முட்டிக்கொள்ளும் வெளிவிவகார கொள்கை!

லண்­டனின் வெஸ்ட்­மி­னிஸ்டர் நீதி­மன்றம், பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோவை குற்­ற­வா­ளி­யாக அறி­வித்து, தண்­டப்­பணம் செலுத்த  உத்­த­ர­ விட்­டுள்ள விவ­காரம், இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துக்கும், பிரித்­தா­னி­யா­வுக்கும் இடை­யி­லான உற­வு­களில் உர­சல்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

 

கடந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி லண்­டனில் உள்ள இலங்கைத் தூத­ர­கத்­துக்கு முன்­பாக, போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த புலம்­பெயர் தமி­ழர்­களை கழுத்தை அறுத்து விடு­வது போல, சைகை மூலம் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்தார், பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ.

இலங்கைத் தூத­ர­கத்தின் பாது­காப்பு ஆலோ­சகர் பணி­யி­லி­ருந்த அவ­ரது இந்தச் செயல் கடு­மை­யான கண்­ட­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தது, அவ­ருக்கு எதி­ராக, பிரித்­தா­னிய அர­சாங்கம் ஆரம்­பத்தில் நட­வ­டிக்­கை­களை எடுக்க முற்­பட்­டது,

அத்­துடன், அவரை அங்­கி­ருந்து திருப்பி அழைத்துக் கொள்­ளு­மாறும், அப்­போ­தைய வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­ன­வுக்கும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்து, பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ லண்­ட­னி­லி­ருந்து திருப்பி அழைக்­கப்­பட்டார். எனினும், அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க முடி­யாது என்றும், ஜெனீவா பிர­க­ட­னங்­களின் படி அவ­ருக்கு இரா­ஜ­தந்­திர விலக்­கு­ரிமை இருப்­ப­தா­கவும் இலங்கை அர­சாங்கம் கூறி­யி­ருந்­தது.

பின்னர், பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ இரா­ஜ­தந்­திர விலக்­கு­ரி­மையைக் கொண்­டி­ருப்­ப­தாக சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­களை அடுத்து அவ­ருக்கு எதி­ரான நீதி­மன்ற விசா­ர­ணைகள் நிறுத்­தப்­பட்­டன.

எனினும், புலம்­பெயர் தமி­ழர்கள் தாக்கல் செய்த மனுக்­களின் அடிப்­ப­டையில், பிரித்­தா­னி­யாவின் பொது ஒழுங்குச் சட்­டத்தின் இரண்டு பிரி­வு­களை மீறினார் என பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோ­வுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது.

இந்த வழக்கில் பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ முன்­னி­லை­யா­காத நிலையில், விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு கடந்­த­வாரம் தீர்ப்பு அளிக்­கப்­பட்­டது.

அதன்­படி, பிரித்­தா­னி­யாவின் பொது ஒழுங்­குகள் சட்­டத்தின் இரண்டு பிரி­வு­களை மீறி குற்­ற­மி­ழைத்­துள்ளார் என்றும் அதற்­காக 2400 பவுண்ட் தண்­டப்­பணம் செலுத்த வேண்டும் என்றும் வெஸ்ட் மினிஸ்டர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இந்த தீர்ப்பு இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துக்கு கடும் சீற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தாம் பத­விக்கு வந்த சில வாரங்­க­ளுக்குள் இந்த தீர்ப்பு வந்­தி­ருப்­பது தம்மைப் பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­யாகப் பார்க்­கி­றது புதிய அர­சாங்கம்.

தமது தூத­ர­கத்தில் இரா­ஜ­தந்­திர அந்­தஸ்­துடன் பணி­யாற்­றிய பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோவை குற்­ற­வா­ளி­யாக அறி­வித்­தி­ருப்­பது, சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு எதி­ரா­னது என்றும் கரு­து­கி­றது அர­சாங்கம்.

இந்த இரண்­டுக்கும் அப்பால், புலம்­பெயர் தமி­ழர்­க­ளையும், பிரித்­தா­னிய பாரா­ளு­மன்றத் தேர்­த­லையும் இவற்­றுடன் இணைத்தும் பார்க்­கி­றது,

பல கோணங்­களில் இந்த தீர்ப்பை தொடர்­பு­ப­டுத்தி, இலங்­கைக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் சீற்­றத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்தத் தீர்ப்பு வெளி­யாக முன்­னரே, இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­துக்கும் பிரித்­தா­னி­யா­வுக்கும் இடையில் முட்டிக் கொள்ளும் சூழலே காணப்­பட்­டது.

2018இல் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பான தீர்­மா­னத்தைக் கொண்டு வந்த நாடு பிரித்­தா­னியா தான்.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­றிய நிலையில், அதற்குப் பதி­லாக, பிரித்­தா­னிய  தலை­மை­யி­லான நாடு­களே அந்த தீர்­மா­னத்தைக் கொண்டு வந்து நிறை­வேற்­றி­யி­ருந்­தன. அதற்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யி­ருந்­தது.

இந்த இணக்­கப்­பாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் அது நாட்டின் இறை­மையை – அர­சி­ய­ல­மைப்பை மீறு­வ­தான செயல் என்றும் புதிய அர­சாங்­கத்தின் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அமைச்­சர்­களும் நியாயம் கற்­பித்து வருகின்­றனர்.

அதனால், இணை அனு­ச­ர­ணையில் இருந்து விலகிக் கொள்ளப்போவ­தாக இலங்கை அர­சாங்கம் கூறி வரு­கி­றது. ஜெனீவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தவிர்ப்­பது அல்­லது வாக்­கு­று­தி­களிலிருந்து நழுவிக் கொள்­வது என்­பது வேறு விடயம். முன்­னைய அர­சாங்­கமும் அவ்­வாறு தான் நடந்து கொண்­டது.

ஆனால், இணை அனு­ச­ர­ணையில் இருந்து விலகிக் கொள்­வ­தாக அறி­வித்தால், அந்த தீர்­மா­னத்தைக் கொண்டு வந்த நாடுகள் தமக்கு எதி­ராக செய்­யப்­பட்ட போர்ப் பிர­க­ட­ன­மா­கவே எடுத்துக் கொள்ளும்.

தம்­மையும் சர்­வ­தேச கடப்­பாட்­டையும் மதிக்­காமல் நடந்து கொள்ளும் செயற்­பா­டா­கவே பார்க்­கப்­படும். அவ்­வா­றான ஒரு முடிவை எடுக்க இலங்­கையின் புதிய அர­சாங்கம் யோசித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

அதன் விளை­வுகள் குறித்து தான் அதிகம் சிந்­திக்­கி­றது.

எவ்­வா­றா­யினும், ஜெனீவா தீர்­மா­னத்­துக்கு கட்­டுப்­படப் போவ­தில்லை என்ற இலங்கை அர­சாங்­கத்தின் அறி­விப்­பு­களும், எச்­ச­ரிக்­கை­களும், பிரித்­தா­னி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் இரா­ஜ­தந்­திர ரீதி­யான முறு­கலை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட சில நாட்­க­ளுக்குப் பின்னர், கொழும்­பி­லுள்ள பிரித்­தா­னிய தூது­வ­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­தி­ர­னுக்கும் இடையில் ஒரு சந்­திப்பு நடந்­தது.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்­ன­ரான நிலை­மைகள், ஜெனீவா  தீர்­மான அமு­லாக்கம், அடுத்த கட்ட ஜெனீவா நகர்­வுகள் குறித்து இந்தச் சந்­திப்பில் கருத்­துக்கள் பரி­மாறிக் கொள்­ளப்­பட்­டன. இதுவும் அர­சாங்­கத்­துக்கு கொதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

சந்­திப்பு நடந்த சில நாட்­க­ளுக்குப் பின்னர், ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட சுமந்­திரன், ஜெனீவா தீர்­மான விவ­காரம் குறித்து அதற்கு ஆத­ர­வ­ளித்த நாடு­க­ளுடன் ஏற்­க­னவே பேச்­சுக்­களை ஆரம்­பித்து விட்டோம் என்று கூறி­யி­ருந்தார்.

கால முறைப்­படி வரும் மார்ச் மாதம், இலங்கை குறித்த அறிக்கை ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் சமர்ப்­பிக்­கப்­பட்டு, விவாதம் நடத்­தப்­பட வேண்டும். இந்த நிலையில், புதிய அர­சாங்கம் இந்த நிலை­மையை எவ்­வாறு எதிர்­கொள்ளப் போகி­றது என்ற சிக்­க­லான கேள்வி இருந்து வரு­கி­றது.

இவ்­வா­றான சூழலில், ஜெனீவா நகர்­வுகள் குறித்து பிரித்­தா­னியா இப்­போதே கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தரப்­பு­க­ளுடன் ஆலோ­ச­னையில் இறங்­கி­யி­ருப்­ப­தை­யிட்டு இலங்கை அர­சாங்கம் எச்­ச­ரிக்கை அடைந்­தி­ருக்­கி­றது.

அதே­வேளை, பிரித்­தா­னி­யாவில் கடந்த 12ஆம் திகதி நடந்த தேர்­த­லுக்­காக கொன்­சர்­வேட்டிவ் கட்சி வெளி­யிட்ட தேர்தல் அறிக்­கையும், கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்­கத்தை எரிச்­ச­ல­டைய வைத்­தி­ருக்­கி­றது.

இலங்­கையில் பிரச்­சி­னையைத் தீர்க்க இரண்டு தேசங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற தொனியில், கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் தேர்தல் அறிக்கை அமைந்­தி­ருப்­ப­தாக வியாக்­கி­யா­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதற்கும் இலங்கை அர­சாங்­கத்தில் உள்­ள­வர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி வரு­கி­றார்கள். இலங்­கையை பிள­வு­ப­டுத்த பிரித்­தா­னியா முயற்­சிக்­கி­றது என்று குற்­றம்­சாட்­டு­கி­றார்கள்.

நாட்டின் வர­லாறு தெரி­யாமல் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் உதய கம்­மன்­பில, காலனி ஆதிக்­கத்­துக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் தமி­ழ­ரசு எப்­போதும் இருந்­தி­ருக்­க­வில்லை என்று கூறி­யி­ருக்­கிறார்.

போர்த்­துக்­கேயர் வரு­வ­தற்கு முன்னர், கோட்டை, கண்டி, யாழ்ப்­பாணம் என மூன்று இராச்­சி­யங்கள் இருந்­தன என்ற வர­லாறு பாடப் புத்­த­கங்­களில் கூட உள்­ளதை அவர் மறந்து விட்டார்.

இரு தேசங்­க­ளாக அறி­விப்­பதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணலாம் என்­பது போன்ற கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் தேர்தல் அறிக்­கையை  அர­சாங்கம் கடு­மை­யான சவா­லாக கரு­து­கி­றது.

இந்தச் சூழலில் தான் வெஸ்ட்­மி­னிஸ்டர் நீதி­மன்றம், பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோ­வுக்கு எதி­ரான தீர்ப்பை அளித்­தி­ருந்­தது.

பிரித்­தா­னி­யாவில் தேர்தல் நடக்­க­வுள்ள நிலையில், அங்­குள்ள புலம்­பெயர் தமி­ழர்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே, இந்த தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டது போல, இலங்கை அர­சாங்கம் குற்­றம்­சாட்டி வரு­கி­றது.

பிரித்­தா­னி­யாவின் நீதித்­துறை, அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக தீர்ப்­பு­களை அறி­விக்கும் அள­வுக்கு மோச­மா­னதோ- தரம் தாழ்ந்­ததோ அல்ல. அந்த விடயம் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் தெரி­யா­தது அல்ல.

ஆயினும், சிறு­பிள்­ளைத்­த­ன­மாக வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்தக் குற்­றச்­சாட்டு, பிரித்­தா­னி­யா­வுடன் இலங்கை அர­சாங்கம் கிட்­டத்­தட்ட வெளிப்­ப­டை­யா­கவே மோத­லுக்கும் தயா­ராகி விட்­டது என்­ப­தையே எடுத்துக் காட்­டு­கி­றது.

பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்­டோவின் இரா­ஜ­தந்­திர விலக்­கு­ரி­மையை வைத்து அவரை இந்த வழக்கில் இருந்து தப்­பிக்க வைக்க அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது.

ஆனால் வெஸ்ட்­மி­னிஸ்டர் நீதி­மன்றம் அந்த இரா­ஜ­தந்­திர விலக்குரிமையை நிராகரித்தே தீர்ப்பை அளித்திருக்கிறது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.

இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் குறுக்கீடு செய்ய முனையவில்லை. அதற்கு தேர்தல் காலமாக இருந்ததும், தேர்தலில் இலங்கைத் தமிழரின் வாக்குகள் பலம்மிக்கவையாக இருந்ததும்  ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த நிலையில், பிரித்தானியாவிலும் புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்காவுடன் தொடங்கிய மோதல்கள்  இப்போது மெல்ல மெல்ல தணியத் தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானியா, சுவிஸ் என அந்த முரண்பாடுகள் திசை திரும்பியிருக்கின்றன.

எல்லா நாடுகளுடனும் நல்லுறவு என்ற இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கொள்கை ஆரம்பத்திலேயே ஆட்டம் காணத் தொடங்கி விட்டதை தான் இந்த முரண்பாடுகள் கோடிட்டு காட்டி நிற்கின்றன.

– ஹரிகரன்