ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி உள்ள தம்பி படம் அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் தம்பி, அக்காள் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தம்பி. சத்யராஜ், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து கார்த்தி அளித்த பேட்டி வருமாறு:- “தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. இந்த படம் குடும்ப கதையை மையப்படுத்தி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு உள்ளது. ‘பையா‘ படத்தை போன்று தனித்தன்மையான, வித்தியாசமான கதையாகவும் நடிப்பிற்கு வாய்ப்புள்ள படமாகவும் தம்பி அமைந்துள்ளது.
அண்ணி ஜோதிகா படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராக வருவார்.

அவருடைய கலாசாரம் எனக்கு பிடித்திருந்தது. அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் பெரிய உழைப்பு தெரிந்தது. இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது.
இப்படத்தின் கதை கோவாவில் ஆரம்பிக்கும். அங்கிருக்கும் மக்களுக்கேற்ப பார்வையை மட்டும் சிறிது மாற்றினோம். அங்கிருந்து கதை மாறும்போது என்னுடைய கதாபாத்திரமும் மாறும். அனைவரும் கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இந்த படம் இருக்கும்.” இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.
Eelamurasu Australia Online News Portal