நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 248/4

பெர்த்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில் லாபஸ்சாக்னேயின் சதத்தால் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு பிங்க் பால் டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடங்கியது. டேவிட் வார்னர் – ஜோ பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோ பேர்ன்ஸ் 9 ரன்னிலும், டேவிட் வார்னர் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சாக்னே உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த லாபஸ்சாக்னே நிதானமாக விளையாட ஸ்டீவ் ஸ்மித் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வடே 12 ரன்னில் வெளியேறினார்.

ஒரு பக்கம் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் லாபஸ்சாக்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த அவர், இந்த போட்டியிலும் சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்டில் சதம் விளாசினார்.

5-வது விக்கெட்டுக்கு லாபஸ்சாக்னே உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் அடித்துள்ளது.

லாபஸ்சாக்னே 110 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் வாக்னர் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.