ஜனாதிபதியும் இந்த விடயத்தை உணர்ந்துள்ளார். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல அவர்களின் அபிமானத்தை காப்பாற்றுவது அவசியம். கூட்டமைப்புடன் பேசுவதில் அர்த்தமில்லை.
நாட்டில் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்லும் வகையிலும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையிலும் செயற்பட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.
என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்காக தனியான ஒரு அமைச்சை உருவாக்கவேணடும். தமிழ் பேசும் அரசியல்வாதிகளை அன்றி மக்களை இணைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும். அந்த பொறுப்பை என்னிடம் வழங்கினால் அதனை நான் சிறப்பாக வழி நடத்தி வடக்கையும் தெற்கையும் இணைப்பேன் என்றும் விஜேசதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நாட்டின் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்வாற்கு ஜனாதிபதிக்கு இன்னும் அவகாசம் உள்ளது. யுத்தம் முடிந்ததும் அப்போதைய ஜனாதிபதி அபிவிருத்திக்கு முககியத்துவம் அளித்தார். ஆனால் அதனூடாக தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை. இதனை உணர்ந்து நாம் அந்த மக்களின் அபிமானத்தை பாதுகாக்க முன்வரவேண்டியது முக்கியமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
புதிய அரசாங்கத்தின் நகர்வுகள் தமிழ் பேசும் மக்களுக்கான வேலைத்திட்டங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அடுத்தக் கூட்டத் தொடர் உளளிட்ட விடயங்கள் குறித்து கேசரியுன் கருத்துப் பகிர்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
நாட்டின் தமிழ் பேசும் மக்களின் மனங்களை நாங்கள் வெல்லவேண்டியுள்ளது. அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை.
காரணம் தமிழ்க் கூட்டமைப்பினரும் புலம்பெயர் தமிழ் மக்களும் ஒருபோதும் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படவில்லை. மாறாக அவர்கள் தங்களின் நலனுக்காகவே கடந்த காலங்களில் செயற்பட்டனர்.
நாம் நேரடியாக தமிழ் மக்களுடன் ஈடுபாட்டுடன் செயற்படுவதற்கான ஒரு வழியை புதிய அரசாஙகம் ஏற்படுததிக்கொள்வது அவசியமாகும். தற்போது ஜனாதிபதி கோத்தபாய தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கம் மக்களின் மனதை வெல்லும் வகையில் செயற்பட்டுவருகின்றது.
எனவே தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் அரசாங்கம் ஏதாவது விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய தேவை உள்ளது.
அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன? அவர்களின் உணர்வு என்ன? தமிழ் மக்களின் அபிமானத்தை எவ்வாறு காப்பாற்றுவது ? போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுப்பது அவசியமாகின்றது.
விசேடமாக இதற்காக தனி ஒரு அமைச்சை உருவாக்கவேண்டும். அதனூடாகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியமாகின்றது. வடக்கையும் தெற்கையும் இணைக்கவேண்டும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் முன்னர் இணைந்து ஈடுபாட்டுடன் செயற்பட்டுள்ளனர். எனினும் 1978 ஆம் ஆண்டின் பின்னரே நிலைமை மாற்றமடைந்தது.
எனவே மீணடும் இரண்டு சமூகங்களும் இணைந்து புரிந்துணர்வுடன் பணியாற்றும் சூழல் உருவாக்கப்படவேண்டும். அது கடினமானதல்ல. அதுவொரு சாத்தியமான விடயமாகும். ஆனால் தமிழ் மக்களுடன் நேரடியாக அரசாஙகம் ஈடுபடவேண்டும். அதற்காகவே இந்த விடயதானத்துக்காக தனித்த அமைச்சை உருவாக்குவது சிறந்ததாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
தன்னுடன் தமிழ் பேசும் மக்களை அரவணைத்துச் செல்லவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கருதுகின்றார். அதற்கு அவருக்கு இவ்வாறான ஒரு திட்டம் தேவைப்படுகின்றது. அதனை முன்னின்று கொண்டுசெல்ல நான் தயாராக இருக்கின்றேன். அந்த பொறுப்பை என்னிடம் தந்தால் நான் அதனை சிறப்பாக வழி நடத்தி செய்து முடிப்பேன். வடக்கையும் தெற்கையும் இணைப்பேன்.
இவ்வாறான ஒரு விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்தால் ஒரு வருட காலத்தில் தமிழ் தேசிய பிரச்சினைக்கும் தீர்வைக் காணலாம். முதலில் மக்களின் மனதை வெல்லவேண்டும். அதனை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஊடாகவோ அல்லது புலம்பெயர் மக்கள் ஊடாகவோ முன்னெடுக்க முடியாது. காரணம் அவர்களின் நிகழ்ச்சி நிரல் வேறாகும். மாறாக இந்த செயற்பாட்டை நேரடியாக தமிழ் மக்களுடன் ஈடுபாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே செய்ய முடியும்.
தமிழ் மக்களின் அபிமானத்தை நாம் ஏற்கவேண்டும். அதற்கான வேலைத்திட்டமே முன்னெடுக்கப்படுவது அவசியமாகின்றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்ததும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தார். அப்போதைய சூழலில் அது தேவையாக இருந்தது. எனினும் தமிழ் மக்கள் அதனால் திருப்தியடையவில்லை. எனவே நாம் அந்த மக்களின் அபிமானம் குறித்து பேசவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறி்த்து இவ்வாறு விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக பயணித்தால் முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைவார்கள். இவ்வாறு செயற்படுவதன் ஊடாக மட்டுமே நாம் அடுத்த கட்டம் நோக்கி பயணிக்க முடியும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal