கப்படும்.

கேள்வி: அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை விவகாரத்தில்  மாற்றங்களை  செய்வீர்களா?

பதில்: இந்த விடயம் தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளது. கட்சியாக நாம் இந்த விடயத்திற்கு  எதிர்ப்பு  தெரிவித்திருந்தோம்.   பாதுகாப்பு சம்பந்தமாக  நான் கூடிய அக்கறை செலுத்துகின்றேன். அனைத்து துறைமுகங்களும் நிர்வாகமும் அரசாங்கத்திடம் இருக்கவேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலில்  எந்த  கட்சியின் சார்பில் எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?

பதில்: பொதுஜன பெரமுனவின் உறுப்பினரானபடியால்தான் நான்  அந்தக்கட்சியில் சார்பில் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட்டேன்.   பாராளுமன்றத் தேர்தலின்போது கூட்டணியாக  போட்டியிடுவது குறித்து  தீர்மானிக்கப்பட்டுள்ளது. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.  பாராளுமன்றத் தேர்தலின்போது  அரசியல் அனுபவமும் பெற்ற  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ   அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுப்பார்.  அதேபோன்றே   செயற்றிறன் மிக்க செயற்பாட்டாளரான பஷில் ராஜபக்ஷ   தேர்தலுக்கான  செயற்பாடுகளை மேற்கொள்வார். நான் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.

தேர்தலில் ஒருவாக்கினையேனும்  கூட பெறக்கூடிய   சின்னத்தை தெரிவு செய்து நாம் போட்டியிடுவோம்.

கேள்வி: 19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவருவீர்களா?

பதில்: ஆம் அந்த சட்டத்தை  மாற்றியமைக்கவேண்டும். அதில் தெளிவற்றத்தன்மை காணப்படுகின்றது. கடந்த அரசாங்கத்திற்குள்  இந்த  தெளிவற்றத்தன்மையால் பிணக்கு ஏற்பட்டது.  யாரிடம் அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் தெளிவற்றத் தன்மை காணப்படுகின்றது. 19ஆவது திருத்த சட்டத்தில்  ஒரு விடயத்தையேனும் நல்ல விடயமாக  நான் பார்க்கவில்லை.  எனவே இதனை  திருத்தி அமைக்கவேண்டும்.