சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. ஹொங்கொங்கில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனநாயக ஆதரவுச் சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஹொங்கொங் நெருக்கடியில் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்துவருகின்ற அணுகுமுறைக்கான அதிர்ச்சிதரும் வகையிலான ஒரு கண்டனமாக அமைந்தது ; மொத்தம் 18 மாவட்ட சபைகளில் 17 சபைகள் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. அந்த தேர்தலில் முன்னென்றுமில்லாத அளவுக்கு வாக்காளர்கள் பெருமளவில் ( 71 சதவீதத்துக்கும் அதிகம் ) கலந்தகொண்டனர்.
ஹொங்கொங்கை கையாளுதல்
சீனப்பெருநிலப்பரப்புக்கு ஆட்களை நாடுகடத்துவதற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலமொன்று அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இவ்வருட முற்பகுதியில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு அந்த பிராந்தியத்தின் உணர்வுகளை சோதித்துப் பார்ப்பதற்கான உண்மையான முதல் பரீட்சையாக அமைந்த உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இருக்கும் பெரும் ஆதரவை வெளிக்காட்டிநிற்கின்றன.நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ஹொங்கொங் தலைவி காறீ லாம் தனது அரசாங்கம் தேர்தல் முடிவுகளை மதிக்கும் என்றும் மக்களின் அபிப்பிராயங்களை பணிவான முறையில் செவிமடுத்து ஆழ்ந்து சிந்திக்கப்போவதாகவும் கூறினார்.
ஆனால், ஹொங்கொங் வீதி ஆர்ப்பாட்டங்களின் குரல்களை பெய்ஜிங் கவனத்திற்கு எடுக்குமா என்பது தெளிவாகத்தெரியவில்லை. ஜனாதிபதி சி ஜின்பிங் அவரது அணுகுமுறையை மாற்றுவதற்கு பெய்ஜிங்கில் எந்தவிதமான நெருக்குதலோ அல்லது ஊக்கமோ கொடுக்கப்படுவதாக இல்லை. பதிலாக, அவரது கடும்போக்கு அணுகுமுறை மேலும் வலுப்படக்கூடும் என்றே தெரிகிறது. இவ்வருட முற்பகுதியில் ஹொங்கொங்கில் நெருக்கடி தொடங்கியபோது அவர் எதிர்பார்த்திருக்கக்கூடியதை விடவும் வேகமாக அவரது தெரிவுகள் சுருங்குகின்றன.
மெய்நடப்பில் சீனாவின் சக்கரவர்த்தியாக சி ஜின்பிங் மாறுவதற்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சி் அரசியல் குழுவின் நிலையியல் குழுவில் ஹொங்கொங் விவகாரங்களுக்கான பொறுப்பை வகித்தவர் என்பதால், அவரைப் பொறுத்தவரை, இது குறிப்பாக பிரச்சினைக்குரிய ஒரு நிலைவரமேயாகும்.விட்டுக்கொடாத தனது கடுமையான நிலைப்பாட்டில் உள்ளார்ந்தமான ஒரு நம்பிக்கையை ஜனாதிபதி கொண்டிருக்கிறார் போலத்தெரிகிறது. அத்துடன் முன்னென்றுமில்லாத மட்டத்துக்கு மையப்படுத்தப்பட்ட அவர் கொண்டிருப்பதால், தன்னால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளுக்கான எந்தப் பழியையும் பகிர்ந்துகொள்வதற்கு அவருக்கு எவருமில்லை. எது எவ்வாறிருப்பினும், ஹொங்கொங் சீனாவின் ஒரு பகுதியே என்று கூறியிருக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி, ஹொங்கொங்கை சிக்கலுக்குள்ளாக்குவதற்கான எந்தவொரு முயற்சியுமோ அல்லது அதன் உறுதிப்பாட்டையும் சுபீட்சத்தையும் சேதப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியுமோ வெற்றிபெறப்போவதில்லை என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
உய்குர் பிரச்சினை
ஆனால், சீன அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் அமைப்புக்கு வெளிப்படுத்தப்பட்டமை கட்டுப்பாட்டை உறுதியாக நடைமுறைப்படுத்துவதில் சி ஜின்பிங்கின் ஆட்சிக்கு இருக்கின்ற இயலாமையை தெளிவாக வெளிக்காட்டுகிறது. வடமேற்கு சீன மாகாணமான சின்ஜியாங்கில் முஸ்லிம் உய்குர் இனத்தவர்களையும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களையும் பெரும் எண்ணிக்கையில் எவ்வாறு தடுத்துவைத்துக் கொடுமைப்படுத்துகிறது என்பதை வரிசைப்பட விபரிக்கின்றன அந்த ஆவணங்கள். பயங்கரவாத்தை ஒழிப்பதற்கான இலக்குடன் தொழிற்பயிற்சி பாடசாலைகளுக்கு பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்களை அனுப்பியதாக சீனா திரும்பத்திரும்ப கூறுவதை இது பொய்யாக்குகிறது. பெருந்தொகையானோர் தடுத்துவைக்கப்படுவதற்கு உதவும் கருவிகளாக உலகம்பூராவும் உள்ள சீனத்தூதரகங்களும் கொன்சுலேற் அலுவலகங்களும் செயற்படுகின்றன என்பதையும் ஆவணங்கள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.அத்தகைய விபரங்கள் வெளிக்கிளம்புகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் உலகளாவிய ரீதியில் சீனாவின் நம்பகத்தன்மையை பெரிதும் குறையச் செய்கிறது. வெளியி்ல் இது பெருளவுக்கு தெரியாமல் இருக்கக்கூடும், ஆனால், சீனாவின் உலகளாவிய மதிப்பு தாக்கத்துக்குள்ளாகிறது.
சி ஜின்பிங்கைப் பொறுத்தவரை, அதிகரித்துவருகின்ற இந்த உலகளாவிய எதிர்ப்பலை உள்நாட்டில் மிகப்பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஹொங்கொங்கில் அவருக்கு நல்ல தெரிவுகள் இல்லை.அவர் தனது கடும்போக்கு அணுகுமுறையை தொடருவாரேயானால், ஹொங்கொங்கில் களநிலைவரம் படுமோசமானதாகவே மாறும்.ஆனால், சலுகைகளை செய்வதும் கூட மிகவும் சாத்தியமான ஒரு தெரிவாக அவருக்கு இல்லை.ஏனென்றால், ஜனநாயக ஆதரவாளர்களின் கோரிக்கைகள் எந்தளவு தூரத்துக்கு போகக்கூடும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. நாடுகடத்தல் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுவிட்டாலும் கூட , ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. மெய்யான சர்வஜன வாக்குரிமை, பொலிசாரின் கொடுமைகள் தொடர்பான முறைப்பாடுகள் மீதான விசாரணை ஆகியவையும் அந்த கோரிக்கைகளில் உள்ளடங்குகின்றன. ஜனவரியில் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் ஹொங்கொங்கிலும் தாய்வானிலும் நிலைவரங்களை சீனா கையாளுவதற்கு குறுகிய காலகட்டமே இருக்கிறது.
கட்சி மீதான தாக்கம்
21 ஆம் நூற்றாண்டில் முக்கியமான ஒரு வல்லரசாக வெளிக்கிளம்பப்போகும் சீனாவை வழிநடத்தப்போகும் ஒரு தலைவர் என்று சி ஜின்பிங்கிற்கு உள்ள மதிப்பும் கூட சீனப்பெருநிலப்பரப்பின் மக்களைப் பொறுத்தவரை மங்கலாகக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. குழப்பநிலையை கையாள இயலாததாக தங்களது தலைமைத்துவம் இருக்கிறது என்று சாதாரண சீனர்கள் நம்புவார்களேயானால், சீனாவின் அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்த்துவைத்திருக்கும் நொய்மையான சமநிலையும் பாதிப்புக்குள்ளாகலாம்.
சி ஜின்பிங்கின் கொள்கைகள் கண்டனத்துக்குள்ளாகும்போது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பூசல்கள் கிளம்புவதற்கான ஒரு வாய்ப்பும் இருக்கிறது.அதியுயர் தலைவராக மாறுவதற்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவருக்கு பெருமளவு எதிரிகளைச் சம்பாதித்துக்கொடுத்திருக்கிறது. தனது எதிரிகளுடன் அவர் ஈவிரக்கமின்றி நடந்துகொண்டார். அவருக்கு பதிலடி கொடுக்க அந்த எதிரிகளில் சிலர் சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.சீனப் பொருளாதாரம் சிறப்பாக செயற்படவில்லை.
சி ஜின்பிங் பேரார்வத்துடன் முன்னெடுக்கும் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் மீதான உள்கண்டனங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வீறுமிக்க பொருளாதார தருக்கத்தையும் விட அவரின் தற்பெருமைக்காக முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆரவாரமான செயற்திட்டத்துக்கான செலவு தொடர்பிலும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.மற்றைய நாடுகளில் செல்வாக்கைச் செலுத்தும் நோக்கில் சீனா முன்னெடுக்கின்ற முனைப்பான நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்புகின்றது. இது தொடர்பில் அடிக்கடி புதிய தகவல்கள் வெளிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்குள் உளவாளியொருவரை வைத்திருப்பதற்கு சீனாவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் ஒன்று தொடர்பாக மிகவும் அண்மையில் அவுஸ்திரேலிய பத்திரிகைகள் அறிவித்தன. இதை ” பெரும் குழப்பத்தைத் தருகின்ற ” விவகாரம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் வர்ணித்திருக்கிறார்.அந்த விவகாரம் அந்நாட்டின் உளவு நிறுவனத்தினால் தற்போது விசாரணை செய்யப்பட்டு விருகின்றது. ஹொங்கொங்கிலும் தாய்வானிலும் சீனாவின் நடவடிக்கைகள் பற்றி தகவல்களை வழங்கியதையடுத்து ஒரு சீன உளவாள அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் நேரடியாகவே உளவு வேலைகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலைவரங்கள் எல்லாம் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உலகளாவிய சீனாவின் பெயருக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
சி ஜின்பிங் மீதும் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் நெருக்குதல்கள் அதிகரிக்கும் நிலையில்,பெய்ஜிங் அதன் சொந்த பிரச்சினைகள், தோல்விகளில் இருந்து கவனத்தைத் திருப்புவதற்காக உலகை குற்றஞ்சாட்டுவதில் இறங்கக்கூடிய ஆபத்துகள் இருக்கின்றன.பெய்ஜிங்கில் கிளம்புகின்ற பல நெருக்கடிகளில் இருந்து தோன்றக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை கையாளுவதற்கு தன்னை தயார்படுத்துகின்ற புதுடில்லி, சீனாவின் எந்தவொரு வீரசாகசத்துக்கு எதிராகவும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
– ஹர்ஷ் வி.பந்த்