குற்றப்புலனாய்வுப் பிரிவில் சுவிஸ் தூதரக அதிகாரி ஆஜர்!

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிற்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி, வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற குறித்த பெண் அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அத்துடன் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதுடன், இறுதியாக அவர் கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.

தான் கடத்தப்பட்டதாக தெரிவித்து செய்த முறைப்பாட்டுக்கமையவே குறித்த சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அங்கொட மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் அதிகாரிக்கு இன்றுவரை வெளிநாடு செல்ல கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.