அவுஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் மரத்தில் சுற்றியிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு!

ஒரு அவுஸ்திரேலிய தம்பதியினர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, தங்கள் கிறிஸ்துமஸ் மரத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரிஸ்பேனைச் சேர்ந்த லியான் சாப்மேன் என்பவரும் அவருடைய காதலியும் வியாழக்கிழமை பிற்பகல் ஹைகேட் ஹில் பகுதியில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

அப்போது பால்கனியில் இருந்த பறவைகள் வழக்கத்திற்கு மாறாக சோகமாக அமர்ந்திருப்பதை அவர்கள் கவனித்துள்ளனர். உடனே லியானின் காதலி அந்த பறவைகளை காணொளி எடுக்க ஆரம்பித்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து இருவரும், வீட்டிற்குள் நுழைய முயன்றபோது 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று கிறிஸ்துமஸ் மரத்தை சுற்றி இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதனால் தான் பறவைகள் சோகமாக பால்கனியில் அமர்ந்திருந்துள்ளன என்பதும் அவர்களுக்கு விளங்கியுள்ளது.

பயத்தில் இருந்த தம்பதி, அதிகாரிகள் யாருக்கும் தகவல் கொடுக்காமல் அப்படியே அதனை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு அதுவாகவே அங்கிருந்து வெளியேறியதாக கூறியுள்ளனர்.

அந்த பாம்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்தாலும், பார்ப்பதற்கு அழகாக இருந்ததாகவும், அதற்கு முன் ஒருமுறை கூட நேரில் பார்த்தது இல்லை என்றும் லியான் கூறியுள்ளார்.