இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்னரே எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் முழுமையாக விலகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனிவா விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா. பிரேரணையை மீளாய்வு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பாக கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு இடமளிக்கமாட்டோம். அவ்வாறு தன்னிச்சையாக பிரேரணையிலிருந்து அரசாங்கம் அவ்வாறு தன்னிச்சையாக விலக முடியாது.
இதேவேளை இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணையை மீளாய்வு செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு மீளாய்வு செய்த பின்னர் அரசாங்கம் எவ்வாறான முடிவை எடுக்கும் என்று நாங்கள் பார்ப்போம்.
மீளாய்வின் பின்னரான அரசாங்கத்தின் முடிவிலேயே நாம் அடுத்ததாக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தங்கியுள்ளன. எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும். அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். அந்த நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம்.
நாங்கள் சர்வதேசத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் எமது நகர்வை முன்னெடுப்போம். நீதியை பெற எவ்வாறு அழுத்தம் பிரயோகிக்க முடியுமோ அதனை நாங்கள் செய்வோம் என்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை குறித்த 30-1 என்ற பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதாவது 2017 ஆம் ஆண்டாகும்போது இந்த பிரேரணையை நிறைவேற்றவேண்டும் என்று அதில் கோரப்பட்டிருந்தது.
எனினும் அக்காலப்பகுதியில் பிரேரணை முழுமையாக நிறைவேறாததன் காரணமாக 2017 ஆம் ஆண்டு 30-1 என்ற பிரேரணை மேலும் இரண்டு வருடங்களுக்கு நிறைவேற்றப்பட்டது. அது 34-1 என்ற பிரேரணை ஊடாக முன்னெடுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டாகும்போது 30-1 என்ற பிரேரணையை முழுமையாக அமுலாக்கவேண்டும் என்று தெரிவித்தே 34-1 என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது.
எனினும் 2019 ஆம் ஆண்டுக்குள்ளும் 30-1 என்ற பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படாததன் காரணமாக தற்போது 40-1 என்ற பெயரில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30–1 என்ற பிரேரணையே தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த பிரேரணை தொடர்பாகவே முழுமையான மீளாய்வை செய்யப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal