நாட்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள புதிய சூழலில் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை விடயங்களும் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜெனிவா மனித உரிமை பேரவையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற பிரேரணையின் அடுத்த நிலை என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா? ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடருமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.
தற்போதைய சூழலில் அனைவரது கவனமும் ஜெனிவா மனித உரிமை பேரவைப் பக்கமே திரும்பியிருக்கிறது. காரணம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 43ஆவது கூட்டத் தொடரில் ஜெனிவா பிரேரணை தொடர்பாக இடம்பெறப்போகும் நடவடிக்கை என்ன? என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்துகொண்டிருக்கின்றனர்.
எது எப்படியிருப்பினும் இலங்கை தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 30/1 என்ற பிரேரணையை மாற்றியமைக்க வேண்டும் அல்லது திருத்தியமைக்க வேண்டும் என்பதில் அரசாங்கத் தரப்பினர் மிகவும் தெளிவாக இருக்கின்றமையை உணரமுடிகின்றது. காரணம் அந்தப் பிரேரணையை அவ்வாறே தொடர முடியாது என்றும் அது தொடர்பாக மாற்று நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதுமே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. இது தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் கேசரியுடன் தகவல் பகிர்ந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையை மீளாய்வு செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு எமது தீர்மானம் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைக்கப்படும். நாம் சரியான மீளாய்வை செய்து உரிய முடிவை எடுத்து அதனை அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.
ஜெனிவாவின் அவதானம்
இதன்படி பார்க்கும்போது ஜெனிவா பிரேரணையை அரசாங்கம் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அதனை மீளாய்வு செய்து மாற்று ஏற்பாட்டை முன்னெடுக்கப்போகின்றது என்பதும் தெளிவாகின்றது. எனவே அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இருக்கின்றது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக தமிழர் தரப்பு பிரதிநிதிகள் இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பது தொடர்பிலேயே தற்போது கேள்விகள் எழுகின்றன. மிக முக்கியமாக இதன் பின்னணியை சற்று ஆராய்ந்து பார்த்தால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்தே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் அவதானத்துடன் இருந்து வந்தது. எனினும் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முதல் தடவையாக 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையே கொண்டுவந்தது. அப்போதைய மனித உரிமைகள் அமைச்சராக இருந்த மஹிந்த சமரசிங்க தலைமையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டதுடன் அது நிறைவேற்றப்பட்டது. அதில் உள்ளக ரீதியில் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயப்பட்டு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழு
எனினும் 2012ஆம் ஆண்டு வரை எந்தவொரு நடவடிக்கையும் உரிய முறையில் இடம்பெறவில்லை. 2010ஆம் ஆண்டு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நிறுவப்பட்டது. அந்த ஆணைக்குழு இலங்கை முழுவதும் விஜயம் செய்து மக்களிடம் சாட்சியங்களை பெற்று 2010ஆம் ஆண்டு இறுதியில் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் பல முக்கிய பரிந்துரைகளும் இடம்பெற்றன. எனினும் அந்தப் பரிந்துரைகள் அக்காலத்தில் முழுமையாக அமுல்படுத்தப்படாததன் காரணமாக 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தினால் இலங்கை தொடர்பான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டன. எனினும் அவற்றை அப்போதைய அரசாங்கம் முற்றாக நிராகரித்தது.
30–1 பிரேரணை
இந்தப் பின்னணியிலேயே 2015ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் மீண்டும் ஜெனிவாவில் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அதில் 20 பரிந்துரைகள் அடங்கியிருந்தன. பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. அந்தப் பிரேரணைக்கு அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இலங்கை இணை அனுசரணை வழங்கியது.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தப் பிரேரணை அமுல்படுத்தப்படவேண்டுமென ஏற்பாடு கொண்டுவரப்பட்டது. எனினும் அது அவ்வாறு அமுல்படுத்தப்படாமையின் காரணமாக 2017ஆம் ஆண்டு குறித்த 30/1 என்ற பிரேரணையானது மீண்டும் 34/1 என்ற பெயரில் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. ஆனாலும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குறித்த நீடிக்கப்பட்ட பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படாததால் மீண்டும் 2021ஆம் ஆண்டு வரை 40/1 என்ற பெயரில் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா. ஆணையாளின் இலங்கை குறித்த அறிக்கை
இந்த நிலையிலேயே 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதுடன் அதில் இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஒரு இடைக்கால அறிக்கையையும் வெளியிட இருக்கிறார். இந்த நிலையிலேயே இலங்கையில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் புதிய அரசாங்கமானது குறித்த ஜெனிவா பிரேரணையை மீளாய்வு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.
காரணம் தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கும்போதே இந்த ஜெனிவா பிரேரணை கொண்டுவரப்பட்டது. அப்போது அதில் உள்ளடக்கப்பட்டிருந்த வெளிநாட்டு நீதிபதிகள் என்ற விடயத்தை அப்போதைய எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்ததுடன் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த மஹிந்த தரப்பினர் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்தப் பிரேரணையை மீளாய்வு செய்வதாக அறிவித்திருந்தனர். எனவே அடுத்த கட்டமாக புதிய அரசாங்கம் எவ்வாறு இந்தப் பிரேரணையை அணுகப்போகின்றது என்பது பிரதான கேள்வியாகும்.
அரசின் மாற்று திட்டம்
அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 43ஆவது கூட்டத் தொடர் அல்லது செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 44ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் ஜெனிவா பிரேரணை தொடர்பான தனது மாற்று யோசனையை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் குறிப்பாக சில திருத்தங்களை அரசாங்கம் கோரும் என ஊகிக்கப்படுகின்றது. முழுமையாக இந்த பிரேரணையை விட்டு விலகாமல் அதனை மீளாய்வு செய்து அதில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் மாற்று யோசனை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்படும்?
அவ்வாறெனில் எவ்வாறான திருத்தங்களை அரசாங்கம் செய்யப்போகின்றது என்பது அடுத்த கேள்வியாக எழுகிறது. இது தொடர்பில் தேசிய சமாதான செயலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா கேசரியுடன் தகவல் பகிர்கையில்;
அரசாங்கம் தன்னிச்சையாக ஜெனிவா பிரேரணையில் இருந்து விலகிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதில் உள்ள ஒரு சில விடயங்களை நீக்குமாறு அரசாங்கத்தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்படலாம். அதாவது திருத்தங்களை செய்யுமாறு அரசாங்கம் கோரும். ஆனால் அதிலிருந்து முழுமையாக விலகாது என்றே நான் நம்புகின்றேன். மிக முக்கியமாக அந்த பிரேரணையில் உள்ள வெளிநாட்டு நீதிபதிகள் என்ற விடயத்தை நீக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடும் சாத்தியம் உள்ளது. அத்துடன் அதிலுள்ள ஏனைய விடயங்களை ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. காரணம் இந்த அரசாங்கத்தில் நாம் சில மாற்றங்களை காண்கின்றோம். அவை ஆரோக்கியமான மாற்றங்களாக தெரிகின்றன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் 2015க்கு முன்னரை விட நல்ல மாற்றங்கள் தெரிகின்றன. அவர் வரையறுக்கப்பட்ட சுதந்திரம் தொடர்பில் சிந்திப்பதாக தெரிகின்றது. எம்மைப்பொறுத்தவரையில் அந்த வரையறுக்கப்பட்ட சுதந்திரத்திலும் அதிக இடம் இருப்பதாகவே கருதுகின்றோம். எனவே நாம் அந்த நல்ல விடயங்களை பாராட்ட வேண்டும். மிக முக்கியமாக ஜனாதிபதி நாட்டின் ஒழுக்கம் குறித்து பேசிவருகின்றார். எனவே ஆரோக்கியமான மாற்றம் நாட்டில் ஏற்படும் என்று நாங்களும் நம்புகின்றோம். அரசசார்பற்ற நிறுவனங்களான எம்மீது இதுவரை எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. அதனையே ஒரு சிறந்த மாற்றமாக நாம் பார்க்கிறோம் என்று சுட்டிக்காட்டினார்.
கலாநிதி ஜெகான் பெரேரா கடந்த அரசாங்க காலத்தில் அரசாங்க தூதுக்குழுவில் ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றியிருந்தவர். அந்தவகையில் தற்போது அவரின் மதிப்பீட்டின் பிரகாரம் அரசாங்கம் ஜெனிவா பிரேரணையிலிருந்து முழுமையாக விலகிவிடாது என்பதை வெளியிடுகிறார்.
என்ன திருத்தங்கள்?
பொதுவாக அவ்வாறு ஒரு தோற்றப்பாடு இருந்தபோதிலும் அரசாங்கம் எவ்வாறான திருத்தங்களை செய்யப்போகின்றது என்பது இங்கு மிக முக்கியமாகும். அதாவது அரசாங்கம் இந்தப் பிரேரணையிலிருந்து விலகாது என்பது பொதுவான பார்வையாக இருந்தபோதிலும் எவ்வாறான திருத்தங்கள் வரப்போகின்றன என்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்கின்றனர். இது தொடர்பில் இந்தப் பிரேரணையை முன்னின்று உருவாக்கிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்;
இந்த ஜெனிவா பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அரசாங்கத்தினால் விலகவும் முடியாது. அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதையே நாங்கள் பார்க்கின்றோம். அதனடிப்படையிலேயே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். எனவே அரசாங்கம் மீளாய்வு செய்து என்ன திட்டத்தை முன்வைக்கப்போகின்றது என்பதை
பார்த்துவிட்டு நாம் எமது அடுத்த கட்டத்தை ஆரம்பிப்போம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் சார்பில் செயற்படுவதற்காக மக்கள் ஆணையைக் கொண்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அடுத்து ஜெனிவா விடயத்தில் எவ்வாறான விடயங்களை எடுக்கப்போகின்றனர் என்பதும் மிகவும் முக்கியமானதாகும். எனவே அடுத்த கட்டமாக என்ன நடக்கப்போகின்றது என்பது துல்லியமான தெளிவைக் கொண்டிருக்கவில்லை என்கின்ற போதிலும் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் வரப்போகின்றது என்பதனை ஊகிக்க முடிகின்றது.
அங்கலாய்ப்பு
இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அந்த செயற்பாட்டுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. தமது உறவுகளை தொலைத்துவிட்டு அவர்களை மீட்டுத்தருமாறு போராடுகின்ற மக்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோருகின்ற மக்கள் என பல வழிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கின்றனர். ஜெனிவா பிரேரணைக்கு அமைவாகவே காணாமல்போனோர் அலுவலகமும் இழப்பீடு வழங்கும் அலுவலகமும் நிறுவப்பட்டுள்ளன. எனவே அரசாங்கம் ஜெனிவா பிரேரணையை மீளாய்வு செய்யுமாயின் அல்லது அதற்காக மாற்று ஏற்பாட்டை முன்வைக்குமாயின் இந்த காணாமல்போனோர் குறித்த அலுவலகம் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகத்தின் எதிர்காலம் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இந்த நிறுவனங்கள் ஊடாக இதுவரை எந்தவிதமான நீதியும் நிலைநாட்டப்படவில்லை. அத்துடன் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்படவும் இல்லை. எனினும் தற்போது ஜெனிவா பிரேரணை தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு அரசாங்கம் முன்வைக்கப்போகின்ற மாற்று திட்டத்தின் ஊடாகவே பதில் கிடைக்கப்போகின்றது. இந்த திட்டத்தின் ஊடாகவே எதனை திருத்துமாறு கோரும் என்பதை அரசாங்கத்தின் மீளாய்வு அறிக்கையின் ஊடாகவே நாம் அறிந்துகொள்ள முடியும்.
முழுமையாக அரசாங்கம் பிரேரணையிலிருந்து விலகுமா அல்லது திருத்தங்களை கோருமா என்பதும் இன்னும் தெளிவாக தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் இதில் அரசாங்கம் மாற்றுத்திட்டத்தை முன்வைத்து திருத்தத்தை கோரும் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் இன்னும் அதற்கு சற்று காலம் இருப்பதாகவே தெரிகின்றது. பெரும்பாலும் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் பின்னரே அரசாங்கம் இது வலுவான நகர்வை முன்னெடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்கவேண்டியது அனைவரதும் கடமையாகும். அந்த மக்களின் வலியைப் புரிந்து அவர்களுக்கு ஒரு நிரந்தர விடிவைப் பெற்றுக்கொடுக்க அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
மீளாய்வு செய்து முடிவை அறிவிப்போம்: வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
ஜெனிவா பிரேரணையை உரிய முறையில் மீளாய்வு செய்து அரசாங்கத்தின் தீர்மானத்தை ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு அனுப்புேவாம். சரியான மதிப்பீட்டை செய்து உரிய முடிவை எடுத்து அதனை ஜெனிவாவுக்கு அறிவிப்போம்
பிரேரணையிலிருந்து அரசு விலகாது: கலாநிதி ஜெகான் பெரேரா
அரசாங்கம் தன்னிச்சையாக ஜெனிவா பிரேரணையில் இருந்து விலகிவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதில் உள்ள ஒரு சில விடயங்களை நீக்குமாறு அரசாங்கத்தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப் படலாம். அதாவது திருத்தங்களை செய்யுமாறு அரசாங்கம் கோரும். ஆனால் அதிலிருந்து முழுமையாக விலகாது
பிரேரணையிலிருந்து விலக இடமளியோம்: எம்.ஏ.சுமந்திரன்
ஜெனிவா பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலகுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அரசாங்கத்தினால் விலகவும் முடியாது. அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதையே நாங்கள் பார்க்கின்றோம். அதனடிப் படையிலேயே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்
– ரொபட் அன்டனி –