ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு கிரெட்டா பதிலடி!

காலநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், தன் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு அவருக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் கிரெட்டா துன்பெர்க் இடம் பெற்றுள்ள அட்டைப் படத்தை ‘இளைஞர்களின் சக்தி’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டடிருந்தது.

இதனைத் தொடர்ந்து பலரும் கிரெட்டாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் கிரெட்டா டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை விமர்சிக்கும் வகையில், ”இது அபத்தமானது. கிரெட்டா தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாக செயலாற்ற வேண்டும். பின்னர் அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும்” என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.

— Donald J. Trump (@realDonaldTrump) December 12, 2019

 

இதனைத் தொடர்ந்து 16 வயதான சிறுமியை அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் கிண்டல் செய்வது நாகரிகமாக இல்லை என்று ட்ரம்ப்பை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். ஆனால், கிரெட்டாவோ ட்ரம்ப்புக்கு வேறுவிதமாக பதிலடி அளித்தார்.

கிரெட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள தன் விவரத்தில், “இளம்பருவப் பெண் தனது கோபத்தைக் கையாள்வது குறித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். தற்போது தனது நண்பருடன் பழைய படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்” என்று பதிவிட்டுள்ளார்.