மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, தனது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார் மணிரத்னம். இதற்காக இந்தியத் திரையுலகின் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை முதன்முறையாகப் படக்குழு அறிவித்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தை லைகா நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.
இவர்களில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகளோடு டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்கவுள்ளது. முதற்கட்டப் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு மேல் நடைபெறவுள்ளது. இதில் ஒருவர் பின் ஒருவராக இதர நடிகர்களும் இணைந்து கொள்ள உள்ளனர்.
இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார். வசனகர்த்தாவாக ஜெயமோகன் , இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாத், நடன வடிவமைப்பாளராக பிருந்தா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இதுவரை தமிழ்த் திரையுலகில் பலரும் எடுக்க முயன்ற ‘பொன்னியின் செல்வன்’ தோல்வியில் முடிவடைந்தது. தற்போது மணிரத்னம் மட்டுமே வெற்றிகரமாக ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்குச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal